2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை மாநகரில் இன்று தனது ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்வில் தேசிய நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், சமூக பிரதிநிதிகள் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று, அமைப்பின் செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் மற்றும் தென்னிந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, அகமது மாலிக் வடையார் அவர்கள் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில் அமைப்பின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் புதிய கட்டம் தொடங்கியுள்ளது.


இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் மார்கதர்ஷக் டாக்டர் இந்திரேஷ் குமார் ஜி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். 


சிறப்பு விருந்தினர்களாக இந்திய அரசின் தேசிய சிறுபான்மையினர் கல்வி நிறுவன ஆணையத்தின் செயல் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஷாஹித் அக்தர், ஹிமாலயா பரிவார் தேசிய துணைத் தலைவர் விஜய் சங்கர் மிஸ்ரா, மாநிலங்களவை உறுப்பினர் மிதிலேஷ் குமார் கதேரியா, புகழ்பெற்ற புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஜீத் தாலிகோட்டி, முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தென்னிந்திய பொறுப்பாளருமான எலியாஸ் அகமது மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அகமது மாலிக் வடையார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதுடன், வட இந்தியாவின் பல பகுதிகளில் தனது வலுவான செயல்பாடுகளை நிறுவியுள்ளது என்று நிகழ்வில் உரையாற்றியவர்கள குறிப்பிட்டனர். தற்போது தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் அமைப்பின் பணிகளை மேலும் விரிவுபடுத்தி, அதன் நோக்கங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.


அமைப்பின் செயல்பாடுகள் தஅலீம் (கல்வி), தரக்கி (முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி), மற்றும் தஹ்ஸீப் (நற்பண்பு, ஒழுக்கம் மற்றும் நாகரிகம்) என்ற மூன்று அடிப்படை கொள்கைகளை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன என்று அவர்கள் விளக்கினர். கல்வியே நல்ல மனிதநேயத்திற்கும் பொறுப்புணர்விற்கும் அடித்தளம் என்றும், முன்னேற்றமும் உயர்ந்த பண்பாடும் சமூக ஒற்றுமை மற்றும் வலிமையான சமுதாயத்தை உருவாக்கும் என்றும் வலியுறுத்தினர்.


சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதிகமான மக்கள் இத்திட்டங்களைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றும் பேசியவர்கள் வலியுறுத்தினர்.


மேலும், முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாடல் மற்றும் மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மூலம் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஆக்கப்பூர்வமான குடிமக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதில் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.


புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட அகமது மாலிக் வடையார், தம்மை தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்த தேசிய தலைமையினருக்கு நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் அமைப்பின் அடித்தள கட்டமைப்பை வலுப்படுத்தி, அதன் செயல்பாடுகள் மற்றும் சமூக நல முயற்சிகளை முஸ்லிம் சமூகத்தினரிடம் கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபடுவதாக அவர் உறுதியளித்தார்.


மேலும், அமைப்பின் செயல்பாடுகள் மாநிலம், மாவட்டம் மற்றும் பிற நிர்வாக நிலைகளில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாக அமைப்பின் கீழ் செயல்பட்டு வருவதாகவும் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.


ஜன்சபை நிகழ்ச்சி, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் அமைப்பின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான உறுதிமொழியுடன் நிறைவடைந்தது. கல்வி, சமூக நலம், ஆக்கப்பூர்வ உரையாடல் மற்றும் தேசிய ஒற்றுமையை முன்னிறுத்தும் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் நிகழ்வில் உறுதி எடுக்கப்பட்டது.

 

மலையாளத்தில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில் உருவாகி வரும் பல படங்கள்  புதிய திசையிலான பாய்ச்சலில் வெற்றிகளைக் குவித்து வருகின்றன .அந்த வரிசையில் அமையும் வகையில் மலையாளப் படக் குழுவினர்  உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் 'ஆலி'.இது தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கிறது.


ஆலி – கதைச் சுருக்கம்


தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் இளம் கதை - பெண் காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லும் "ஆலி கதாநாயகி திருமணம் மதம் ஜாதி கடந்து நடைபெறுகிறது என்பதே படத்தின் விறுவிறுப்பான உச்சக்கட்டம்.


இப்படத்தில் 

பிரஜின், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ் ,டாக்டர் ரஜித் குமார், சௌரவ் ஷ்யாம், ஆத்யா பிரசாத் (சுருதி), மன்ஹர் பிரியதர்ஷன், ஜோபி ,மன்சாட் லீலா, சுரேஷ் திருவல்லா மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் 

டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன்.ஒரு பெண்மணியாக இருந்து படத்தை இயக்கி இருக்கும் அவரே படத்திற்கான பாடல்களையும் எழுதி உள்ளார்.

மன்ஹர் சினிமாஸ் தயாரித்துள்ளது.


இப்படத்திற்கு

ஒளிப்பதிவு செய்துள்ளார் ரினாஸ் நாசர்.

 அபு ஜியாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இசையமைப்பாளர்கள்

ராமவர்மா தம்புரான் , சுரேஷ்  ரத்தீஷ் ராய் ,ஆர் ஆர் பிரதர்ஸ், ஷ்ரத்தா பார்வதி என ஒரு நட்புக் குழுவே இணைந்து இசையமைத்துள்ளது.


படத்தில் அரபிப் பாடகர் ஹுசைன் ,ஹிந்திப் பாடகர் சம்பத் மற்றும் அரவிந்த் வேணுகோபால், ரித்து கிருஷ்ணா, சரிதா ராஜீவ் பாடியுள்ளார்கள்.

அரபி, இந்திப்பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்  ரத்தீஷ் ராய்.

ஒலியமைப்பு (SFS) – என். ஷாபு செருவல்லூர், டி ஐ – சஜய் சி.ஆர்.

நடனக் காட்சிகளை

அதுல் ராதாகிருஷ்ணன், சுனிதா நோயல் ஹாய் ஆகியோர் அமைத்துள்ளனர்.

கலை இயக்கம் – அகிலேஷ் • ஷிஜு அபாஸ்கர்,

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – ஸ்ரீதர் ,  திறமையானவர்கள் இணைந்து இயங்கி இருக்கிறார்கள்.


