Actress Sri Priyanka New Film Details





சாமி தவிர்க்க முடியாத இயக்குனர் -கவிப்பேரரசு வைரமுத்து

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கங்காரு படத்தை தயாரிப்பவர். ஏற்கெனவே 'அமைதிப்படை' பாகம் 2-ஐ தயாரித்த இவருக்கு இது 2 வதுபடம்.
" முதலில் படத்தின் பாடல்களைக் கேட்டேன். பிடித்திருந்தது. பிறகுதான் கதையையே கேட்டேன். பாடல்கள் கேட்காதிருந்தால் எடுத்திருப்பேனா தெரியாது. சாமி சமரசமில்லாமல் எடுப்பவர்.

பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்  கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல்களை எழுதியது எங்களுக்குப் பெரியபலம். கங்காரு' வைத் தொடர்ந்து 2 படங்களை தயாரிக்க உள்ளேன்.''என்கிறார்.

இயக்குநர் சாமி

உயிர்' 'மிருகம்' 'சிந்து சமவெளி' போன்ற படங்களின் மூலம் தன்னை அழுத்தமாக அடையாளப் படுத்திக் கொண்டவர் சாமி. அவர் இயக்கும் அடுத்த படம்தான் 'கங்காரு' 

படம்பற்றிக் கூறும் போது. "கங்காரு எப்படி தன் குட்டியை மனசோடும் உடம்போடும் அது தானே இரைதேடும்வரை சுமந்து திரிகிறதோ அப்படி தன் தங்கையை சுமக்கும் ஒரு அண்ணனின் கதைதான் கங்காரு.. அண்ணன் தங்கை பாசத்துக்கு இதுவரைக்கும் 'பாசமலர்' படத்தைத்தான் உதாரணம் சொல்கிறார்கள். இனி 'கங்காருவைக் கூறுவார்கள்.இது ஒரு நவீன பாசமலர்' என்கிறார். 

''இசையமைப்பாளர் புதிதாகத் தேடிய போது ஒரு நண்பர் மூலம் ஸ்ரீநிவாஸ் அறிமுகமானார். அவரை ஒப்பந்தம் செய்யும் முன்பே மெட்டு போட்டுக்காட்டி என்னைக் கவர்ந்தார். ஒப்பந்தம் செய்து விட்டோம். வைரமுத்து அவர்களை அணுக எனக்கு பயமாக இருந்தது. அவருக்கு சம்பளம் எப்படியோ என தயக்கம். ஸ்ரீநிவாஸ் மூலம்தான் அவரிடம் போனோம். எங்கள் பட்ஜெட் நிலையறிந்து  எழுதிக் கொடுத்தார்.. தன் 5 பாடல்கள் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்துவிட்டார். படத்தின் மீதும் என்மீதும் அக்கறையுடன் ஆலோசனைகள் கூறி வளர்ச்சிக்கு உதவி வருகிறார். இப்படத்தின்மீது மிகவும் ஆர்வமாக இருக்கிறார். பாடல்கள் வெற்றி பெற்று விட்டன. அவருக்கு இன்னொரு தேசியவிருது நிச்சயம்.

இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜுனாவை நான் ஏற்கெனவே 'மிருகம்' படத்துக்காக பார்த்திருந்தேன். ஆனால் ஆதியை நடிக்க வைத்தேன். இந்தக் கதைக்குப் பொருத்தமாகத் தோன்றியதால் அர்ஜுனாவை நடிக்க வைத்துள்ளேன். அதேபோல தங்கையாக வரும் ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர். சுந்தர்ராஜன் எல்லாரையுமே கதைக்காக தேர்வு செய்து நடிக்க வைத்தேன்.நடிகர்களுக்காக நான் கதை செய்ய மாட்டேன். " என்கிறார்.

நாயகன் அர்ஜுனா 

சிறுவயது முதலே கலையார்வம் பள்ளி, கல்லூரிகளில் நாடகம், நடனம் என பங்கேற்ற அர்ஜுனாவுக்கு சினிமா மீது காதல். முதலில் முகம் காட்டியபடம் 'விண்ணைத் தாண்டி வருவாயா' அதில் த்ரிஷாவின் அண்ணனாக வருவார்.

'கங்காரு' படம் பற்றி அர்ஜுனா பேசும் போது "முதலில் இயக்குநர் சாமி படத்தில் நடிக்கப் போகும் போது அவர் கோபக்காரர் என்று பயமாக இருந்தது.  ஆனால் பழகிய போது அவர் ஒரு குழந்தை வடிவிலான படைப்பாளி என்று தெரிந்தது இதில் என்பெயர் முருகேசன். ஆனாலும் என்னை எல்லாரும் கங்காரு என்றுதான் கூப்பிடுவார்கள் படத்தில் பாடல் காட்சிகளில் பார்த்து விட்டு நான்தான் அது என்று நம்ப மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு என்னை மாற்றியிருக்கிறார் இயக்குநர். இதில் என் தோற்றம், நடை, உடை, பாவனை ஏன் ஒவ்வொரு அசைவையும் செதுக்கியவர் அவர்தான். இதில் எனக்கு ஒரு அசாதாரணமான பாத்திரம் .நிறைய எதிர்பார்த்து நம்பிக்கையில் இருக்கிறேன். அதனால் வந்த வாய்ப்புகளைக் கூட மறுத்து வருகிறேன். கங்காரு வரட்டும் " என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

