இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது.


துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான 'ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படம் - உண்மையான உணர்ச்சிகள் - அதிரடியான சண்டைக் காட்சிகள்-  புதிரான மர்மம்-  ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது. 


கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் தற்போது அவரது ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை மேலும் விவரிக்கும் வகையில்... ஒரு ஆற்றல் பெற்ற பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். 


நகரின் சேரி பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டம்.. படத்தின் கடினமான உலகத்தை நிலை நிறுத்த தொடங்கி, பின்னர் தபுவை ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில் அறிமுகப்படுத்துகிறது. அவர் ஒரு காரில் வந்து சிகரெட்டை பற்ற வைத்து.. உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார். ஒரு உள்ளூர் ரவுடிக்கு அவர் விடுத்த கடுமையான எச்சரிக்கையும்... அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த 'பளார்' என்ற அறையும்... கௌரி ஹெக்டே அதிகாரத்தைத் தேடுபவர் அல்ல... அதை கோருபவள் என்பதை உடனடியாக பிரதிபலிக்கிறது. 


அந்த கதாபாத்திரம் - ஒரு சக்தி வாய்ந்த அதிகாரியாக மட்டுமல்லாமல் முற்றிலும் அச்சம் ஏதும் இல்லாத மற்றும் சமரசம் ஏதும் இல்லாத ஒருவராகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். கௌரி ஹெக்டே - தெருக்களின் நடுவில் விரோத மனப்பான்மை கொண்ட உள்ளூர் மக்களையும், ரவுடிகளையும் எதிர்கொள்கிறார். அவர்களை உடல் ரீதியாக தாக்கி சூழலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஒரு மரத்தடியை பயன்படுத்துகிறார். காவல்துறையினரும், கூட்டமும் அவரை சூழ்ந்து இருந்தாலும்... அவர் சற்றும் கலங்காமல் தனது அதிகாரத்தை எதிர்ப்பவர்களை ஆக்ரோஷமாக அடக்குகிறார். 


அந்தக் காட்சி முழுவதும் மின்னும் 'ஒரு அச்சமற்ற பெண்', 'சக்தி வாய்ந்த அதிகாரி', 'இரக்கமற்றவர் ', 'கருணையற்றவர்', 'துறையின் பிசாசு' போன்ற வார்த்தைகள் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை தெளிவாக உணர்த்துகின்றன. இறுதியில் அவர் தன்னை முழு அதிகாரத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது தான் இதன் உச்சக்கட்டம் வெளிப்படுகிறது. 'கௌரி ஹெக்டே, துணை ஆணையர், வருமான வரித்துறை' எனும் அந்த அறிமுகம்... ஒரு மிகச்சிறந்த பூரி ஜெகன்நாத் பிரத்யேகமாக வடிவமைக்கும் கதாபாத்திரத்திற்கே உரிய வீரியத்தையும், கம்பீரத்தையும் கொண்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் விஜய் சேதுபதியின் சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 


தபு கம்பீரமாகவும், மிடுக்காகவும் தோன்றுகிறார். தனது திரை தோற்றத்தில் அந்த கதாபாத்திரத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்கிறார். அவர் கௌரி ஹெக்டே கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தையும், அச்சுறுத்தலையும் கொண்டு வருகிறார். இது அந்த கதாபாத்திரத்தை உடனடியாக காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக மாற்றுகிறது. பூரி ஜெகன்நாத் - மறக்க முடியாத கதாபாத்திரங்களை வடிவமைத்து அவற்றை தாக்கத்தை ஏற்படுத்து வகையில் அறிமுகப்படுத்துவதில் எப்போதுமே ஒரு தனித்துவமான திறமை கொண்டவர். மேலும் கௌரி ஹெக்டே-  அவரின் மற்றொரு வசீகரிக்கும் புதிய வரவாக தோன்றுகிறார். 


இந்த படத்திற்கான நடிகர் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சம்யுக்தா நாயகியாக நடிக்க, துனியா விஜய் வில்லனாக நடிக்கிறார். பிரம்ஹாஜீ மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.‌


இப்படத்தின் இருண்ட மற்றும் யதார்த்தமான கதைக் களத்திற்கு ( Dark & Gritty World) தொழில்நுட்பக் குழுவினர் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர்.  சாம் கே. நாயுடு ஒளிப்பதிவையும், ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைப்பையும், சந்தோஷ் நூஜில்லா படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர். 