இந்தப் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

 

எம் குவெஸ்ட் மூவிஸ்  (mQuest movies) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீப்’ (Beep) இல.சண்முகசுந்தர் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.  


‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரகுதில் நடிக்க, பஞ்சாப்பை சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா ஆகியோர் இதில் நடித்துள்ளனர் 


தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரசாந்த் விஹாரி இசையமைக்கிறார். இவர் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘கேர்ள் பிரண்ட்’ படத்திற்கு இசையமைத்தவர். கன்னட திரை உலகை சேர்ந்த, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் மலையாள திரை உலகைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் டான்பாஸ்கோவின் உதவியாளர் விக்னேஷ் ஆகியோர் படத்தொகுப்பை கவனித்துள்ளனர். மிஸ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ட்ரெயின் படத்தில் பணியாற்றிய ராம்குமார் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.


‘பீப்’ படம் குறித்து இயக்குநர் இல.சண்முகசுந்தர் கூறும்போது,


“எம்பிஏ படித்துவிட்டு ஐடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு நல்ல சினிமா தர வேண்டும் என்பது ஆசை. அங்கிருந்து வெளியே வந்ததும் ‘கட்டு’ (Bind) என்கிற குறும்படத்தை இயக்கினேன்.. 1981ல் இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த குறும்படம் தேசிய விருது போட்டியில் கலந்து கொள்ள நாமினேட் செய்யப்பட்டது 


சினிமாவில் நான் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் தான் ‘பீப்’ இது ஹை கான்செப்டில் (Hight Concept) பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்து உருவாகியுள்ள ஒரு க்ரைம் டிராமா. எல்லா படங்களிலும் துப்பாக்கியையும் கத்தியையும் தான் பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை சில நேரங்களில் புத்தி தான் மிக சிறந்த ஆயுதம் அதுதான் இந்த படத்தின் ஸ்பெஷல். இந்த ஜானரில் வருடத்திற்கு நான்கு படங்கள் மட்டுமே வெளியாகின்ற நிலையில் ரசிகர்களுக்கு அதை எளிதாக புரியும் வகையில் உருவாகி இருக்கும் படம் தான் ‘பீப்’.  


ஒரு புகைப்படம் என்பதே பல விஷயங்கள் அடங்கிய ஒரு புதையல் போலத்தான். இப்படத்தின் நாயகன் ஒரு புகைப்படத்தின் மூலமாக ஒரு காதலியின் மன ஓட்டத்தை மட்டுமல்ல ஒரு குற்ற வழக்கின் பின்னணியை கூட நுட்பமாக கணித்து அந்த வழக்கிற்கு தீர்வு சொல்லக்கூடிய அளவுக்கு திறமை வாய்ந்தவன். இதை ஜோதிட திறமையாகவோ  அல்லது ஆராய்ந்து பார்க்கும் மூளைத்திறன் என்றோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு பின்னணியில் ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. இதுதான் இந்த படத்தின் யுஎஸ்.பி.


ஆறு பேர் கொண்ட நண்பர்கள் குழு. அதில் ஒருவர் இறந்துவிட மற்ற நண்பர்கள் இறப்பின் மர்மத்தை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதை.. ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் என்று இல்லாமல் ஹீரோயின் மற்றும் நண்பர்களாக நடிப்பவர்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 


வழக்கமான படங்களையே பார்த்து சலிப்படைந்த ரசிகர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை புதுமையான திரைக்கதையுடன் அணுகி திரில்லிங்காக கொடுத்திருக்கிறோம் நல்ல க்ரைம் திரில்லர் படங்களை விரும்புகின்ற, தான் இருக்கிற இடத்தில் இருந்து இன்னும் அதிக உயரத்திற்கு சொல்வதை லட்சியமாக வைத்திருக்கின்ற ரசிகர்களுக்கு ‘பீப்’ முழு திருப்தியை தரும்” என்று கூறியுள்ளார். 


பீப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் விதமாக இதன் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது 


இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், தீபக் தினகர், சுகாசினி, கோமல் சர்மா ஆகியோர் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூலை-29 அன்று வெளியிட்டுள்ளனர்

 

இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’ (Atrocity) வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான புரோமோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த முழுப் பாடலும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 21 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது


யுவன் சங்கர் ராஜா இசையில் இளன் வெங்கயோ வரிகளில், மதிச்சியம் பாலா, சிந்தூரி விஷால், வெங்கயோ குரல்களில் உருவாகியுள்ள இந்த பாடல், இளமையும் உற்சாகமும் கலந்த காதல் பாடலாக அமைந்துள்ளது. துள்ளலான இசை, கவர்ச்சிகரமான காட்சியமைப்பு மற்றும் நாயகன்-நாயகியின் இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. மாடர்ன் கல்யாணத்தின் அனைத்து  ‘அட்ராசிட்டி’ (Atrocity) விசயங்களையும் நகைச்சுவை ததும்ப காட்சிப்படுத்தியிருக்கும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியால், கணவரே மனைவியின் வீட்டிற்குச் சென்று வாழும் புதிய கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் உறவுகளின் உணர்வுகளை வித்தியாசமான கோணத்தில் சொல்லவுள்ளது.


இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதல், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை தனது இசையின் மூலம் மேலும் அழகாக வெளிப்படுத்தும் வகையில் பாடல்களும் பின்னணி இசையும் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


முதல் சிங்கிள் ‘அட் ராசிட்டி’ வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்தும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு தொடங்கும் எதிர்பாராத திருப்பங்களையும், கலகலப்பான குடும்ப தருணங்களையும் சுவாரஸ்யமாக சொல்ல வரும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.


