கொம்புசீவி திரை விமர்சனம்

 

1990களில் இந்த கதை நடக்கிறது. வைகை அணை கட்டப்பட்டதால் தங்கள் நிலங்களை, வீடுகளை இழந்த சில கிராம மக்கள் வாழ்வாதாரத்துக்கு போராடுகிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த ஏரியா பெரிய மனிதரான சரத்குமாரும், அவர் மருமகன் சண்முகபாண்டியனும் கஞ்சா வியாபாரம் செய்கிறார்கள். போலீஸ் சும்மா இருக்குமா? பிரச்னை வருகிறது? அது எதில் போய் முடிகிறது என்பது கொம்புசீவி படக்கதை. 


நாயகனாக நடித்திருக்கும் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன், கிராமத்துக் காளை என்று சொல்லும் வகையில் ஆக்ரோசமாக இருக்கிறார். சரத்குமார்.நரைத்த தலை,மீசை என்று தோற்றத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டு நடித்திருக்கிறார்.அவருடைய கதாபாத்திரப் படைப்புக்கு அவருடைய பிம்பம் மற்றும் அனுபவ நடிப்பு பெரிதும் உதவியிருக்கிறது.


அறிமுக நடிகை தார்னிகா, காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் தோன்றுகிறார். புடவை காட்சிகளில் கவர்ச்சியும் எடுப்பும் கூடுதல். நடிப்பில் பரவாயில்லை என்ற அளவில் இருந்தாலும், சரியான வாய்ப்புகள் கிடைத்தால் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் திறன் தெரிகிறது.


காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், கல்கி ராஜா போன்றோர் காவலர்களாகக் காமெடி செய்ய முயல்கின்றனர். சில இடங்களில் சிரிப்பு வரவழைத்தாலும், பல காட்சிகளில் அது செயற்கையாகவும் கடுப்பூட்டுவதாகவும் இருக்கிறது. சுஜித் சங்கர் சிறிய வில்லனாகவும், விஜே ஐஸ்வர்யா சரத்குமாரின் மகளாகவும், ராம்ஸ் உள்ளிட்டோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்துள்ளனர்.


யுவன் சங்கர் ராஜாவின் இசையில், பாடல்களை விடவும் பின்னணி இசை அதிரடியாக அமைந்துள்ளது. பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தின் பலம் - வைகை அணை மற்றும் சுற்றுப்புறக் காட்சிகள் வண்ணமயமாகவும் அழகாகவும் பளிச்சிடுகின்றன. 


எழுதி இயக்கியிருக்கும் பொன்ராம், ஆழமான உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம் மற்றும் மாந்தர்களை வைத்துக் கொண்டு அதை தன் வழக்கமான நகைச்சுவை பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார். மொத்தத்தில்  வணிக ரீதியான சகல மசாலாக்களுடன் கலந்து உருவாகி இருக்கும் இந்தப்படம் திரையரங்கு ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்.

0 comments:

Pageviews