'ஸ்லம்டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர், ஜே பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜே பி நாராயண ராவ் கொண்ட்ரோல்லாவுடன் இணைந்து தயாரிக்கின்றனர். 


டைட்டில் லுக்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்-  டீசர் - தற்போது வெளியாகி கவனம் ஈர்க்கக்கூடிய கிளிம்ப்ஸ்- ஆகியவற்றின் மூலம் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் உலகம் குறித்த ஆர்வத்தை இவை மேலும் தூண்டுகிறது. 


இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் இந்தியா முழுவதும் பான் இந்திய திரைப்படமாக வெளியாக தயாராகி வருகிறது. 


நடிகர்கள் :


விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்,பிரம்ஹாஜீ,விடிவி கணேஷ் .


தொழில்நுட்பக் குழு : 


எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்நாத் 

தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத் - சார்மி கவுர் & ஜே பி நாராயணன் ராவ் கொண்ட்ரோல்லா 

வழங்குபவர் : சார்மி கவுர் 

தயாரிப்பு நிறுவனம்: பூரி கனெக்ட்ஸ் 

CEO :  விஷ்ணு ரெட்டி 

இசை:  ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்

ஒளிப்பதிவு : சாம் கே. நாயுடு 

படத்தொகுப்பு : சந்தோஷ் நூஜில்லா 

 VFX : அனில் பாடூரி 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா

 

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியலை தயாரித்து வழங்கும் குழுவின் உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். 


இதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய், மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், இந்து அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார். 


இது குறித்து மேலும் பேசிய அவர், "இதை ஒரு பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து பணியாற்றுவேன். இறைவனுக்கு பணி செய்ய இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.


ஒரு பாமரனாக திருக்கோயில்களில் பாடி வரும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே இறைவனுக்கும், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல முருகன் அருளால் எப்பொழுதும் எல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டும்," என்றார். 

 

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து, உரிய பெயர்ப்பட்டியலை தயாரித்து வழங்கும் குழுவின் உறுப்பினராக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் நிர்வாக இயக்குநர் திருமதி. அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த நியமனத்தை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் ஐ ஏ எஸ் உள்ளிட்டோருக்கு அர்ச்சனா கல்பாத்தி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.


இது குறித்து பேசிய அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது: “இந்த நியமனத்தை எனக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான பொறுப்பாகவே கருதுகிறேன். தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் நமது பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வின் முக்கியமான அடையாளங்களாக விளங்குகின்றன. அவற்றின் சிறப்புக்கு பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.


இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றுவேன். இறைவனின் அருளாலும், அனைவரின் ஒத்துழைப்பாலும் இந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன்," என்றார். 


திரையரங்குகள், திரைப்பட விநியோகம், தயாரிப்பு என கடந்த 16 வருடங்களாக ஏ ஜி எஸ் குழும நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வழிகாட்டி வரும் அர்ச்சனா கல்பாத்தி. ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கோயில்களுக்கும், அறப்பணிகளுக்கும் இவர் சேவையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அவரது கல்வித் தகுதிகள்: கணினி அறிவியல் பொறியியல் (B.E. Computer Science), கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்; கணினி அறிவியல் முதுகலை (M.S. Computer Science), நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகம், பஃபலோ; நிதி மேலாண்மை முதுகலை (M.S. Wealth Management), எஸ்.எம்.யூ., ஸ்விஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைனான்ஸ், யேல்.