 

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' எனும் இணைய தொடர் காணக் கிடைக்கும்  விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 


சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி பேசுகையில்,


'' இந்த இணைய தொடர் மிக சிறப்பாக உருவாகி இருக்கிறது. இதைப்பற்றி நாங்களே பெருமிதமாக பேசக்கூடாது. இயக்குநர் ஆண்ட்ரூஸ், 'ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என பணியாற்றும் ஒரு கடமை தவறாத மூசா ராசா என்ற காவல்துறை அதிகாரியை பற்றிய கதையை சொன்னவுடன் எங்களுக்கு பிடித்தது. அதிலும் அந்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன்.. அவருக்கு ஏற்றார் போல் கதையை எழுதியது போல் இருந்தது. மேலும் இந்த இணைய தொடரில் ஏராளமான புது இளம் திறமைசாலிகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் வீடியோவின் ஆதரவு எப்போதும் போல் மிகச் சிறப்பானதாக இருந்தது. இந்தத் தொடரும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவரும். 


வதந்தி சீசன் 1 கதையை இயக்குநர் ஆண்ட்ரஸ் எழுதிக் கொண்டிருக்கும்போதே... சீசன் 2 விற்கான ஐடியாவை அவர் வைத்திருந்தார். சீசன் 1 - ஒரு கதையாக இருக்க வேண்டும்... ஒரு க்ரைம் இருக்க வேண்டும். ஒரு ஊரில் நடந்திட வேண்டும்.  சீசன் 2 - வேறொரு க்ரைம். அதனை மதுரை பின்னணியில் சொல்லலாம் என சொன்னார். இதுதான் எங்களுக்கு முதல் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.  இயக்குநர் ஆண்ட்ரூஸ் மதுரையை சேர்ந்தவர் அல்ல. இருந்தாலும் அந்த கதைக்களத்தை பற்றி நன்றாக நன்றாக தெரிந்து கொள்வதற்காக பல மாதங்கள் மதுரையில் தங்கி மக்களுடன் கலந்து வாழ்ந்தார். அவர்களுடைய நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதற்குப் பிறகு திரைக்கதையை இறுதி செய்தார். இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதை திரையில் அவர் சின்ன சின்ன விசயங்கள் மூலம் விவரித்திருக்கிறார். அப்போதுதான் பார்வையாளர்களால் மூஸா ராசா எனும் கதாபாத்திரத்துடன் எளிதாக பயணிக்க முடியும்.


மூஸா ராசா என்ற கதாபாத்திரத்தை எழுதி முடித்துவிட்டு, இதற்காக சசிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொன்னதும் எனக்கும் கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது. நாங்கள் இருவரும் சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம் ' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வெகுவாக கொண்டாடினோம். அது முதல் சசிக்குமாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. 


மதுரை பின்னணி - சசிகுமார் நடிக்கிறார் - ஆனால் ஒரு அருவாள் இல்லை.... கத்தியில்லை... ரத்தம் இல்லை... என்று தான் முதலில் தோன்றியது. ஆனால் சசிகுமாரிடம் நீங்கள் சில நிமிடங்கள் பேசினாலே... அவர் மூஸா ராசா என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்பது தெரியவரும். அவ்வளவு அன்பானவர். அடக்கமானவர். அதிர்ந்தும் பேசாதவர். 


வதந்தி சீசன் 2 படத்தின் பணிகளை தொடங்கிய தருணத்திலிருந்து ஒவ்வொரு விசயமும் எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தது. கதையாகட்டும்... கதாபாத்திரங்கள் ஆகட்டும்... இசையாகட்டும்... ஒவ்வொரு விசயமும் எங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. 


வதந்தி சீசன் 1 க்கு பிறகு ,சீசன் 2 விற்கு இயக்குநர் ஆண்ட்ரூஸ் திரைக்கதையை எழுத நிறைய நேரம் எடுத்துக்கொண்டார். சீசன் 2 விற்காக அவர் எழுதி நிறைவு செய்த மூன்றாவது கதை தான் இது. அதனால் தான் வதந்தி சீசன் 1 வெளியாகி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு சீசன் 2 வெளியாக உள்ளது. 


இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசுகையில், '' வதந்தி சீசன் 1 - ஒரு ஆர்கானிக் சக்சஸ். அதற்குப் பிறகு வதந்தி சீசன் 2 வை அறிமுகப்படுத்தும்போது.. இதற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. 


யாரும் பார்க்காத தருணத்தில் கல்லை தூக்குவது பெருமை அல்ல. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கல்லை தூக்குவது தான் சவாலானது. எதிர்பார்ப்புகள் இல்லாத தருணத்தில் வதந்தி சீசன் 1 இயக்கியதை விட... அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் இந்தத் தருணத்தில் இதன் சீசன் 2 வை இயக்கி வெற்றியடைய செய்வதில் தான் எனக்கான சவால் இருக்கிறது என நினைக்கிறேன்.  


இந்த கதையை எழுதி அமேசான் பிரைம் வீடியோவிற்கு சமர்ப்பிப்பதற்கு முன் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி அவர்களிடம் சமர்ப்பித்தேன்.‌ அவர்கள் தான் இன்னும் ஏதாவது புதுமையாக சேர். சேர்த்துக்கொள். சேர்த்துக் கொண்டே இரு... என ஊக்கமளித்துக் கொண்டே இருந்தார்கள். திரைக்கதையை நிறைவு செய்த பின் அவர்களின் கஷ்டம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் நான் இதனை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். அவர்கள் தான் அனைத்து விசயங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்தனர். இதற்காக இந்த தருணத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்குவதற்காக படமாக்கப்படும் படப்பிடிப்பு நாட்களில்... மூன்று திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த வேண்டியது இருந்தது. இதற்காக தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் இதில் இணைந்து பாடுபட்ட அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர். 


பார்வையாளர்கள் இந்தத் தொடரை பார்க்கும்போது அனைவரும் வதந்தி சீசன் 2 தொடரின் கதை களத்திற்குள் பயணித்து விடுவீர். ஆனால் அந்த உலகத்தை உருவாக்குவதற்காக தொடர்ந்து 43 நாட்கள் மதுரை- காரைக்குடி- ராமநாதபுரம்- திருச்சி- ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தினோம். அனைவரும் தொடர்ந்து 18 மணி நேரம் உழைத்தனர். அனைவருக்கும் இந்த வதந்தி சீசன் 2 நன்றாக வரும் என நம்பிக்கை வைத்தனர். இதற்காகவும் அனைவருக்கும் நன்றி. 


