சினிமாவின் நினைவுகளை கன்வாஸில் பதித்து, கலைரசிகர்களை கவர்ந்த பத்மஸ்ரீ தோட்டா தரணியின் ‘புட்நோட்ஸ் ஆன் சினிமா’ (Footnotes on Cinema) கலை, ஓவியக் கண்காட்சி

 

சினிமாவின் கலைமிகு தருணங்களை கன்வாஸில் உயிர்ப்பித்து, கலை ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் ஒரு அரிதான நிகழ்வான, புகழ்பெற்ற திரைப்பட கலை இயக்குனர் பத்மஸ்ரீ தோட்டா தரணியின் கலை, ஓவிய கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் வேகுவிமர்சியாகத் துவங்கியது. மெட்ராஸ் அலையன்ஸ் பிரான்சைஸுடன் இணைந்து, ‘புட்நோட்ஸ் ஆன் சினிமா’ (Footnotes on Cinema) என்னும் இந்த கண்காட்சி நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது.


அனைவரையும் மிகவும் வெகுவாக கவரும் இந்த கண்காட்சியை, அலையன்ஸ் பிரான்சைஸ் மெட்ராஸ் தலைவர் திரு டி.கே. துர்காபிரசாத் மற்றும் செவாலியர் டி எல்'ஆர்டி டெஸ் ஆர்ட்ஸ் எட் லெட்டர்ஸ் (Chevalier de l’Ordre des Arts et Lettres) விருது பெற்ற திரு பிரவின் கண்ணனூர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த கண்காட்சியை திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகர் பசுபதி, தொழில் அதிபர் சி.கே. குமாரவேல்,  சரவணன்,  மணியன் செல்வன்,  குஹன்,  சமீர் பரத் ராம் மற்றும் திரைப்படத்துறை, கார்ப்பரேட் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பார்த்து ரசித்தனர். 


சினிமா சம்பந்தமாக இதுவரை தோட்டா தரணி ஆற்றிய பணியை பிரதிபலிக்கும் வகையில் இதில் அவரது 125க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகள் இடம் பெற்று உள்ளன. அத்துடன் சிறு குழந்தையாக இருந்தபோது தனது தந்தை மூலம் திரைப்படத் துறையில் தனக்கு கிடைத்த பல்வேறு அனுபவங்களையும் நினைவுகளையும் மேலும் சினிமா பற்றிய அவரது எண்ணங்கள் ஆகியவற்றையும் இந்தக் கண்காட்சி பிரதிபலித்தது.


இதில், பழைய கால சினிமாவின் மாயாஜாலத்தை வெளிப்படுத்தும் 25க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில், செட் அமைப்புகள், விளக்குகள், கேமரா குழுக்கள் என சினிமாவின் ஒவ்வொரு அசைவையும், பழைய கதவுகள், ஜன்னல் சட்டங்கள், நாற்காலிகள், கூரைப் பொருட்கள் போன்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் உருவாக்கப்பட்ட பிரேம்களில் கலைநயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்கெட்ச் பேனாக்களைப் பயன்படுத்தி காடா துணியில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள், காட்சியின் வசீகரத்தை உயிரோட்டத்துடன் கொண்டு வருகின்றன. கடந்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கு  முன்பு உருவாக்கப்பட்ட சிறிய ஓவியங்கள், இப்போது மறு வடிவம் பெற்று பெரிய அளவிலான கலைப்படைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. 


இந்த கண்காட்சி குறித்து பத்மஸ்ரீ தோட்டா தரணி கூறுகையில், ‘புட்நோட்ஸ் ஆன் சினிமா’ (Foot Notes on Cinema’) என்னும் இந்த கண்காட்சி சினிமா கலையில் மூழ்கியிருந்த எனது கடந்த காலங்களை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் பல மணி நேரங்களை செலவழித்து வளர்ந்த நான், ஒரு கதையை உயிர்ப்பிக்கும் வகையில் ஒவ்வொரு காட்சியையும் உள்வாங்கி அவற்றை தத்ரூபமாக உருவாக்கி உள்ளேன். இந்தப் படைப்பின் மூலம், அந்தத் தருணங்களை ஓவியமாக மொழிபெயர்த்து, இந்திய சினிமாவின் சிறப்புகளை வெளிப்படுத்தி இருக்கிறேன்.” 


“இந்த கண்காட்சியை கேமராமேன்கள், உதவி இயக்குனர்கள், ஊழியர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் அயராது உழைக்கும் அனைவருக்கும் அர்ப்பணிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் மற்றும் கடின உழைப்பை நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதோடு பெரும்பாலும் வெளியே தெரியாத அவர்களின் பங்களிப்புகளை, இந்த கலைப்படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.


மெட்ராஸ் அலையன்ஸ் பிரான்சைஸ் இயக்குனர் டாக்டர் பாட்ரிசியா தெரி-ஹார்ட் கூறுகையில், “ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தோட்டா தரணியின் படைப்புகளைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தபோது, அவரது தொலைநோக்குப் பார்வையின் ஆழமும், ஒவ்வொரு அசைவிலும் சினிமாவின் சாரத்தை அவர் படம்பிடித்த விதமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவற்றை ஒரு முழுமையான கண்காட்சியாக மாற்றுமாறு நான் அவரை அப்போது வலியுறுத்தினேன், இன்று அதை பார்ப்பது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தக் கண்காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதில் எந்தவித சந்தேகமில்லை; இது சினிமா உலகத்தை ஓவியத்தில் உயிர்ப்பிக்கிறது, திரைப்படத் தொகுப்புகள், விளக்குகள், கேமராக்கள் மற்றும் சினிமா கதைசொல்லலை உருவாக்கும் எண்ணற்ற விவரங்களின் மாயாஜாலத்தைத் தூண்டுகிறது. ஒவ்வொரு ஓவியமும் திரைப்படங்களைப் பற்றிய கதையை மட்டுமல்ல, நினைவுகள், கற்பனை மற்றும் இந்திய சினிமாவின் காட்சி மொழியை வடிவமைத்த ஒரு பிரபலத்தின் கலைப் பயணத்தையும் சொல்கிறது” என்றார்.


மெட்ராஸ் அலையன்ஸ் பிரான்சைஸில் வரும் 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை அனைவரும் பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Pageviews