~ கங்கனா ரணாவத், கிரிஜா ஓக் மற்றும் ஸ்மிதா தாம்பே நடித்துள்ள பாரத் பாக்ய விதாதா, தியாகமும் வீரமும் நிறைந்த ஊக்கமூட்டும் கதையாக அமைந்துள்ளது. இந்த சுதந்திர தினத்தில் தவறாமல் பார்க்க வேண்டிய படைப்பு ~

தேசியம், ஆகஸ்ட் 7, 2026: இந்த சுதந்திர தினத்தில், தைரியம், மனவலிமை மற்றும் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 14 அன்று பாரத் பாக்ய விதாதா திரைப்படத்தின் பிரத்யேக டிஜிட்டல் பிரீமியரை இந்தி ZEE5 பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு துணிச்சலான, ஊக்கமூட்டும் மற்றும் கலாச்சார ரீதியாக ஒத்திசைவான கதைகளை வழங்கும் தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, நாட்டை வரையறுக்கும் மதிப்புகளை பிரதிபலிக்கும் அசாதாரண வீரச் செயல்களை வெளிப்படுத்திய பெயரிடப்படாத நாயகர்களின் மீது இந்த தளம் ஒளி பாய்ச்சுகிறது. மனோஜ் தபாடியா எழுதி இயக்கியுள்ள இப்படம், PEN Studios, Manikarnika Films மற்றும் Paramhans Creations ஆகிய நிறுவனங்களால், Eunoia Films LLP மற்றும் Floating Rocks Entertainment Pvt Ltd நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. பாரத் பாக்ய விதாதா திரைப்படத்தில் கங்கனா ரணாவத், கிரிஜா ஓக், ஸ்மிதா தாம்பே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முக்கிய விவரங்கள்:

தலைப்பு: பாரத் பாக்ய விதாதா
மொழி: இந்தி
வகை: த்ரில்லர் / டிராமா
பிரீமியர்: ஆகஸ்ட் 14, 2026
எழுத்தாளர் - இயக்குநர்: மனோஜ் தபாடியா
தயாரிப்பு: PEN Studios, Manikarnika Films மற்றும் Paramhans Creations, Eunoia Films LLP மற்றும் Floating Rocks Entertainment Pvt Ltd நிறுவனங்களுடன் இணைந்து
நடிகர்கள்: கங்கனா ரணாவத், கிரிஜா ஓக், ஸ்மிதா தாம்பே மற்றும் பலர்
ஸ்ட்ரீமிங்: இந்தி ZEE5

பாரத் பாக்ய விதாதா எதைப் பற்றியது?

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் பேரழிவு பின்னணியில் அமைந்துள்ள பாரத் பாக்ய விதாதா, இந்திய வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றை மீண்டும் நினைவூட்டுகிறது. எண்ணற்ற உயிர்களை காப்பாற்றிய பெயரிடப்படாத நாயகர்களின் தைரியத்தையும் தன்னலமற்ற சேவையையும் முன்னிறுத்துகிறது. மும்பையின் காமா மற்றும் ஆல்ப்லெஸ் மருத்துவமனையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், செவிலியர்கள், வார்டு பாய்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் அசாதாரண செயல்பாடுகளைப் பின்தொடர்கிறது. அவர்கள் பராமரித்த நோயாளிகளுக்கான முதல் பாதுகாப்பு வரியாக மாறினர்.

தாக்குதலாளர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தபோது, சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழ்நிலைகளில் உயர்ந்து நின்றனர். தங்களை பாதுகாத்துக்கொள்ள மிகக் குறைந்த வசதிகள் இருந்தபோதிலும், தங்கள் கடமை உணர்வை தளர்த்தாமல், தங்கள் உயிர்களை விட நோயாளிகளின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்தனர். அவர்களின் அசாதாரண தைரியம் மற்றும் தன்னலமற்ற செயல்கள் வழியாக, இந்த திரைப்படம் தியாகம், கருணை மற்றும் மனவலிமை போன்ற கருப்பொருட்களை ஆராய்கிறது. கற்பனைக்கெட்டாத சவால்களை எதிர்கொள்ளும் மனித மனத்தின் வலிமையை கொண்டாடுகிறது.

ஏன் பாரத் பாக்ய விதாதா உங்கள் வாட்ச் லிஸ்டில் இருக்க வேண்டும்?

● உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டது: இந்தியாவின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றை, அசாதாரண தைரியம் வெளிப்படுத்திய மருத்துவப் பணியாளர்களின் பார்வையில் சொல்லும் பரபரப்பான கதை.

● அன்றாட நாயகர்களுக்கான சக்திவாய்ந்த அஞ்சலி: செய்தித் தலைப்புகளில் பெரிதாக இடம்பெறாத செவிலியர்கள், வார்டு பாய்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் வீரத்தை கொண்டாடுகிறது.

