கெணத்த காணோம் திரை விமர்சனம்
ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். பல்வேறு வகையில் தங்களது ஊருக்கு குடிநீரை கொண்டு வந்துவிட வேண்டும் என்ற மக்களின் முயற்சியின் பலனாக அங்கு தண்ணீர் ஓட்டம் இருப்பது கண்டறியப்படுகிறது. அந்த ஓட்டம் ஒருவரது வீட்டுக்கு அடியில் அமைகிறது ஊர் நன்மைக்காக அவரது வீட்டை கிராம மக்கள் கேட்கிறார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்து ஒரு நிபந்தனை விதிக்கிறார், போர் போடாமல் கிணறு வெட்டினால் இடத்தை கொடுப்பதாக சொல்கிறார். அதன்படி, ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த இடத்தில் கிணறு தோன்றுகிறார்கள். அப்போது அந்த பள்ளத்தில் தண்ணீருக்கு பதிலாக டைனோசரின் எலும்புகள் கிடைக்கிறது. இதையடுத்து அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் தொல்லியல் துறை அங்கு முகாமிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அந்த ஊர் முழுவதிலும் தங்களது ஆய்வுகளை விரிவுப்படுத்த திட்டமிடுகிறது. இதனால், அந்த ஊர் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படும் சூழல் ஏற்பட, ஊர் மக்களையும், தங்களது சொந்த மண்ணையும் காப்பாற்ற ஒருவன் முயற்சி செய்கிறார் ? இதன் பின் என்ன ஆகிறது என்பதை நகைசுவை கலந்து சொல்வது தான் இந்த ‘கெணத்த காணோம்’.
இந்த படத்தில் சிற்பி மற்றும் கோவில் பூசாரியாக யோகி பாபு நடித்துள்ளார், மக்களை நல்வழிப்படுத்தும் மற்றும் மூடநம்பிக்கைகளை அகற்றும்படியான வசனங்களை பேசி கதையின் நாயகனாக தன்னை உருவகப்படுத்தி விடுகிறார், இந்த படத்தில் மக்கள் குரலாக இருக்கிறார்.
மேலும் கதாநாயகியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகர், யோகி பாபுவின் காதலியாக வலம் வருகிறார். ஆங்காங்கே தலைக்காட்டி சில வசனங்கள் பேசினாலும், அவரது கதாபாத்திரத்திற்கு திரைக்கதையில் பெரிய இடம் இல்லை.
தொல்லியல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரைச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் ராமகிருஷ்ணன் கதாபாத்திரங்களுங்களுக்கு பொறுத்தமான தேர்வு. முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி, தனது இயல்பான வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பு மூலம் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். அவர் வரும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது. அதிலும், விசாரணை என்ற பெயரில் காவலர்கள் ஊர் மக்களை அடிக்கும் காட்சிகளில் மனுஷன் தன் டைமிங் வசனங்கள் மூலம் திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைத்து விடுகிறார்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் தியாகராஜன், புழுதி படிந்த மண் மற்றும் தண்ணீர் இன்றி வாடி கிடக்கும் மக்களை எந்தவித கலப்படமும் இன்றி காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை வீர தீரமாகவும், வன்முறை நிறைந்ததாகவும் சொல்பவர்களுக்கு மத்தியில், விபரம் அறியாத அம்மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், வெள்ளந்தியான குணத்தையும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, ஒரு கிராமத்துக்குள் பயணித்த அனுபவத்தை படம் பார்த்தவர்களுக்கும் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சுரேஷ் சங்கையா, குடிநீர் இன்றி தவிக்கும் கிராமங்களின் சோகமான கதையை, நகைச்சுவையாக சொன்னாலும், மக்கள் மனதில் ஆழமாக பதியும்படி சொல்லியிருக்கிறார்.











0 comments:
Post a Comment