ஜீவி திரைப்படம் பற்றி கதாசிரியர் பாபு தமிழ்


கடந்த காலங்களில் இருந்து 'கதை தான் ஹீரோ' என்பது மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு. மேலும் அவற்றைப் பின்பற்றுவது தான் மிகச்சிறந்த வெற்றிகளை தந்துள்ளது. புத்துணர்ச்சியுடன் பின்னிப்பிணைந்த இத்தகைய தனித்துவமான கதைகள் இந்த சீசனில் அதிகமாக இருக்கிறது. திரைக்கதை எழுத்தாளர் பாபு தமிழ் எழுதியிருக்கும் "ஜீவி" படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பின் மூலம் அவர் மிகவும் பிரபலமாகி விட்டார். வரும் ஜூன் 28, 2019 அன்று 'ஜீவி' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், திரைக்கதை எழுத்தாளர் பாபு தமிழ் தனது எழுத்து செயல்முறை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

அவர் கூறும்போது, “திரைப்பட இயக்குனர் ஆவதற்கு என்னால் முடிந்தவரை முயன்று பார்த்து விட்டு, சில தனிப்பட்ட கடமைகள் காரணமாக நான் எனது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், தனித்துவமான மற்றும் வித்தியாசமான ஸ்கிரிப்ட்கள் மட்டுமே வரவேற்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன். இறுதியில், நான் அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினேன். அப்படி உருவானது தான் “ஜீவி” கதை. ‘மனித இணைப்பு’ என்ற புதிய கான்செப்ட் என்னுள் மிகுந்த ஆர்வத்தை தூண்டியது. அதை இந்த படத்தின் முக்கிய முன்னுரையாக செயல்படுத்த முயற்சித்தேன். கதையை எழுதி முடித்த பிறகு, எனது நெருங்கிய நண்பரும், இயக்குனருமான வி.ஜே.கோபிநாத்தை அணுகினேன். அவர் ஒரு படம் இயக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி கொண்டிருந்தார். நானும் இயக்குனர் துறையில் நல்ல அனுபவத்தைப் பெற விரும்பினேன், எனவே அவருடன் இணைந்து பணிபுரிய நினைத்தேன். இரண்டு வருடங்களுக்கும் மேலாக பல நடிகர்களை சந்தித்த பிறகு, நாங்கள் இறுதியாக வெற்றியை சந்தித்தோம். ஸ்கிரிப்ட் அவருக்கு மிகவும் பிடித்திருந்த போதிலும், அவரது தந்தையும், தயாரிப்பாளருமான வெள்ளபாண்டியன் சாரை சமாதானப்படுத்த எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது, அவர் இறுதியாக இந்த கதைக்கு ஒப்புதல் அளித்தார்.

வி.ஜே.கோபிநாத் இயக்கிய இந்த திரைப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு எப்படி உணர்கிறீர்கள் என கேட்டபோது, “எனது ஸ்கிரிப்ட் திரையில் மிகச்சிறப்பாக வந்திருப்பதில் நான் முற்றிலும் மகிழ்ச்சியடைகிறேன், திருப்தி அடைகிறேன். பெரும்பாலான நேரங்களில், திரைக்கதைகளை அந்தந்த இயக்குனர்கள் நிறைய மாற்றங்களுக்கு உள்ளாக்குவார்கள், ஆனால் கோபிநாத் எனது படைப்புக்கு முழு மரியாதை அளித்து, எந்த மாற்றமும் செய்யாமல் அதை செயல்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டார். கதையை பார்வையாளர்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பியதால் திரைக்கதையை எளிதாக்கும் ஒரு கூட்டு முயற்சியில் நாங்கள் இருவரும் ஈடுபட்டோம். நாயகனாக நடித்த வெற்றி, மணி கதாபாத்திரத்தில் நடித்த கருணாகரன் உட்பட எல்லோரும் ஒரு அற்புதமான வேலையை செய்திருக்கிறார்கள்” என்றார்.

ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான ஜீவி படத்தை வி.ஜே.கோபிநாத் இயக்கியுள்ளார். வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன், வி. சுடலைக்கண் வெள்ளபாண்டியன், சுப்ரமணியன் வெள்ளபாண்டியன் தயாரித்திருக்கிறார்கள். வெற்றி, மோனிகா சின்னகோட்ளா, அஸ்வின் சந்திரசேகர், ரோகிணி, கருணாகரன், ரமா, மைம் கோபி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

0 comments:

Pageviews