நாயகி வர்ஷா அஸ்வதி 

இவருக்கு இது ஆறாவதுபடம் 'நாகராஜசோழன்' 'நீர்ப்பறவை','பனிவிழும் மலர்வனம்',  'அதிதி' க்குப்பிறகு 'கங்காரு' 

"கதை கேட்டேன் நல்ல குடும்பக்கதை.இயக்குநர் சாமி என்றதும் ஏதேதோ சொன்னார்கள்.  நடிக்கப் போன போதுதான் புரிந்தது அவரது திறமை. அவர் கோபக்காரர்தான். ஆனால் படைப்பு நன்றாக நேர்த்தியாக வரவேண்டும் என்றிருப்பவர். சமரசமே ஆக மாட்டார். தாமதம் ஆனாலும் தரம் முக்கியம் என்கிற உறுதி அவருக்குண்டு 
கொடைக்கானலில்தான் முழுப் படமும் நடித்தேன். குளிர், மழையில் கஷ்டப்பட்டு நடித்தேன் இது அண்ணன் தங்கைப் பாசத்தை அழகாக ஆழமாக சொல்கிற கதை. படத்தை எதிர் பார்த்து இருக்கிறேன். எனவே புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ள வில்லை. "என்கிறார்.

படப்பிடிப்பிடங்கள்!

படத்தின் பெரும்பகுதி கொடைக்கானலில் படமாகியுள்ளது. கொடைக்கானல் என்பது படத்தில் ஓர் ஊராக வரவில்லை. ஓர் உயிருள்ள பாத்திரமாக வருகிறது. 

கேமரா சுழன்று 360டிகிரி கோணத்தில் கொடைக்கானல் முழுதும் தெரியும்படிதான் ஆரம்ப காட்சிகள் இருக்கும். இந்த மலைப்பகுதியின் பின்னணி படத்துக்கு புது நிறமும், தரமும் காட்டும். இதுவரை 45 நாட்கள் படமாகியுள்ளது இன்னும் 12 நாட்களே மீதமுள்ளன. பழனியில் 2 நாட்களும் கொடைக்கானலில் 10 நாட்களும் எடுக்கப் புறப்பட்டு விட்டார்கள்.

படப்பிடிப்பு நடந்த போது சரியான மழையும் குளிரும் வாட்டியதாம். திடீர் திடீர் மழையும் பனி மூட்டமும் என இயற்கை விளையாடிய போதும் முயற்சியைக் கைவிடாமல் படப்பதிவு செய்து வந்துள்ளனர்.

 கவிப்பேரரசு வைரமுத்து 

எப்படிப்பட்ட படத்திலும் தன் முத்திரையைப் பதிப்பவர் வைரமுத்து. இப்படத்திலும் ஐந்து பாடல்களை பஞ்சரத்ன கீர்த்தனைகள் போல பிரமாதமாக எழுதியுள்ளார். 

காதல், பாசம், தத்துவம் என்று பலவித நிறங்களில் பாடல்கள். 
"பேஞ்சாக்கா மழைத்துளியோ
மண்ணோடு – நான்
வாழ்ந்தாக்கா வாழுவது
ஒன்னோடு"பாடல் காலர் ட்யூனில் கலக்குகிறது.

"கருவழியா வந்த எதுவும்
நிரந்தரமில்ல
கட்டையில போறவரையில் 
சுதந்திரம் இல்ல
தாயும் கொஞ்ச காலம்
தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் – வந்த
உறவும் கொஞ்ச காலம்
நெனச்சு நெனச்சுப் பாத்தாக்கா
நீயும் கொஞ்ச காலம் – ஒன்
நெனப்பும் கொஞ்ச காலம் 'பாடல் தத்துவமுத்து.

'ஒழக்கு நிலவே ஆராரோ
 ஒனக்கு நானே தாயாரோ
அழுக்குத் தங்கமே ஆராரோ
எனக்கு நீதான் தாயாரோ
எட்டுவச்ச நெலவே கண்ணுறங்கு
கொட்டிவச்ச நட்சத்திரம் கண்ணுறங்கு் 'பாடல்
பாசப் பூங்கொத்து.

படம் பற்றிக் கவிப்பேரரசு  கூறிய போது, "சாமி தவிர்க்க முடியாத இயக்குநர். அண்ணன் தங்கை பாசத்தை அருமையாக எடுத்துள்ளார். இப்படம் சாமியின் பழைய பிம்பத்தை உடைக்கும்.''என்றார். 

இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ்

''தமிழில் இசையமைப்பது என்றதும் வைரமுத்து அவர்களின் பாடல்கள்தான் என்று முடிவுசெய்து வைத்திருந்தேன். இந்த பாடல்கள் வெற்றி பெற்றதற்கும் பேசப்படுவதற்கும் அவரது வரிகள்தான் காரணம். அவர் என் முதல் தமிழ்ப்படத்துக்கு வரிகளை மட்டுமல்ல வாழ்த்து ஆசிகளையும் வழங்கியுள்ளார்.''என்கிறார்.

0 comments:

Pageviews