வதந்தி சீசன் 1 மிகப்பெரிய வெற்றி பெற்றதற்காக எஸ் ஜே சூர்யாவிற்கு நன்றி. சீசன் 1ல் எஸ் ஜே சூர்யா- அந்த கதாபாத்திரத்தை கையாண்ட விதம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.  


வதந்தி சீசன் 2 விற்காக சசிகுமாரை அணுகி கதை சொல்லும் போது நான் முழு கதையையும் எழுதி நிறைவு செய்யவில்லை. அவரை மதுரையில் சந்தித்து கதையை சொன்னதும் அவர் எந்த தாமதமும் செய்யாமல் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு முழு திரைக்கதையை எழுதி நிறைவு செய்துவிட்டு வாருங்கள் என்றார். அவர் நடிக்க ஒப்புக்கொண்டவுடன் அவருக்காக மீண்டும் ஒரு முறை மூஸா ராசா கதாபாத்திரத்தை சிறப்பாக எழுத தொடங்கினேன். இதுவே வதந்தி சீசன் 1க்கும் சீசன் இரண்டுக்குமான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்துவிட்டது.


இசையமைப்பாளர் சிமோனை பற்றி குறிப்பிட வேண்டும். வதந்தி சீசன் 1க்கான இசை வேறு. சீசன் 2 விற்கான இசை வேறு. அவரும் ஒரு வகையில் கதை சொல்லி தான். நான் கண்ணை மூடிக்கொண்டு இந்த தொடரின் எபிசோட்டை பார்க்கும்போது... இசையே கதையை சொல்லும். அந்த அளவிற்கு அவர் கலை நுட்பம் கொண்டவர். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார். 


நடிகர் சசிகுமார் பேசுகையில், ''


 வதந்தி 2 கதையை இயக்குநர் மதுரையில்  என்னை சந்தித்து சொன்னார். டைட்டிலை கேட்டவுடன் நான் தான் மணி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன் என்று நினைத்திருந்தேன். மதுரை என்பதால் மணி- குட்டி புலி- என ரௌடியாகத்தான் யோசிப்பார்கள். நானும் இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். யாரும் என்னை போலீசாக நடிக்க வைக்க வேண்டும் என யோசிக்கவில்லை. இயக்குநரிடம் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்ப கேட்டேன். நான் மணி கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா? அல்லது போலீஸ் மூஸி ராசா கேரக்டரில் நடிக்கிறனா? என்று கேட்டேன். அவர் தான் நீங்கள் போலீசாக மூஸா ராசா கேரக்டரில் நடிக்கிறீர்கள் என்றார். மதுரை பின்னணியில் என்னை ரவுடியாக இல்லாமல் போலீசாக நினைத்து கதையை எழுதியதால் அந்த கதையை முழுவதுமாக கேட்டேன். இந்தக் கேரக்டர் இவ்வளவு சிறப்பாக மெருகேறி இருக்கிறது என்றால்... அதற்கு இயக்குநர் ஆண்ட்ரூஸின் கடும் உழைப்புதான் காரணம். 


போலீஸ் என்றவுடன் அந்த ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு கம்பீரமாக நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயக்குநர் அப்படி எல்லாம் நடிக்க கூடாது. இயல்பாக இருக்க வேண்டும் என்றார்.  அந்தக் கதாபாத்திரம்-  மதுரையில் இருக்கும் ஒரு சாதாரண போலீஸ் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் சொன்ன கதையும் எனக்கு பிடித்திருந்தது. ஒரு நிரபராதியை காப்பாற்ற போலீஸ் போராடும் கதை. போலீஸ் பாயிண்ட் ஆஃப் வ்யூவில் தான் வதந்தி சீசன் 2 வின் கதை நகரும். 


இதுவரை வெளியான இன்வெஸ்டிகேட்டட் திரில்லர் ஜானரிலான கதைகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற பரபரப்பு தான் இருக்கும். ஆனால் இந்த தொடரில் பாவம் ஹீரோ ..‌! போலீஸ் எப்படியாவது குற்றவாளியை கண்டுபிடித்து, இவனை விடுவித்து விட வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும். 


அதைவிட வதந்தி சீசன் 1 எஸ் ஜே சூர்யா நடித்து பெரிய ஹிட்டான தொடர். அதற்கும் இந்தத் தொடருக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் இந்தத் தொடரும் புதுமையாக இருக்கும். இந்த இணைய தொடர் வெளியான பிறகு நான் நிறைய போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பேன் என நினைக்கிறேன். 


இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பின் போது ஏதேனும் ஒரு இடத்தில் லேசாக சிரித்தாலும்... மூஸா ராசா கேரக்டர் சிரிக்காது என இயக்குநர் சொல்லிக் கொண்டே இருப்பார்.  படப்பிடிப்பு தொடங்கி இரண்டு நாள் வரை சற்று சிரமமாக இருந்தது. அதன் பிறகு அது பழகிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இயக்குநர் என்ன சொன்னாரோ..! அதை மட்டும் தான் செய்தேன்'' என்றார்.


நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், '' 


ட்ரீம் ப்ரொடியூசர் மற்றும் ட்ரீம் டைரக்டர் உடன் இருக்கும்போது எங்களுக்கெல்லாம் நடிப்பு தானாகவே வரும்.‌ எல்லாமே பேப்பரில் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் என்ன சொல்கிறாரோ...! அதை செய்தால் மட்டும் போதும். 


புஷ்கர்- காயத்ரி அவர்களுடைய தயாரிப்பு என்றால்.. அதில் பணியாற்றும் அனைவருக்கும் சந்தோஷம் தான். அனைவரையும் அவர்கள் அரவணைத்து அக்கறை காட்டி அன்பு செலுத்துவார்கள்.‌


என்னைப் பொறுத்தவரை இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்தியாவிலேயே மிகச்சிறந்த ரைட்டர். இவருடைய எழுத்தையும், ஸ்கிரிப்டையும் வாசிக்க வாசிக்க குஷியாகி விடுவேன். ஆனால் இந்த தொடரின் எட்டாவது எபிசோடின் ஸ்கிரிப்ட்டை மட்டும் அனுப்பவில்லை. நான் ஆர்வமுடன் காத்திருந்தும்... நாளை படப்பிடிப்பு என்றால் அதற்கு முதல் நாள் தான் அதற்கான ஸ்க்ரிப்டை அனுப்புவார்.