● புதிய தோற்றத்தில் கங்கனா ரணாவத்: கிரிஜா ஓக் மற்றும் ஸ்மிதா தாம்பே ஆகியோருடன் இணைந்து உணர்ச்சிமிக்க கதையில் நட்சத்திர அணியை வழிநடத்துகிறார்.

● பயத்தை விட தைரியத்தின் கதை: வெறும் த்ரில்லர் அல்ல; மனவலிமை, தியாகம் மற்றும் நிலைத்த மனித உணர்வின் நினைவூட்டல்.

● இந்த சுதந்திர தினத்திற்கான சிறந்த பார்வை அனுபவம்.

அதிகாரப்பூர்வ கருத்துகள்:

இந்தி ZEE5 வணிகத் தலைவர் மற்றும் &TV தலைமை சேனல் அதிகாரி காவேரி தாஸ் கூறுகையில், “ஒவ்வொரு சக்திவாய்ந்த கதையின் மையத்திலும், அதை வித்தியாசமாகச் சொல்லும் தைரியம் உள்ளது. பாரத் பாக்ய விதாதா அந்த உணர்வை பிரதிபலிக்கிறது. இது இந்தி ZEE5-இன் துணிச்சலான மற்றும் அர்த்தமுள்ள கதைகளின் பட்டியலில் முக்கியமான சேர்க்கையாகும். 26/11 சம்பவங்கள் பல கோணங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், இந்த திரைப்படம் காமா மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அசாதாரண தைரியத்தை வெளிச்சம் போடுகிறது. அவர்கள் தங்களை விட மனிதநேயத்தையும், பயத்தை விட கடமையையும் உயர்வாகக் கருதினர். அவர்களின் அமைதியான வீரச் செயல்கள் மனவலிமை, கருணை மற்றும் தன்னலமற்ற சேவையின் வலுவான சான்றாக உள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஊக்கமூட்டும் கதையை இந்தி ZEE5-இல் பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். உண்மையான வீரத் தன்மை போர்க்களங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் அன்றாட செயல்களிலும் இருப்பதை நினைவூட்டிய பெயரிடப்படாத நாயகர்களை கௌரவிக்கிறோம்” என்றார்.

நடிகையும் தயாரிப்பாளருமான கங்கனா ரணாவத் கூறுகையில், “சில கதைகள் சொல்லப்பட வேண்டியவை என்பதால் உங்களைத் தேர்ந்தெடுக்கின்றன. பாரத் பாக்ய விதாதா அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். நடிகையாகவும் தயாரிப்பாளராகவும், 26/11 தாக்குதலின்போது பயங்கரவாதத்திற்கும் மனிதநேயத்திற்கும் இடையில் அச்சமின்றி நின்ற சுகாதாரப் பணியாளர்களின் சொல்லப்படாத கதைகளை உயிர்ப்பிப்பது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர்களின் தைரியம் அங்கீகாரத்தால் இயக்கப்படவில்லை; அசைக்க முடியாத கடமை உணர்வும் கருணையும் தான் அதற்கு காரணம். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகிறது என்பது அதன் செய்தியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. இந்தியாவின் ஆன்மா, எல்லைப் பாதுகாப்பில் நிற்பவர்களால் மட்டுமல்ல, நெருக்கடியான தருணங்களில் அசாதாரண சவால்களை எதிர்கொள்ளும் சாதாரண குடிமக்களாலும் வரையறுக்கப்படுகிறது என்பதை இது நினைவூட்டுகிறது. இந்தி ZEE5-இல் இந்த திரைப்படத்தை பார்க்கும் பார்வையாளர்கள், அவர்களின் தியாகங்களுடன் இணைந்து, இந்த கதைக்கு ஊக்கமளித்த எண்ணற்ற உண்மையான நாயகர்களை நினைவுகூருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

