ஜன நாயகன் திரை விமர்சனம்
வெங்கட் கே. நாராயணா தயாரிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், தமிழக முதல்வரும் நடிகருமான விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, நாசர் மற்றும் சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.
தேர்தல் நாளில் மக்கள் மத்தியில் இருக்கும் ஒருவித பயத்தைப் போக்குவதற்காகச் சொல்லப்படும் கதையாக இப்படம் தொடங்குகிறது. சிறையில் இருந்து விடுதலையாகும் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்), தனது நண்பரான போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்தின் (கௌதம் வாசுதேவ் மேனன்) மகள் விஜிக்கு (மமிதா பைஜு) ராணுவத்தில் சேரப் பயிற்சி அளிக்கிறார். அதே நேரத்தில், இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கத் துடிக்கும் வில்லன் ஜான் ஹிம்லரை (பாபி தியோல்) விஜய் எவ்வாறு அரசியல் மற்றும் ஆக்ஷன் களத்தில் எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை.
தனது வழக்கமான அலட்டல் இல்லாத உடல்மொழி, முறுக்கிய மீசை, அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் அரசியல் வசனங்கள் மூலம் விஜய் படம் முழுவதையும் தாங்கிப் பிடிக்கிறார். அஞ்சா நெஞ்சம் கொண்ட பெண்ணாக வளரும் 'விஜி' கதாபாத்திரத்தில் மமிதா பைஜு எமோஷன் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, காதல் காட்சிகள், கவர்ச்சி பாடல்கள், நடனங்கள் என வழக்கமான அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், நாயகனுக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.
ஜெயிலராக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அரசியல்வாதியாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், கலெக்டராக நடித்திருக்கும் பிரியாமணி, விஞ்ஞானியாக நடித்திருக்கும் நரேன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், விஜயின் அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி, தொழிலதிபராக நடித்திருக்கும் ஜி.எம். சுந்தர் என படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
"தளபதி கச்சேரி", "ஒரு பேரே வரலாறு" போன்ற பாடல்களும், தொய்வடையும் காட்சிகளைத் தூக்கி நிறுத்தும் அனிருத்தின் பின்னணி இசையும் படத்தின் மிகப்பெரிய பலம். விஜய்யின் நிஜ வாழ்க்கை அரசியல் வருகையை ஒட்டி, படத்தில் வைக்கப்பட்டுள்ள அரசியல் சாடல்களும், வசனங்களும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு அழகையும் பிரமாண்டத்தையும் சேர்த்திருக்கிறது.
‘ ஜனநாயகன் ’ இது விஜய் ரசிகர்களுக்கான படம்











0 comments:
Post a Comment