வதந்தி சீசன் 1  ஐ விட இந்த சீசன் 2 விற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை இந்தத் தொடர் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்'' என்றார்.


நடிகர் யஷ்வந்த் பேசுகையில், 


''என்னைப் போன்ற புது முகங்களை கூட தயாரிப்பாளர்கள் புஷ்கர் -காயத்ரி மதிப்பு அளித்து பல விசயங்களை சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தனர். அவர்களுடைய குழுவில் உள்ள அனைவரும் எனக்கு சிறந்த முறையில் வழிகாட்டினர். அனைவருக்கும் நன்றி. 


இயக்குநர் ஆண்ட்ரூஸ் வதந்தி மூலம் எனக்கு வாய்ப்பு மட்டும் தரவில்லை...! வாழ்க்கையையே கொடுத்திருக்கிறார். அவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் பெரிது. ஒரு புது முகத்திற்கு இவ்வளவு பெரிய கதாபாத்திரமும், அதற்கான சுதந்திரமும் கொடுப்பார்களா..! என எனக்குத் தெரியவில்லை. கொடுத்ததற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை அபர்ணா தாஸ் பேசுகையில், 


'' 'டாடா' படத்திற்குப் பிறகு தமிழில் நல்லதொரு கதையில் நடிக்க வேண்டும் என காத்திருந்தேன்.‌ இந்தத் தருணத்தில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதையை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  இதுவரை ஏற்று நடித்ததில் இந்த 'சுமையா' கதாபாத்திரம்தான் சற்று வித்தியாசமான சுவாரசியமான இனிமையான கதாபாத்திரம். படப்பிடிப்பு அனுபவம் அனைத்தும் மறக்க இயலாது.‌


'கண்கள் இரண்டால்..' என்ற பாட்டில் சசிகுமாரின் தலையாட்டலுக்கு எங்கள் கேரளா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அதில் நானும் ஒருத்தி. அப்போதிருந்தே சசிக்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு இதில் நிறைவேறி இருக்கிறது. இதற்காக அவருக்கும் நன்றி.  ஆகஸ்ட் ஏழாம் தேதியன்று இந்த வதந்தி சீசன் 2 வெளியாகிறது. முதல் சீசனை விட இந்த இரண்டாவது சீசனுக்கு நீங்கள் அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்'' என்றார். 


நடிகை அனகா மருதோரா பேசுகையில், '' 


இந்தத் தொடரில் லீலாவதி எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்த கதாபாத்திரத்தை பற்றி விவரித்து என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். அதன் பிறகு தான் இந்த தொடரில் என்னுடைய பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன். தயாரிப்பாளர்கள் புஷ்கர் -காயத்ரி அவர்களுடன் ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்ற விரும்புவார்கள். ஏனென்றால் அவர்கள் அலுவலகம் எங்களுடைய இரண்டாவது குடும்பம் போல் இருக்கும். 


'கருடன்' படத்திற்குப் பிறகு நான் சசிகுமார் சார் உடன் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறேன். இதுவே எனக்கு மகிழ்ச்சியை அளித்தது'' என்றார். 


இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் பேசுகையில், 


''  வதந்தி சீசன் 1 வதந்தி சீசன் 2 இதற்கு இசையமைக்கும் போது என்னுடைய பார்வையில் அதன் கீழே இருக்கும் ஒரு டேக்லைன் தான் கவனத்தில் இருந்தது. சீசன் 1ல் ஃபேபிள் ஆப் வெலோனி என இருக்கும். சீசன் 2வில் மிஸ்டரி ஆஃப் மணி என இருக்கும் இதைத்தான் நான் வதந்தியாக பார்த்தேன். 


சீசன் 1 வேறு கதை. வேறு லேண்ட்ஸ்கேப். அதற்கான இசை வேறானதாக இருக்கும். சீசன் 2 வேறு கதை. வேறு லேண்ட்ஸ்கேப். அதனால் இதற்கான இசையும் வேறானதாகவே இருக்கும். 


வதந்தி சீசன் 1-  சீசன் 2 என இரண்டிலும் மனிதர்களுக்கான எமோஷன் கூடுதலாக இருக்கும். அதற்கான இசையைத்தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம். இது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். 


வதந்தி சீசன் 1ல் பாடல்கள் கிடையாது. ஆனால் வதந்தி சீசன் 2 வில் இரண்டு பாடல்கள் இருக்கிறது. இதுவே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் காரணமாக இருக்கும். இதன் மூலம் மணி ரோமியோ என்ற பாடலாசிரியரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்'' என்றார். 


இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 'வதந்தி சீசன் 2 : தி மிஸ்ட்ரி ஆஃப் மணி' எனும் இணைய தொடர் தமிழில் வெளியாகிறது. அத்துடன் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் , ஆங்கிலம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மொழிகளில் சப்டைட்டிலுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

 

ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு  ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது.


மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


CHENNAI, India—July 31, 2026  — ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.



இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின் அடுத்த அத்தியாயமான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ யின் விறுவிறுப்பான டிரெய்லரை இன்று வெளியிட்டது.


ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த எட்டு எபிசோட்கள் கொண்ட தொடர், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகவும், வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. இதில் எம். சசிகுமார் SI மூசா ரஸா கதாபாத்திரத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் வெளியாகிறது. மேலும், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளுடனும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடனும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.


இந்த டிரெய்லர், ஒரு பதற்றம் நிறைந்த புதிய விசாரணைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. வழக்கின் உண்மையை நெருங்கும் ஒவ்வொரு அடியிலும், அதைவிட இருண்ட மர்மங்கள் வெளிப்படத் தொடங்குகின்றன. மதுரையின் செழுமையான கலாச்சாரப் பின்னணியில், பாரம்பரியமும் புலனாய்வும்,  ஜல்லிக்கட்டு திருவிழாவின் தீவிரமான சூழலில் கதை நகர்கிறது.


தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் நடைபெறும் இடத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுவது, நேர்மையும் விடாமுயற்சியும் கொண்ட காவல் அதிகாரியான SI மூசா ரஸாவை, ‘மணி’ என்ற மர்மமான கைதியை பற்றித் தேடும் விசாரணைக்குக் கொண்டு செல்கிறது. ஆரம்பத்தில் சாதாரண கொலை வழக்காகத் தோன்றும் இந்த விசாரணை, பின்னர் பொதுமக்களின் பார்வை, ஊடக பரபரப்பு, அரசியல் மற்றும் மனித பலவீனங்கள் ஆகியவற்றுடன் மோதும் சிக்கலான பயணமாக மாறுகிறது. மூசா உண்மையைத் தேடி ஆழமாகச் செல்லும் போது, புதைக்கப்பட்டிருந்த பல ரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுகின்றன. குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீட்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த பரபரப்பான கதை, உண்மை என்பது முதலில் தோன்றுவது போல எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது.


இந்தத் சீரிஸின், எழுத்தாளர் மற்றும் இயக்குநரான ஆண்ட்ரூ லூயிஸ் கூறுகையில்..


 “‘வதந்தி’ சீரிஸின் மையக் கருத்து எப்போதும் நாம் எதை நம்புகிறோம், எத்தகைய சங்கடமான உண்மைகளை நாம் புறக்கணிக்கிறோம் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதாகவே இருந்துள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த ரசிகர்களின் அன்பும் விமர்சகர்களின் பாராட்டும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதுவே இந்த அடுத்த அத்தியாயத்தை உருவாக்க வழிவகுத்தது. இரண்டாவது சீசனில், ஒரு குற்றத்தை கண்டுபிடிப்பதைத் தாண்டி, அதிகாரம், மௌனம் மற்றும் ஆழமாக வேரூன்றிய அமைப்புகள் நீதியைப் பற்றிய நமது பார்வையை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை ஆராயும் மர்மக் கதையை உருவாக்க விரும்பினேன். மதுரையை கதைக்களமாகத் தேர்வு செய்தது, கலாச்சார வளமும் உணர்ச்சிப் பூர்வமான சூழலையும் கதைக்கு வழங்கியது. சசிகுமார் மற்றும் திறமையான நடிகர்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நேர்மையையும் ஆழத்தையும் கொண்டு வந்துள்ளனர். புஷ்கர், காயத்ரி மற்றும் பிரைம் வீடியோவுக்கு அவர்களது உறுதியான ஆதரவுக்கும் இந்தக் கதையில் வைத்த நம்பிக்கைக்கும் மனமார்ந்த நன்றி. இந்த மர்மப் பயணத்தை ரசிப்பதோடு, தொடர் முடிந்த பிறகும் அது எழுப்பும் கேள்விகளை பார்வையாளர்கள் சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.


SI மூசா ரஸா கதாபாத்திரத்தில் நடித்துள்ள எம். சசிகுமார் கூறுகையில், “மூசா ரஸா கதாபாத்திரத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அவரது அசைக்க முடியாத நேர்மையே. உண்மையின் அடிப்படையில் அமைந்த நீதியே உண்மையான நீதி என்று நம்பும் மனிதர் அவர். அதற்காக தனிப்பட்ட இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், உண்மையைத் தேடுவதை அவர் நிறுத்தமாட்டார். காவல்துறை சீருடையின் பின்னால் இருக்கும் மனிதனை—அவரது அமைதியான மன உறுதி, பலவீனங்கள் மற்றும் அவரது நம்பிக்கைகளை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை—ஆராய்வதே எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. விசாரணையின் ஒவ்வொரு கட்டமும் அவரை கடினமான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அதனால் இது ஒரு மர்மக் கதையாக மட்டுமல்ல, ஆழமான உணர்ச்சிப் பயணமாகவும் மாறியுள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ், புஷ்கர், காயத்ரி, பிரைம் வீடியோ மற்றும் இந்த அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றியது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. மூசா ரஸாவின் பயணத்துடன் பார்வையாளர்கள் ஒன்றிணைந்து, அவருடன் சேர்ந்து இந்த மர்மத்தை அவிழ்த்து, இறுதி உண்மை வெளிப்பட்ட பிறகும் அந்தக் கதை அவர்களுடன் நீடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்” (I am Game) திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி திரில்லர், அவரது திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய திரைப்படமாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.


சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள நிலையில், வசனங்களை சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.


வெளியான டிரெய்லர் தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கண்கவர் காட்சியமைப்புகள், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், அதிவேக சேஸ் சீக்வென்ஸ்கள் என இதற்கு முன் மலையாள சினிமாவில் அரிதாகக் காணப்பட்ட ஸ்டைலிஷ் ஃபேன்டஸி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. மேலும், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத அளவுக்கு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் தோன்றுவது டிரெய்லரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.


தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக அமைய உள்ளது. ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக்  மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன.


இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் கைப்பற்றியுள்ளது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி இசை டிரெய்லரில் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித் வழங்கியுள்ள காட்சியமைப்புகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அதிரடியான சண்டைக் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.


“லோகா” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள “ஐ ஆம் கேம்”, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


“RDX” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படமாகவும் இது அமைந்துள்ளது.


“ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.


தொழில்நுட்ப குழு விவரங்கள்:


 லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி

ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

எடிட்டிங்: சமன் சாக்கோ

தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்

தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்

உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்

உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்

பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்

VFX   : தௌஃபீக்  (எக்வொயிட்)   (Eggwhite)

போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்

ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா

சவுண்ட்  மிக்ஸ்: கண்ணன் கணபதி

ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே

மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்  

 

இசையமைப்பாளர் சைமன் K. கிங், இசைக்கோர்த்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். துள்ளலான இசையும், உற்சாகமான தாளமும் கொண்ட இந்தப் பாடல், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது சீசனுக்கு மேலும் உற்சாகத்தை சேர்க்கிறது.


‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.