எழுத்தாளர் - இயக்குநர் மனோஜ் தபாடியா கூறுகையில், “ஆரம்பத்திலிருந்தே, 26/11 கதையை இதுவரை ஆராயப்படாத ஒரு கோணத்தில் சொல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகளின் வீரத்தை நினைவுகூரும் நிலையில், அந்த இரவு காமா மருத்துவமனைக்குள் சம அளவிலான அசாதாரண வீரச் செயல்களும் நடைபெற்றன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், தங்களைச் சுற்றியிருந்த பெரும் ஆபத்துகளுக்கு மத்தியிலும் நோயாளிகளை தொடர்ந்து பராமரித்தனர். பாரத் பாக்ய விதாதா அவர்கள் காட்டிய மனவலிமை, மனிதநேயம் மற்றும் அமைதியான வீரத்திற்கான எங்கள் அஞ்சலியாகும். இந்த சுதந்திர தினத்தில் இந்தி ZEE5 வழியாக இந்த திரைப்படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

பாரத் பாக்ய விதாதா திரைப்படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று இந்தி ZEE5-இல் பிரத்யேகமாக பிரீமியர் ஆகிறது.

அகில் அக்கினேனியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக உருவெடுத்து, திரையரங்குகளில் மாபெரும் வெற்றிப் பயணம் கண்டுள்ள ‘லெனின்’ திரைப்படம், தற்போது அதன் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் டிஜிட்டல் பிரீமியருக்குத் தயாராகி வருகிறது. இந்த அதிரடி நிறைந்த கிராமப்புற பொழுதுபோக்கு திரைப்படம் ஆகஸ்ட் 7 முதல் தெலுங்கு ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்குகிறது. மேலும், தமிழிலும் கிடைக்கவுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டின் மிகப்பெரிய தெலுங்கு வெற்றிப் படங்களில் ஒன்றை, பார்வையாளர்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

முரளி கிஷோர் அப்பூரு இயக்கியுள்ள ‘லெனின்’ திரைப்படத்தில், அகில் அக்கினேனி தனது திரை வாழ்க்கையை வரையறுக்கும் வகையிலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸே இணைந்து நடித்துள்ளார். மேலும், சிவாஜி, சுனில், ஈஸ்வரி ராவ், பிரம்மாஜி, கெட்டப் ஸ்ரீனு, ராம்கி, பிரமோத் பஞ்சு மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் சூர்யதேவரா நாக வம்சி ஆகியோர் மனம் எண்டர்பிரைசஸ் மற்றும் சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்களின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமன் எஸ். இசையமைத்துள்ள இப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவும், நவீன் நூலி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள ‘லெனின்’, அச்சமற்ற இளைஞன் ஒருவரின் கதையைச் சொல்கிறது. அவரது தனிப்பட்ட பயணம், பின்னர் அநீதிக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக மாறுகிறது. ஒரு உணர்ச்சிப்பூர்வமான காதல் கதையாகத் தொடங்கும் இந்த பயணம், குடும்ப பந்தங்கள், அதிகாரப் போட்டிகள் மற்றும் தன் மக்களை பாதுகாக்கும் உறுதியை மையமாகக் கொண்ட தீவிரமான மோதலாக விரிகிறது. அதிரடி, உணர்ச்சி, காதல், நகைச்சுவை மற்றும் வலுவான வணிகத் திரைப்பட அம்சங்களை ஒருங்கிணைக்கும் இப்படம், அனைத்து வயதினரையும் கவரும் முழுமையான திரை அனுபவத்தை வழங்குகிறது.

திரையரங்குகளில் வெளியானவுடன், இப்படம் உடனடியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. அகில் அக்கினேனியின் வலிமையான திரைநிலை, முரளி கிஷோர் அப்பூருவின் மண்ணின் மணம் வீசும் கதை சொல்லல், தமன் எஸ். வழங்கிய சக்திவாய்ந்த பின்னணி இசை மற்றும் உணர்ச்சிமிக்க கதை அமைப்பு ஆகியவை பரவலான பாராட்டைப் பெற்றன. மறக்க முடியாத உயர்வுகள், பரபரப்பான அதிரடி காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் உணர்ச்சிமிக்க தருணங்களால் நிரம்பிய ‘லெனின்’, அகில் அக்கினேனியின் அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்து, இந்த ஆண்டின் முக்கியமான தெலுங்கு பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டது.

