BAD GIRL திரை விமர்சனம்
ஒரு வகையில் பெண் பார்வையிலான ஆட்டோகிராஃப் தான் இந்தப்படம், ஆனால் பொசுக்கென அப்படி சொல்லிவிட்டால் ஆண்களின் உலகத்துக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா? அந்த அதிர்ச்சி தான் இந்தப்படத்தின் மீதான ஒவ்வாமையாகிவிட்டது. டீசரில் கட் செய்யப்பட்ட காட்சிகளும், படத்தின் பெயரும் வெறும் பரபரப்புக்காக செய்து மாட்டிக்கொண்டார்கள் போல,. உண்மையில் இது ஒரு அற்புதமான சினிமா..
இதுவரைக்கும் திரையில் ஆண்களால் எழுதப்பட்டு, எடுக்கப்பட்ட பெண் கதாப்பாத்திரங்களுக்கும், இதில் பெண் பார்வையில் எழுதப்பட்டு, எடுக்கப்பட்டிருக்கும் உலகத்திற்கும், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். அத்தனை அறங்களையும் உடைத்துக்கொண்டு ஒரு பெண்ணின் இயல்பான உலகம், வாழ்க்கை ஆசை, கோபம், காமம், லட்சியம், அறியாமை, என எல்லாம் அச்சு அசலாக வேறொரு உலகம் திரையில் வெளிப்பட்டிருக்கிறது. ஆர்ட் சினிமாவுக்கும் கமர்ஷியல் சினிமாவுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
ஒரு படத்தை பார்க்கையில் எனக்குள்ளும், உங்களுக்குள்ளும் வேறு வேறு எண்ணங்களை கிளறி விடும். பல விசயங்கள் புதிதாய் தோன்றும், நம்மையே அது அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். அது தான் முழுமையான கலைப்படைப்பு இது முழுக்க முழுக்க முழுமையான கலைப்படைப்பு. அதற்காக மிகத்தீவிரமான பெஸ்டிவல் படம் போல எல்லாம் இல்லை, சினிமாவின் தொழில்நுட்பங்களை லாவகாமாக வைத்துக்கொண்டு, வெகு சுவாரஸ்யமாக சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர். படத்தில் பெரிதாக எந்த அதிர்ச்சியும் இல்லை, ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த பெண், எத்தனை கட்டுபெட்டித் தனங்களைக் கடந்து, தனக்கான உலகை வாழ ஆரம்பிக்கிறாள் என்பது தான் படம்.
வாழ்க்கை முழுக்க, நான் நார்மல் இல்லையோ என்ற கேள்வி அவளைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. தன்னைச்சுற்றி தன் குடும்பம், உலகம் எல்லாமே டாக்ஸிக்காக இருக்கிறது என சொல்லிக்கொள்ளும் அவளே கொஞ்சம் டாக்ஸிக்காக தான் இருக்கிறாள்…
அவளுக்கு உண்மையில் என்ன தேவை என்பதே அவளுக்கு புரியாத வாழ்வில், ஒரு கற்பனை கனவைத் துரத்திக்கொண்டி திரிகிறாள். அவளுக்கு முந்தைய தலைமுறை எத்தனை கடந்து, அவளுக்கு இன்று வாழும் உரிமையும் சுதந்திரமும் கிடைத்திருக்கிறது என்பது அவளுக்கு புரியும்போது, அவள் அவள் வாழ்க்கையை வாழத் தொடங்கி விடுகிறாள்..
கதைகளை சினிமாவாக்குது ஒருபுறம் இருக்கட்டும் வாழ்க்கையை நாம் சினிமாவாக ஆக்குவதே இல்லை, இதில் அது அரங்கேறியிருக்கிறது.
படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும், வசனங்களில், கதாப்பாத்திர பின்னணியில், அரசியலில், என ஏதாவது ஒரு மேஜிக்கை ஒளித்து வைத்து, ஆச்சரியப்பட வைத்துக்கொண்டே இருந்தார் இயக்குநர் வர்ஷா பரத். இத்தனை இயல்பாய் காட்சிகளும் முக்கியமாய் கான்வர்ஷேசனும் சமீபமாய் எந்தப்படத்திலும் நிகழவே இல்லை, கடைசியாய் என யோசித்தால் பாலுமகேந்திராவிற்குத் தான் ஓட வேண்டும். ஸ்கூல், கல்லூரி, காட்சிகள் அவ்வளவு புதிதாய் இயல்பாய் இருந்தது. காஸ்டிங் எல்லாம் சல்லடையில் சலித்து பொறுக்கி எடுத்தது போல அப்படியே பொருந்தி போயிருந்தார்கள். படத்தின் எண்ணம் தான் புதிதென நினைத்தால் அதை படமாக்கியவிதம் அத்தனை ஃபிரெஷ்ஷாக, இருக்கிறது.
ஆரம்ப காட்சியில் நாயகி வாழ்வை காட்ட ஒரே காட்சியில், தூக்கம்,ஸ்கூல், நண்பிகளோடு குலாவல், வீடு, பாட்டியோடு சண்டை என 20 நொடிக்குள் பத்து ஷாட்டில் அந்த உலகத்திற்குள் கூட்டிப்போய்விடுகிறார்.
கதை லீனியரில் இருக்கிறது காட்சிகள் நான்லீனியரில் இருக்கிறது. ஒரு புத்தகம் திறந்து படிக்க படிக்க காட்சிகள் விரிவது போல, அப்படியே எடிடிங்கும் செய்திருக்கிறார்கள். எடிட்டர் ரதா ஶ்ரீதர்😍வழக்கமான க்ளோசப், வைட் என ஷாட்களே இல்லை கதையில் ரம்யாவின் எண்ணம் அப்படியே கேமரா கோணமாக மாறிவிடுகிறது. ப்ரீத்தா, ஜகதீஸ், பிரின்ஸ் ஆண்டர்சன் என கேள்விப்படாத மூன்று பேர் கேமரா செய்திருக்கிறார்கள். அட்டகாசம்.
அனுராக் காஷ்யப்பின் ஆஸ்தான இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாக தமிழுக்கு வந்திருக்கிறார். பின்னணி இசை அற்புதமாக இருந்தது. இந்தப்படத்தை எடுத்த விதத்தையே தனியாக பாடமெடுக்கலாம்.
வெற்றிமாறன் தயாரிப்பாளர் ஆனதில் ஆச்சரியமில்லை அவரைத் தவிர யாரும் தயாரித்திருக்க மாட்டார்கள். இந்தப்படத்திற்கு சென்சாரில் ஏன் இத்தனை சிக்கல்கள் எனப் புரியவே இல்லை. அவர் இனி படமே தயாரிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். 😔
எவ்வளவோ படத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.. தீரவே தீராது.
மூவி லவ்வர்ஸாக இருப்பவர்களுக்கு புரியும், சினிமா பார்த்து சலித்து திடீரென சுவையான ஃபுல் மீல்ஸ் கிடைத்தால் எப்படி இருக்கும் 😎
இந்த வருடத்தின் பெஸ்ட் படங்களில் ஒன்று











0 comments:
Post a Comment