*மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா*vadam
*நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா*
*எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும் - விமல்*
*வடம் கமர்சியல் திரைப்படம் தான்... ஆனால் இது கதை உள்ள கமர்சியல் படம் - நடிகர் விமல்*
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'வடம்' படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனிஸ்காந்த், பால சரவணன், 'ஆடுகளம்'நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
*இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் பேசுகையில்,*
'' நான் இந்த துறைக்கு புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னை சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டை பற்றி சொன்னார். அது எங்களுக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாக சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையை சொன்னாரோ... அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்திருந்தார்கள். குறிப்பாக இமான் அவர்களின் இசை சிறப்பாக இருந்தது. புது தயாரிப்பு நிறுவனம் புது தயாரிப்பாளர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.
நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எங்களுக்கும் மாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒரு மாடு பதினெட்டு ஆண்டுகள் தான் உயிர் வாழும் என நினைக்கிறேன். டீ -காபி -பால் -தயிர்- என மாட்டுடன் நாம் அனைவரும் தொடர்பு கொண்டிருக்கிறோம். 18 ஆண்டு காலம் நமக்காக வாழ்ந்து இறக்கிறது. இன்றும் ஆலயங்களில் நந்தீஸ்வரராகத்தான் இருக்கிறார். நாங்கள் இதுபோன்று மாட்டை பற்றி படம் எடுப்பது பாக்கியம் என கருதுகிறோம்.
நிறைய பேர் வெள்ளித்திரையில் தோன்றுவதை தான் தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த விசயத்தை நாங்கள் சொன்னதால் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக இறைவனுக்கும், மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம்'' என்றார்.
நடிகர் முனீஸ்காந்த் பேசுகையில், '' வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் புது தயாரிப்பாளரை போல் இல்லாமல் எங்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அவர் தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். விமலுடன் தொடர்ந்து நான் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் இந்த படத்தில் நட்டியுடன் சில காட்சிகளில் நடித்திருக்கிறேன்.
பொதுவாக ஒரு காட்சியில் நடிக்கும் போது அந்த காட்சி நிறைவடைந்த பிறகு தான் சக நடிகர்கள் பாராட்டு தெரிவிப்பார்கள். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சிறப்பாக நடிக்கிறீர்கள் மேலும் மெருகேற்றுங்கள் என உற்சாகப்படுத்தினார் நட்டி. இது எனக்கு பெருமிதமாக இருந்தது அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற 'பாண்டி முனி' என்ற பாடல் மிகப்பெரிய 'வைப்'பாக இருந்தது. இதற்காக டி. இமானுக்கு நன்றி.
நான் நடித்த கதாபாத்திரத்தை பற்றி இப்போது எதையும் பகிர்ந்து கொள்ள இயலாது. எனக்கு முக்கியமான கேரக்டரை இயக்குநர் கொடுத்திருக்கிறார். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் சினிமாவில் நடிப்பதற்காக ஆசைப்பட்ட கேரக்டர் அதுதான். இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். '' என்றார்.
இயக்குநர் கேந்திரன் பேசுகையில், ''கதை முழுமையாக எழுதி முடித்தவுடன் முதலில் இசையமைப்பாளர் இமானிடம் தான் சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு நான் இசையமைக்கிறேன் என்று சொன்ன தருணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று. இதற்காக இமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரைத் தொடர்ந்து இப்படத்தின் கதையை விமலிடம் சொன்னேன். அதற்குப் பிறகு நட்டியிடம் சொன்னேன் அப்போது அவர் நீங்கள் சொன்ன கதையை மாறாமல் அப்படியே படமாக்கி விடுவீர்களா..! என்றார். நான் நிச்சயமாக எடுக்கிறேன் என்று சொன்னவுடன் அவரும், நானும் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்.
இப்படத்திற்காக நிறைய ஹீரோயின்களை தேடிக் கொண்டே இருந்தோம். ஒருமுறை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு போட்டோவை பார்த்தேன். அந்த போட்டோ அழகாக இருந்தது. வேறு எதையும் யோசிக்கவில்லை. அப்புறம் அவரை தேடினோம். அவர் என்னுடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை நடிக்க வைத்தோம். அவரும் அற்புதமாக படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நல்ல ஆர்டிஸ்ட் ஆக வருவார். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.