பிளாக்பஸ்டர் திரைப்படங்கள், பாராட்டுப் பெற்ற ஒரிஜினல் படைப்புகள் மற்றும் பிராந்திய மக்களின் விருப்பமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களால் நிரம்பிய நூலகத்துடன், ZEE5 பல மொழிகளில் தரமான உள்ளடக்கங்களை வழங்கும் முன்னணி தளங்களில் ஒன்றாக தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்கள், அதிரடி நாடகங்கள் முதல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ஒரிஜினல்கள் வரை, பல்வேறு வகையான கதைகளை தொடர்ந்து பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது. இதன் மூலம், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பார்வையாளர்களை சென்றடைகின்றன. தமிழிலும் கிடைக்கும் ‘லெனின்’ திரைப்படத்தின் வருகை, ZEE5-இன் வலுவான உள்ளடக்க பட்டியலை மேலும் செழுமையாக்குகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டு பார்வையாளர்களும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தளத்தில் அனுபவிக்கும் மேலும் ஒரு வாய்ப்பைப் பெறுகின்றனர்.

“அய்யாகாரு” உங்கள் திரைகளுக்கு வரத் தயாராக இருக்கிறார்!

ஆகஸ்ட் 7 முதல் தெலுங்கு ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும் ‘லெனின்’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை தவறவிடாதீர்கள். இது தமிழிலும் கிடைக்கும்.

 

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் உருவான 'வதந்தி' சீசன் 2 (Vadhandhi Season 2: The Mystery of Mani) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


நெடுஞ்சாலை திறப்பு விழாவின் போது சில மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த கொலையைச் செய்தது யார் என்ற விசாரணை தொடங்குகிறது. அந்த கொலைக்கு காரணமானவர் என சிறையில் இருக்கும் மாடுபிடி வீரர் முடக்கத்தான் மணி (யஷ்வந்த்) என்பவரைச் சுற்றி வழக்கு நகர்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் இஸ்லாமிய காவல் அதிகாரி மூசா (சசிகுமார்), வதந்திகளுக்கும் உண்மைக்கும் இடையே இருக்கும் முடிச்சுகளை அவிழ்க்கும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் கதையே இந்த 'வதந்தி 2'.


சசிகுமார் முதல்முறையாக முழு நீள போலீஸ் அதிகாரியாக மிக அமைதியான, முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தாடி வைத்துக்கொண்டு காவலர் பணியாற்ற அவர் செய்யும் சட்டப்போராட்ட காட்சிகள் கவனம் பெறுகின்றன. சசிகுமாரின் கர்ப்பிணி மனைவியாக நடித்த அபர்ணா தாஸ், மாடுபிடி வீரராக வரும் அறிமுக நடிகர் யஷ்வந்த் மற்றும் அனகா, ரேவதி சர்மா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர். முதல் சீசனில் வந்த எஸ்.ஐ ராமர் கதாபாத்திரத்தை இதிலும் தொடர்ந்து, திருநெல்வேலி ஸ்லாங்கில் நகைச்சுவை கலந்த நடிப்பால் கவர்கிறார் விவேக் பிரசன்னா.


கடைசி இரண்டு எபிசோடுகளில் வரும் அதிரடி திருப்பங்களும், சமூக விழிப்புணர்வு சார்ந்த க்ளைமாக்ஸும் சீரிஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. சரவணன் ராமசாமியின் இருண்ட, மர்மமான ஒளிப்பதிவும், சைமன் கே கிங் பின்னணி இசையும் த்ரில்லர் உணர்வை கச்சிதமாக கடத்துகின்றன.


க்ரைம் த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதைகளை விரும்புபவர்கள் தாராளமாக அமேசான் பிரைமில் இந்த 'வதந்தி 2' தொடரைக் கண்டு ரசிக்கலாம்.

 

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.


முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.


ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு போஸ்டர் மூலம் ‘ஹாய்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்,


“பெயருக்கு ஏற்றபடி எளிமையான, இனிமையான, மனதை வருடும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘ஹாய்’ உருவாகியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று நகரங்களை பின்னணியாகக் கொண்டு நகரும் இந்தக் கதையை, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்கள் இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னர்களின் உணர்வை நினைவூட்டும் திரைப்படமாக இது இருக்கும்” என்றார்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதாலும், நயன்தாரா - கவின் இணையும் முதல் திரைப்படம் என்பதாலும், அனுபவம் மிக்க நட்சத்திர பட்டாளம் ஒன்றாக இணைந்திருப்பதாலும், ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் - இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது. 


நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் - ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்... வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான திரைக்கதையும்... இணைந்து சமீப காலங்களில் சூர்யாவின் மிகச்சிறந்த மற்றும் மனதிற்கு நெருக்கமான நடிப்புகளில் ஒன்றாக இந்த படம் அமையும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. 


திரையில் மமிதா பைஜூ தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த.. ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்வுபூர்வமான பயணத்திற்கு கூடுதலாக வலிமை சேர்த்துள்ளனர். ஜி. வி பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை... நிமிஷ் ரவியின் நேர்த்தியான ஒளிப்பதிவு... வெங்கி அட்லூரியின் தனித்துவமான கதை சொல்லும் பாணி... ஆகியவை இந்த ட்ரெய்லரை மேலும் மெருகூட்டுகிறது. 


கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் படத்தின் உணர்வுபூர்வமான ஆழம் மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் திறன் குறித்தும் படக் குழுவினர் மிகுந்த நம்பிக்கையை பேச்சில் வெளிப்படுத்தினர். அந்த நம்பிக்கையை இந்த ட்ரெய்லர் முழுமையாக உறுதிப்படுத்தி இருப்பதுடன் மறக்க முடியாத திரையரங்க அனுபவத்திற்கான உத்திரவாதத்தையும் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. 


 சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் - ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் வார இறுதியில் மறக்க இயலாத உணர்ச்சிகளின் உலகத்தை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.

 

உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் ONE MAN திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார்.


ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி, பெரிய அருவியில் குதித்து ஐந்து பேர் தப்பிப் பிழைக்கும் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரு ஆக்ஷன் படத்திற்கு இணையாகப் படமாக்கப்பட்டுள்ளன.


சிறப்புக் காட்சியில் படத்தைப் பார்த்த திரைத்துறை பிரமுகர்கள், தனி மனித உழைப்பையும் தாண்டி, இதன் கதையும், திரைக்கதையும், காட்சி அமைப்பும் சுவாரசியமானதாகவும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் பார்க்கும் விதத்திலும் இருப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.


படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருந்தாலும், படத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனி கதாபாத்திரங்களாகவே மனதில் தோன்றுகிறார்கள். இவனிடம் இருந்து அவன் எப்படி தப்பிப்பான், அவனால் இவனுக்கு என்ன பிரச்சனை ஏற்படும் என்பது போன்ற கேள்விகளை எழுப்பும் வகையில் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியமாக அமைந்துள்ளதாகவும், அதை ஒரே மனிதனாக இருந்து நிகழ்த்தியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் பாராட்டி வருகின்றனர்.


மேலும், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தான் எப்படி எடுத்தேன் என்பதை வேறு ஒரு கேமராவில் முழுமையாகப் பதிவு செய்து வைத்திருப்பது மேலும் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் போலவே, ஒரு தனி மனிதனாகவும், தமிழனாகவும் தான் செய்த இந்தப் பெரும் சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும், வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி ONE MAN திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

 

திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘பெரும் மௌனங்கள்’ எனும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், வம்சி பதிப்பகம் சார்பில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விரைவில் வெளியாகிறது. 


‘இடம் பொருள் ஏவல்’, ‘இடி முழக்கம்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுப் பணிகளில் தீவிரமாக இருக்கும் சீனு ராமசாமி, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்கெனவே 13 கவிதைத் தொகுப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


"மனிதர்கள் தங்கள் மௌனம் கலைத்து தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துப் பேசுவது அரிது. அப்படித்தான் தோழர் சீனு ராமசாமி, தான் எதிர்கொண்ட மனிதர்கள், ஆசான்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் குறித்த தன் ஆழமான நினைவுகளையும் உணர்வுகளையும் இந்நூல் வழியே பதிவு செய்துள்ளார்" என்று 'பெரும் மௌனங்கள்' நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான கே.வி. சைலஜா தெரிவித்துள்ளார்.

Pageviews