அன்பே டயானா திரை விமர்சனம்

 

சென்னை பெரம்பூரில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞரான பாரி இளவழகன், அதே பகுதியில் வாழும் ஆங்கிலோ-இந்தியப் பெண்ணான ரம்யா ரங்கநாதனைக் கல்லூரி காலம் முதலே ஒருதலையாகக் காதலித்து வருகிறார். ரம்யா முதலில் மறுத்தாலும், பின்னர் அவரது காதலை ஏற்கும் சூழல் வருகிறது. ஆனால், பாரியின் தாயாருக்குத் தீவிரமான சாதிப் பற்று உள்ளது. சாதிப் பற்றுள்ள அம்மாவுக்கும், ஆங்கிலோ-இந்தியப் பெண்ணை விரும்பும் மகனுக்கும் இடையே நடக்கும் கலாச்சார மோதல்களையும், குடும்பப் பின்னணியையும் நகைச்சுவை கலந்து எதார்த்தமாகச் சொல்கிறது படத்தின் மீதிக்கதை.


பெரம்பூர் பையனாக பாரி இளவழகன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாக வரும் ரம்யா இரண்டாம் பாதியில் மிரட்டியிருக்கிறார். சாதிப் பாசம் உடைய தெலுங்கு பேசும் அம்மாவாக நடிகை ரோஜா சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார். அவருக்கும் சேத்தனுக்குமான சென்டிமென்ட் காட்சிகள் அருமை. நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பரிதாபங்கள் கோபி, படம் முழுவதும் தனது நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். தாய்மாமாவாக வரும் செல்வமுருகன், மாமா பெண் வேடத்தில் நடித்திருக்கும் நிகிலா சங்கர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சகோதரனாக நடித்திருக்கும் சுதர்சன் காந்தி உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


ஷெல்லி காலிஸ்ட்டின் ஒளிப்பதிவு பெரம்பூரை அழகாகக் காட்டியுள்ளது. பரத் சங்கரின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.


வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரின் காதலையும், அவர்களின் வாழ்க்கைப் பயணத்தையும் மையமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் பாரி இளவழகன், சாதி, மத எல்லைகளைக் கடந்து காதல், பாசம், குடும்பம், நட்பு, உறவு மற்றும் நகைச்சுவை ஆகிய அனைத்தையும் அழகாகக் கலந்து, ஒரு கலகலப்பான குடும்பத் திரைப்படத்தை வழங்கியிருக்கிறார்.

0 comments:

Pageviews