இந்தப் படத்தில் விமலுடன் நடித்த 'பாண்டி முனி' எனும் காளை மாட்டிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காட்சி படமாக்கும் போது 'ஆக்ஷன்' என்று சொன்னால் பாண்டி முனி நடிக்கும். நீங்கள் படம் பார்க்கும்போது அதனை ரசிப்பீர்கள்.
விமல் இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்ட பிறகு பணிகள் வேகம் எடுத்தன. இந்தப் படம் இவ்வளவு விரைவாக நிறைவடைந்து இருக்கிறது என்றால் அதற்கு ஹீரோவின் ஒத்துழைப்பு தான் முக்கியம்.
நான் இந்தப் படத்தைப் பற்றி எதையும் பேசவில்லை. மார்ச் 6ஆம் தேதி திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது. இந்தப் படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்
நடிகை சனஸ்கா ஸ்ரீ பேசுகையில், '' நான் இயக்குநருடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்திருந்த ஒரு காட்சியைத் தான் நான் என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தேன். அதைப் பார்த்து இந்தப் பெண் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று அடம் பிடித்து நடிக்க வைத்தார். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.
புது ஹீரோயினுக்கு சம்மதம் சொன்ன விமலுக்கும் நன்றி. பெரிய நடிகர்களுடன் பணியாற்றும்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் விமலுடன் பணியாற்றும்போது அவர் என்னை கலாய்த்து கொண்டே இருப்பார்.
நான் சின்ன வயதில் ஸ்கூலுக்கு செல்லும் போது இமானின் பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன். படத்தில் எனக்கும் ஒரு சோலோ சாங் இருக்கிறது. அதை கொடுத்த இமான் சாருக்கு நன்றி. ரொம்ப வருசத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு ஒரு சோலோ சாங் வருகிறது. அதில் நான் நடித்ததற்கு மீண்டும் ஒருமுறை அவருக்கு நன்றி சொல்கிறேன்.
இந்தப் படத்தை நாங்கள் அனைவரும் இன்று காலையில் தான் பார்த்தோம். படம் மிக சிறப்பாக வேற லெவலில் இருக்கிறது. படத்தின் இடைவேளைக்கு முன்னரான சண்டைக்காட்சியில் நானும் இருக்கிறேன். இதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநருக்கு நன்றி'' என்றார்.
இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், '' மாசாணி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜசேகருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய முதல் படம் இது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன். இந்த நிறுவனம் தொடர்ந்து பல பல வெற்றி படங்களை வழங்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 60, 70 முறை சந்தித்திருப்போம். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு நொறுக்குத் தீனியை எடுத்து வந்து அன்பை வெளிப்படுத்துவார். அதேபோல் படத்திற்கும் தேவையான அனைத்து விசயங்களுக்கும் கஞ்சத்தனம் இல்லாமல் செலவு செய்திருக்கிறார். இயக்குநருக்கு மிகப்பெரிய சொத்து தயாரிப்பாளர் ராஜசேகர் தான். அவர்கள் இருவரும் இணைபிரியாத தோழர்கள் போல இருப்பார்கள். அவர்களுடைய நட்பு இப்படத்தை கடந்தும் தொடரும் என நம்புகிறேன்.
இயக்குநர் இப்படத்தின் கதையை என்னிடம் முதலில் சொன்ன பிறகு நான் இசையமைக்கிறேன். ஆனால் அதற்கு முன் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யுங்கள் என்று சொன்னேன். அப்போதுதான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும். அதனால் முதலில் ஒரு நடிகரை பேசி தீர்மானித்து உறுதி செய்து விட்டு வாருங்கள் என சொன்னேன். விமல் சார் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.
இன்றைக்கு இருக்கும் ஜென் ஸீ இளைஞர்களுக்கு இவருடைய 'ஒற்றை வார்த்தை ' மிகவும் பிடிக்கும். இது ஒரு நல்ல விசயம்தான். மனதில் தோன்றுவது தான் பேசுகிறார் என்பது வெளிப்பட்டு விடும். அப்படி ஒரு இயல்பான மனிதராக இருப்பதற்காக விமலை நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் பாடலாசிரியர் ஞானக்கரவேல் தான் எழுதி இருக்கிறார். சிறிது இடைவெளிக்குப் பிறகு நான் ஒரு பாடலுக்கு பின்னணி பாடி இருக்கிறேன். இந்த திரைப்படத்தின் பாடல்களை என்னுடைய டி ஐ சவுண்ட் ஃபேக்டரி நிறுவனத்திற்கு வழங்கிய தயாரிப்பாளருக்கு நன்றி.
