நூறு சாமி திரை விமர்சனம்

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ஸ்வாசிகா, கணவரை இழந்தவர்  தனது இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். மறுமணம் செய்ய ஆசைப்படும் ஸ்வாசிகா, தனது எண்ணத்தை  மூத்த  மகன் அஜய் திஷானிடம் கூற அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து சென்று விடுகிறார்.


சில வருடம் கடந்த நிலையில் தன் அம்மாவின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் அஜய் திஷான், அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அவரது முடிவுக்கு அவரது இளைய சகோதரரும் ஆதரவு தெரிவிக்க, இரண்டு  மகன்களும் சேர்ந்து தனது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க  நினைக்கிறார்கள்.


இதற்கு சொந்தமும், ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அண்ணன் கருணாஸ் தங்கை ஸ்வாசிகாவை கொலை செய்ய முயற்சிக்கிறார். இறுதியில்  கருணாஸிடம் இருந்து ஸ்வாசிகா உயிர் பிழைத்தாரா ? இல்லையா?  மகன்கள் ஊர் எதிர்ப்பை மீறி தன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா? இல்லையா?  என்பதே ‘நூறு சாமி’ ’ படத்தின் மீதிக்கதை.


செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்வாசிகா, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  தனி ஆளாக குழந்தைகளை காப்பாற்ற படும்  கஷ்டம் ,  குழந்தைகள் மீது வைத்திருக்கும் பாசம், மானத்தை காப்பாற்ற எடுக்கும் முயற்சி , மறுமணம் விருப்பம், தன் சோகத்தை  மின் விசிறியிடம் பரிமாறுவது என அனைத்தையும் உள்வாங்கி உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.


முக்கிய கதாபாத்திரத்தில் வரும் விஜய் ஆண்டனி படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவான நடிப்பால் அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடிக்கிறார்.


ஸ்வாசிகாவின் மகன்களாக நடித்திருக்கும் அஜய் திஷான், சக்தி இவர்கள் ஜோடியாக வரும் பாடினி குமார், காவ்யா அனில், தாய்மாமாவாக வரும் கருணாஸ்,  கிருத்துவ சிஸ்டராக வரும் லிஜோமோல்,  பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி என அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையில்  பாடல்கள் மற்றும் பின்னணி இசை  காட்சிகளோடு நம்மை பயணிக்க வைக்கிறது. எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷ்  ஒளிப்பதிவு கிராமத்து அழகை கண் முன் கொண்டு வந்திருக்கிறார்.


2017 ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு  கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மைய கருவாக வைத்து உருவாகியிருக்கும்  இயக்குநர்  சசி  இத்திரைப்படத்தில் விதவை பெண்கள் சமூகத்தில் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லியிருக்கிறார். விதவை பெண்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

0 comments:

Pageviews