காந்தா திரை விமர்சனம்

 

படத்தில் தமிழகமே கொண்டாடும் ஒரு நாயகனாக துல்கர் சல்மான் இருக்கிறார். அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததே சமுத்திரக்கனி தான். ஆனால், தன்னுடைய சிஷ்யன் துல்கர் சல்மானுடைய புகழ் தன்னை விட உயர்ந்ததாக இருப்பதால் சமுத்திரகனி பொறாமைப்படுகிறார். அந்த நேரத்தில் சமுத்திரகனி இயக்கத்தில் துல்கர் நடிக்கிறார். அந்த படத்தில் துல்கர் இறப்பது போல காட்சிகள் வருகிறது. இது வேண்டாம் என்று துல்கர் சொல்கிறார். ஆனால், சமுத்திரக்கனி கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே ஈகோ முட்டி படம் நின்று போகிறது. பின் அந்த ஸ்டுடியோவை இழுத்து மூடுகிற நிலைமை வருகிறது. அதற்காக அந்தப் படத்தை எடுக்க இருவருமே சம்மதிக்கிறார்கள். துல்கரை போலவே பாக்கியஸ்ரீபோஸையும் சமுத்திரக்கனி தான் உருவாக்குகிறார். ஆனால், அவர் மீது காதலில் விழ அதைத்தொடர்ந்து எல்லோர் வாழ்வும் திருப்பி போடும் அளவுக்கு பல சம்பவங்கள் அடங்கியிருக்கிறது. பின் பாக்கியஸ்ரீ கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை யார் செய்தார்கள்? துல்கர் சல்மான் என்ன ஆனார்? சமுத்திரக்கனி தன்னுடைய உச்சத்தை அடைந்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.


இப்படத்தில் துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தி என்று அழைப்பார்கள். இப்படத்தின் மூலம் உண்மையாகவே இவரை நடிப்பு சக்ரவர்த்தி என்றே அழைக்கப்படுவார் என்று அடித்து கூறலாம்.  சமுத்திக்கனி இதுவரை பார்த்திராத வேறு ஒரு பரிணாமத்தில் பயணித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ அந்தக்காலத்துக் கதாநாயகிகளைப் பிரதியெடுத்தது போலவே இருக்கிறார். நடிப்பிலும் வியக்க வைத்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதி அந்த வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்.


துல்கரின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி,மாமனாராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி,ரவீந்திர விஜய்,ஆடுகளம் நரேன்,பக்ஸ் மற்றும் உதவி இயக்குநராக நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ் ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள். 


இசையமைப்பாளர் ஜானுசந்தர், பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார். டானி சஞ்செஸ் லோபெஸின் ஒளிப்பதிவு நல்ல காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.


செல்வமணி செல்வராஜ் – எழுத்து மற்றும் இயக்கத்தில் இரண்டிலும் திறமையைக் காட்டியுள்ளார். ஒரு நடிகரும் இயக்குநரும் இடையே உருவாகும் ஈகோ மோதலை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் வெளிப்படுத்தியுள்ளார். 

0 comments:

Pageviews