இணைப்பு: https://www.instagram.com/reels/DbX86jHIJlB/


பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’யிலிருந்து புதிய பாடலான ‘தெய்வா’ பாடலை இன்று வெளியிட்டுள்ளன. சைமன் K. கிங் இசையமைத்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை, சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். மணி ரோமியோ எழுதியுள்ள கவர்ச்சிகரமான வரிகளும், துள்ளலான இசையும் இணைந்து உருவாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் கேட்டவுடன் கவரும் வகையில் அமைந்துள்ளது.


இந்தப் பாடலின் வண்ணமயமான மியூசிக் வீடியோ.., உற்சாகமான நடன அமைப்புகள், கலகலப்பான சூழல் மற்றும் நடிகர்களின் சுறுசுறுப்பான தருணங்கள் மூலம் பாடலின் துள்ளலான உணர்வை உயிர்ப்பிக்கிறது. மேலும், இந்தப் பாடல் உருவான விதத்தைப் பின்னணியில் காட்டும் (Behind-the-scenes) காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கிடையேயான நட்பு, மகிழ்ச்சியான தருணங்கள் ஆகியவற்றையும் இந்த வீடியோ பதிவு செய்கிறது. இதனால், ‘தெய்வா’, ‘வதந்தி சீசன் 2’ உலகத்திற்கு உற்சாகம் சேர்க்கும் இசை அனுபவமாக மாறியுள்ளது.


மதுரையின் செழுமையான கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் ஆற்றல்மிக்க சூழலையும் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’, புதிரும் பரபரப்பும் நிறைந்த புதிய மர்மக் கதையை மையமாகக் கொண்டுள்ளது. நேர்மையான காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ரஸா (எம். சசிகுமார்), நெடுஞ்சாலைத் திட்ட தொடக்க விழாவின் போது தோண்டியெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டின் மர்மத்தை விசாரிக்கிறார். அந்த விசாரணை, மணி என்ற மர்ம கைதியை நோக்கிச் செல்ல, வதந்திகள், ஏமாற்றங்கள் மற்றும் புதைக்கப்பட்ட ரகசியங்கள் நிறைந்த ஆபத்தான வலையில் அவர் சிக்கிக் கொள்கிறார். சீரிஸின் உள்ளூர் கலாச்சார சுவையை பிரதிபலிக்கும் வகையில், ‘தெய்வா’ பாடலும் அதன் துள்ளலான இசை மற்றும் உற்சாகமான தாளங்கள் மூலம் அந்த உலகத்தை உயிர்ப்பிக்கிறது.


ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். எம். சசிகுமார் எஸ்.ஐ. மூசா ரஸா கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸில், யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர், ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் பிரத்யேகமாக வெளியாகிறது. மேலும், தெலுங்கு மற்றும் இந்தி மொழி டப்பிங் பதிப்புகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கிறது.


‘தெய்வா’ பாடல் தற்போது வெளியாகி, அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்கக் கிடைக்கிறது


 

மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதலில் அவர்களுக்கு ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்கிற நிகழ்ச்சியை வருகிற 16 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடத்த உள்ளனர். 


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த விழாவை நடத்த உள்ளது. 


பிலிம்சேம்பர் வளாகத்தில் அமைந்துள்ள மீட்டிங் ஹாலில் மேற்கண்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த தகவலை தெரிவித்தனர். 


தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில்:-


தமிழ் திரைப்படத் துறையில் விடிவெள்ளியாக தோன்றி நூற்றுக்கணக்கான இயக்குநர்களையும், நடிகர், நடிகைகளையும், தயாரிப்பாளர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் உருவாக்கிய சாதனையாளர் இயக்குநர் பாரதிராஜா. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை உயர்த்திப் பிடித்த உன்னதமான படைப்பாளி பாரதிராஜா. திரைக்கதைக்கு இந்திய அளவில் புகழ் சேர்த்தவர் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்.  தமிழ் திரைப்பட துறையை இந்திய அளவில், உலக அளவில் உயர்த்திய உன்னதமான கலைஞர்கள். 


இந்த இரண்டு கலைஞர்களின் நினைவை போற்றும் விதமாக 'ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்' என்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்த உள்ளோம்.  


தமிழ் திரைப்படத்துறை வளர்ச்சி அடைவதற்கு அவர்கள் இருவரின் பங்கு என்னவாக இருந்தது என்கிற ஒரு அடையாளத்தை உணர்த்தும் நிகழ்வாக இந்த உற்சவவிழா இருக்கும். 


பாரதிராஜா அவர்கள் உயிரோடு இருந்த போது அவருக்கு ஒரு பிரம்மாண்ட விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, அவரிடம் தெரிவித்து இருந்தோம். அதற்கு  "ஆலமர வேருக்கு விழுதுகள் எடுக்கும் விழா" என்று பெயர் வைத்திருந்தோம்.   அவரிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள், அவர் வழியில் உதவியாளராக இருந்து இயக்குநராக உயர்ந்தவர்கள் எல்லோரும் இணைந்து அந்த விழா நடத்த முடிவு செய்திருந்தோம். 


திடீர் என்று பாரதிராஜாவுக்குஉடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் ,  அது நடைபெறாமல் போனது. அவர் மறைவதற்கு முன்பு இயக்குநர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு விருந்து வைத்தார். அப்போது, கொடைக்கானலுக்கு போகிற வழியில் நான் ஒரு இடம் வாங்கி இருக்கிறேன். அங்கு ஒரு மண்டபம் கட்டப் போகிறேன். அதில் என்னுடைய படங்கள், படப் பாடல்கள் எல்லாம் வைக்க வேண்டும்.  அங்கு தான் நான் இருப்பேன்.  நீங்க எல்லாம் அங்கு வந்து எனக்கு உதவி செய்யணும்.  அது ஐயப்பன் கோவிலுக்கு செல்கிற வழி என்று சொன்னார். மேலும் அந்த இடத்தில் தான் என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தார்.  அதை அவரால் பண்ண முடியவில்லை. 