நட்டி சார் நம் திரைத்துறையின் சொத்து. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்தப் படம் நம்முடைய ரூரல் ஸ்போர்ட்ஸான வட மஞ்சு விரட்டு பற்றிய படம். அது தொடர்பான காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் ஷபு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
எந்த படமாக இருந்தாலும் லைட் அண்ட் சவுண்ட் தான் முக்கியம். ஒரு இயக்குநருடைய கற்பனையை கொடுப்பதே லைட் அண்ட் சவுண்ட் தான். அதில் லைட் என்ற விசயத்திற்கு காரணமான ஒளிப்பதிவாளருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இன்றைய சூழலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களின் எண்ணிக்கை குறைவு தான். இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆணாதிக்கம் மிக்க இந்த உலகத்தில் பெண்களுக்கு ஒரு முழு பாடலை வழங்குவது என்பது குறைந்துவிட்டது. அது எழுதும்போது இருந்தால்தான் திரையில் வரும். அப்படி ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குநர் சொல்லும் போது தான் நாங்களும் அப்படி ஒரு பாடலை கொடுக்க முடியும். இதற்காக இயக்குநருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் இப்படி ஒரு சூழலை உருவாக்கினார்.
இந்த படம் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவர். அவர் வணங்கும் தெய்வம் அவருக்கு எல்லா அருளையும் வழங்க வேண்டும்.
என்னுடைய அனுபவத்தில் இறை மீது நேசம் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும் ஒரு போதும் வீழ்ச்சி இல்லை. அதனால் இந்தப் படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தயாரிப்பாளருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், '' இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இயக்குநருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளரின் விருந்தோம்பலை பற்றி அனைவரும் சொன்னார்கள் எனக்கு அவருடைய இறை நம்பிக்கை மிகவும் பிடித்திருந்தது.
நான் இப்படத்தின் முழு திரைக்கதையையும் கேட்டேன். அது சிக்கலானது. அதை காட்சிப்படுத்துவது கடினமானது. தயாரிப்பாளரிடம் எப்படி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டீர்கள்? என கேட்டேன். நம்முடைய தேசத்தில் தான் 'ஏரும் தெய்வம் எருதும் தெய்வம்' என்று இருக்கிறது. இந்தக் கதையில் வட மஞ்சுவிரட்டு என்று ஒரு விசயத்தை வைத்து அதை சுற்றிலும் நல்லதொரு கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.
விமலுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இது. இதற்கு முன் நானும் அவரும் 'ஓம் காளி ஜெய் காளி' எனும் வெப் சீரிஸில் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத பல காரணங்களால் நான் அதில் நடிக்கவில்லை. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் கேந்திரன் ஏற்படுத்தி கொடுத்தார். விமலிடம் எப்போதும் ஒரு யதார்த்தம் இருக்கும் அது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இந்தப் படத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஒரு சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் விமல் அற்புதமாக நடித்திருக்கிறார். அதில் ஹீரோயிசமும் தெரியவேண்டும் அதே நேரத்தில் அதை ஒரு எல்லைக்குள் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க வேண்டும். இதை மனதில் வைத்து நன்றாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் திரைக்கதை கலைத்துப் போடப்பட்ட சீட்டுக்கட்டு போலிருக்கும். இதற்கு கேமரா மேன், எடிட்டர், ஃபைட் மாஸ்டர், மியூசிக் டைரக்டர் இமான் ஆகியோர் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
தீபா- சரவணன் சக்தி- பால சரவணன்- ஆகியோர் மூவரும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் நிச்சயமாக சிரிப்பார்கள்.
சமூகப் பிரச்சனைகளை சொல்லி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இந்த படம் ஒரு கிராமத்தின் கதை. அதை சுற்றியுள்ள மக்களின் மனநிலை.. அவர்களின் உறவுமுறை... இதை இந்த படம் பேசி இருக்கிறது. தயாரிப்பாளர் குறிப்பிட்டதை போல் 'ஏரும் எங்கள் கடவுள்தான் எருதும் எங்கள் கடவுள்தான்' இதையும் இந்தப் படம் பேசுகிறது. படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் விமல் பேசுகையில், '' இந்தப் படத்தை பார்த்து விட்டேன். இமான் சார் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த 'பாண்டி முனி' பாடலை தான் ஒலிக்க விடுகிறார்கள். அந்த அளவிற்கு பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்த இமானுக்கு நன்றி.
எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். ஏனெனில் என் சக்தி என்ன என்று எனக்குத் தெரியும். ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பி பணம் போடும் தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும்.
ஹீரோயின் பெயர் சனாஸ்கா. இந்தப் பெயரை கூப்பிடுவதெல்லாம் எனக்கு பெரிய டாஸ்காக இருக்கிறது. அவர் இந்த படத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
எனக்கு பால சரவணன் ஆகிய இருவருக்கும் மாடுடன் தான் பெரிய டாஸ்க் இருக்கும். அவர்கள் பெயர் பாண்டி முனி. அவர்கள் இன்று மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டிருப்பதால் இங்கு வர முடியவில்லை.
படத்தில் நானும், நட்டி நடராஜும் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது.. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாதே அடிக்க வேண்டும் என்றால் அடித்து விடு, மிதிக்க வேண்டும் என்றால் மிதித்து விடு என மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அதனால் அந்த காட்சி அற்புதமாக வந்தது. அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயாரிப்பாளை பற்றி ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ரோபோ சங்கர் மாமா மறைந்த போது குற்றாலத்தில் 'வடம்' படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். பெரிய பொருட்செலவில் அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் இரவு தான் எனக்கு தகவல் சொன்னார்கள். நான் மெதுவாக இயக்குநரிடம் சொன்னேன். படப்பிடிப்பிலிருந்து செல்வதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் கேட்டு பார்ப்போம் என இயக்குநரிடம், இரவில் விமானம் மூலம் சென்னைக்கு சென்று காலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக விமானம் ஏறி மதியத்திற்குள் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.
ஆயிரம் துணை நடிகர்கள்- மக்கள்- மாடு பிடி வீரர்கள்- சிவகங்கையிலிருந்து ஏராளமான மாடுகளும் வந்து இருந்தது. கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா? என்று கேட்டேன் இல்லை என்றார்கள். அதன் பிறகு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். மனைவியிடம்,' நீ சென்று ஆறுதல் கூறு' என்று சொல்லிவிட்டேன்.
அடுத்த நாள் மாலையில் அனைவரையும் அழைத்து ரோபோ சங்கருக்கு கண்ணீர் அஞ்சலியுடன் பெரிய ப்ளக்ஸ் பேனரை வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள கிராம மக்களுக்கு 500 புடவைகளை தானமாக வழங்கினார். அந்த ஏரியா முழுவதும் 2000 மரக்கன்றுகளை வழங்கி, அதை பதியமிட வைத்தார். நேரில் வந்து செலுத்த முடியாத அஞ்சலியை தயாரிப்பாளர் ராஜசேகர் இப்படி செய்து என் மனதை கவர்ந்து விட்டார். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கதையை அவர் கவனமாக தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார். இந்த நிறுவனமும், இந்த படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இயக்குநர் கேந்திரன் இந்த கதையை என்னிடம் சொன்னார். கதை நன்றாக இருந்தது. ஆனால் அதை அவர் சொன்னபடியே எடுத்து விடுவாரா..! என்ற சந்தேகம் இருந்தது. இது ஒரு கமர்சியல் திரைப்படம் தான். ஆனால் இது கதை உள்ள கமர்சியல் படம். அதுவும் நான்கு ஐந்து கதைகள் இருக்கும் படம். முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்லி சொல்லி கிளைமாக்ஸ்சில் அனைத்தையும் கச்சிதமாக முடிப்பார். படப்பிடிப்பில் நிறைய காட்சிகளை படமாக்கி கொண்டு இருந்தார். ஆனாலும் எனக்கு நம்பிக்கையே வரவில்லை. நேற்று முன்தினம் படம் பார்த்த பிறகு தான் எனக்கு திருப்தியானது. அவர் என்னிடம் சொன்ன கதையை கச்சிதமாக படமாக்கி இருந்தார். இந்த படத்தை இனி ரசிகர்கள் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.










0 comments:
Post a Comment