லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரை விமர்சனம்

 

தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வெற்றி மற்றும் பிரிகிடா சாகா நடிப்பில் வெளியாகியுள்ள 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' திரைப்படம்.


1970-களில் நடக்கும் இக்கதையில், படித்துவிட்டு வேலை கிடைக்காத விரக்தியில் அறிவுமதி (வெற்றி) தன் நண்பனுடன் சேர்ந்து சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறான். இடையில் மல்லிகாவை (பிரிகிடா) காதலித்துத் திருமணமும் செய்கிறான். தன் குடும்பத்திற்காகத் திருட்டுத் தொழிலை விட நினைக்கும் வேளையில், இறுதித் திருட்டாக ஒரு செல்வந்தரின் (கவிதா பாரதி) வீட்டிற்குச் செல்கிறான். அங்கு அந்த நபர் ஒரு சிறுமியிடம் காட்டும் வக்கிரமான மிருகத்தனத்தைக் கண்டு ஆத்திரமடைந்து, அவனைக் கொலை செய்கிறான் அறிவுமதி. அறிவுமதி  காவல் துறையிடம் சரணடைந்து விடுகிறார். நீதி மன்றம் அறிவுமதிக்கு  தூக்கு தண்டனை கொடுத்து விடுகிறது. இறுதியில் நீதிபதி கன்யா பாரதி தூக்கு தண்டனை கொடுத்தாரா ? இல்லையா?   வெற்றி கவிதா பாரதியை கொலை செய்ய காரணம் என்ன ? என்பதே‘ லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் மீதிக்கதை.


அறிவுமதி கதாபாத்திரத்தில் நடிகர் வெற்றி தனது முந்தைய படங்களை விட எதார்த்தமான, முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்துள்ளார். பிரிகிடா சாகா கிராமத்து வேடத்தில் எமோஷனல் காட்சிகளில் கவர்கிறார். சிறை அதிகாரியாக வரும் ரங்கராஜ் பாண்டே தனது கம்பீரமான உடல் மொழியால் மிரட்டியுள்ளார்.


தர்புகா சிவாவின் பின்னணி இசை கதையின் இறுக்கமான சூழ்நிலைக்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. எம்.வி. பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு 1970-களின் எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. 


கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் எழுதிய கூர்மையான வசனங்கள் படத்திற்குப் பெரும் பலம். குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனையும் ஒரு கொலைதான். அரசு உட்பட யாருக்கும் ஒரு உயிரைப் பறிக்கும் அதிகாரம் இல்லை என்ற கருத்தை இயக்குநர் தயாள் பத்மநாபன் மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

0 comments:

Pageviews