அந்த இடத்தில் ஒரு மணிமண்டபம் அவருக்கு கட்டலாம் என்று நான், சித்ரா லட்சுமணன், பாக்யராஜ் சார், ராதிகா மேடம் எல்லோரும் உட்கார்ந்து பேசினோம். அவருக்கான ஒரு விழாவை நடத்துவது முடிவு செய்தோம்.  ஒரு வாரத்திற்குள்ளேயே பாக்யராஜ் இறந்தது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதை எப்படி பண்றது பண்ண முடியாமல் போயிட்டு . பார்த்திபன் அவர்கள் வந்து பாக்கியராஜ் சார் பாரதிராஜா இரண்டு பேருக்குமே சேர்த்து விழா நடத்தலாம். இது ஒரு நல்ல நிகழ்ச்சியாக எல்லோரும் சேர்ந்து பண்ணலாம் என்று கூறினார்.


அதனால், தமிழ் திரைப்படத்துறை ஒன்றிணைக்கும் முயற்சி செய்தோம். இது மாதிரி செய்யலாமா என்று கலந்துரையாடினோம்.  அது இப்போது சரியான ஒரு திட்டமிடலுடன் ஒரு நல்ல நிகழ்ச்சியாக, நினைவஞ்சலி மாதிரி இல்லாமல் ஒரு அடையாளமாக, படைப்பாளிகளுக்கும் ஒரு அடையாளமாக நிகழ்ச்சியா இருக்கணும்னு முடிவு செய்தோம். 


இந்த நிகழ்ச்சியை ஆகஸ்ட் 16ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்திருக்கிறோம். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அந்த நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியை செய்வதற்கு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் கடிதம் கொடுத்திருக்கிறோம். அதுபோல ராஜ்மோகன் அவர்களுக்கும் கடிதம் கொடுத்திருக்கிறோம். ரஜினி சார், கமல் சார் கலந்து கொள்வதாக கூறியிருக்கிறார்கள். எல்லா நடிகர்களும் கலந்து கொள்வார்கள். அதுபோல் இயக்குனர் சங்கத்திலிருந்து எல்லா இயக்குனர்களும் கலந்து கொள்வார்கள். 


மற்ற மாநிலங்களில் இருந்து நடிகர் வெங்கடேஷ், கலந்து கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா அழைப்பு விடுத்திருக்கிறோம். மத்திய மந்திரி அழைப்பு விடுத்திருக்கிறோம். கேரளாவில் இருந்து சுரேஷ்கோபி வருவதாக கூறியிருக்கிறார். மம்முட்டி, மோகன்லால் அழைப்பு விடுத்திருக்கிறோம். கர்நாடகத்திலிருந்தும் கேட்டு இருக்கிறோம். எல்லாருமே ஒரு பாசிட்டிவ் வருவதாக சொல்லி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மிக சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய அடையாளமாக இருக்கும்.  


இந்த நிகழ்ச்சி எப்படி வடிவமைப்பது என்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல், இந்த இரண்டு பேருடைய வாழ்க்கையை பத்து நிமிடத்தில் ஒரு குறும்படமாக சிறப்பான ஒரு ஆவண படமாக ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். அதுபோல் அந்த மணிமண்டபத்தில் இரண்டு பேருக்குமான சிலை வைக்க இருக்கிறோம். அது மிகச் சிறப்பாக இருக்கும். அதற்கு வேலைகள் நடந்து வருகிறது.  இந்த நிகழ்ச்சி ஒரு வியாபாரமாக மாறும்போது அதில் வருகின்ற தொகையை பாக்யராஜ் சார், பாரதிராஜா சார் மணிமண்டப முன்வைப்புத் தொகையாக, அவர்கள் குடும்பத்தார்கள் பேசியிருக்கிறோம் 


பாக்யராஜுக்கு கோபிசெட்டிபாளையம் பகுதியிலும், பாரதிராஜாவுக்கு அவருடைய சொந்த இடத்திலும் மணிமண்டபம் கட்டுகிறோம். நிகழ்ச்சி மட்டும் ஓரிடத்தில் மட்டுமே நடக்கும். இதில் வருகின்ற வருவாயை அறக்கட்டளையாக இரண்டு நிகழ்வுக்கும் பயன்படுத்துவோம். அவர்கள் மணிபண்டமும் கட்டுவதற்கான ஆரம்ப செலவாக வைத்துக் கொள்ள சொல்வோம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கட்டணம் இல்லை. சினிமாவில் ராஜா மாதிரி இருந்தார்கள். கோபுரமாக உயர்ந்து நின்றார்கள். அதனால், இந்த விழாவுக்கு பெயர் ராஜா கோபுரங்களுடன் நினைவு உற்சவம். இரங்கல் கூட்டம் கிடையாது. நினைவு உற்சவம்.  இரண்டு பேருமே நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள். சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்களுக்கு நினைவாக உற்சாகமாக தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாக அதை செய்ய இருக்கிறோம். 


அவர்களுக்கு கொடுக்கின்ற அடையாளம் அடுத்த நூற்றாண்டை தாண்டியும் இருக்க வேண்டும். அது போல் செய்ய முடிவு செய்து இருக்கிறோம். 


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி.கே.தமிழ்குமரன், செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கமலக்கண்ணன்,   இணைச்செயலாளர் சுஜாதா விஜயகுமார், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் துணைத்தலைவர் ரவிமரியா, இசையமைப்பாளர் தினா, இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார்,  ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர்கள் எம்.கபார், ஹரி முரளி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026  விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சாதனை படைத்த  முன்னணி தொழிலதிபர்கள்,  வளரும் தொழிலதிபர்கள், தங்கள் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு. GKM தமிழ்குமரன், வேலம்மாள் குழுமம் எம்.வி.எம்.வேல்மோகன் ஆகியோர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.  இந்த விழாவில் பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஆச்சி மசாலா ஐசக் உட்பட பலருக்கும்  விருது வழங்கப்பட்டது.  

விருதுகளை வழங்கியபின் தொழிலதிபர்களை திரு.GKM தமிழ்குமரன் வாழ்த்தி பேசினார். இது போன்ற விருதுகள் உற்சாகம் அளிக்கும். வாழ்வில் உயர உத்வேகத்தை கொடுக்கும். தொடர்ச்சியாக இந்த விழா நடக்க வேண்டும், விருதுகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்  என்றார்.

Pageviews