தமிழ்நாட்டு மக்கள் திறமைக்கு மதிப்பளிக்கிறார்கள்! - ‘ஹவுஸ் மேட்ஸ்’ நாயகி அர்ஷா பைஜூ உற்சாகம்

 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அர்ஷா சாந்தினி பைஜூ, ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.  ‘ஹவுஸ்  மேட்ஸ்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதோடு, அர்ஷா சாந்தினி பைஜூவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கிறது.


தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் விளம்பர நிகழச்சிகளுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து வரும் அர்ஷா சாந்தினி பைஜூ, தனது முதல் தமிழ்ப் படம் அனுபவம் மற்றும் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார்.


மலையாள சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தாலும், தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எனது ஆசை தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் திறமைக்கு மதிப்பளிக்கிறார்கள். ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை மக்கள் கொண்டாடும் விதத்தை பார்த்து நான் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். திரையரங்கங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்தது புது அனுபவமாக இருந்தது. ரசிகர்கள் படத்திற்கும், எனக்கும் கொடுக்கும் வரவேற்பு எனக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் எனக்கான இடத்தை பிடிப்பேன், என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.


மலையாள திரையுலகில் இருந்து தமிழ் திரையுலகில் அறிமுகமாவது எப்படிபப்ட்ட அனுபவமாக இருந்தது, இரண்டுக்கும் வேறுபாட்டை உணர்கிறீர்களா?


மலையாள சினிமா, தமிழ் சினிமா இரண்டுக்கும் பெரிய வித்தியாசமோ, வேறுபாடோ இல்லை. தமிழ் சினிமா மிகப்பெரிய துறை, மிகப்பெரிய திரைப்படங்கள் இங்கு எடுக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் நாயகிகளின் திறமைகள் அங்கீகரிக்கப்படுகிறது. நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையான உயரத்தில் இருக்கிறார்கள், அதனால் தமிழ் சினிமா மீது எனக்கு மிகப்பெரிய காதல் உண்டு. தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வர வேண்டும் என்பது என் நீண்டகால ஆசை. தற்போது அது நிறைவேறியிருக்கிறது. பல படங்களில் நடிக்க வேண்டும், நல்ல நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும். தமிழ் சினிமாவில் முக்கிய நாயகிகளில் ஒருவராக உயர வேண்டும், நிச்சயம் அது நடக்கும். 


நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே ‘துடரும்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தது ஏன்?, தமிழ் சினிமாவிலும் அப்படிப்பட்ட வேடங்களில் நடிப்பீர்களா?


துடரும் படத்தில் என் கதாபாத்திரம் சிறியது என்றாலும், அது தான் படத்தின் மையப்புள்ளி, மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதால் நடித்தேன். அந்த படம் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது. மோகன்லால் சார் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில், இதுபோன்ற முக்கிய கதாபாத்திரம் கிடைப்பது சாதாரண விசயம் இல்லை, அந்த படத்தின் கதை கேட்கும் போதே, அந்த கதாபாத்திரம் சினிமாவில் என்னை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. அதேபோல் தான் எனக்கு துடரும் பெரிய அடையாளத்தை கொடுத்தது. தமிழ் சினிமாவிலும் அப்படிப்பட்ட வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். சிறிய வேடம், பெரிய வேடம் என்று நான் பார்ப்பதில்லை, படத்தில் அந்த வேடத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை தான் பார்ப்பேன்.


நீங்கள் நடிக்கும் படங்களில், உங்களது கதாபாத்திரத்தை மெருகேற்ற தனி முயற்சி எடுப்பீர்களா?


அப்படி எதுவும் செய்வதில்லை, முழு திரைக்கதை என்னிடம் கொடுக்கப்பட்டால், அதை முழுமையாக படித்துவிடுவேன், வசனங்களையும் படித்துவிடுவேன். பிறகு இயக்குநர் உடன், என் கதாபாத்திரம் மற்றும் காட்சிகள் பற்றி விவாதிப்பது உண்டு. அப்போது, இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதன்படி மட்டுமே நடிப்பேன். குறிப்பாக வசனங்களை முன்னதாகவே முழுமையாக பல முறை படித்துவிடுவேன். இதனால், நான் நடிக்கும் காட்சி அதிகம் டேக் போவதில்லை. மற்றபடி கதாபாத்திரத்திற்காக எந்த ஆய்வு செய்வது அல்லது தனியாக பயிற்சி செய்ததில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் அப்படி செய்ய வேண்டி சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் செய்வேன்.


எதிர்காலத்தில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?


குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை, அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும், நாயகியாக நடிக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம். பெரிய படங்கள், முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால், சிறிய வேடத்திலும் நடிப்பேன். நான் நடனக் கலைஞர், மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் என்பதால், நடனம் மற்றும் இசையை மையமாக கொண்ட கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. என் நடன திறமையை வெளிக்காட்டும் வகையிலான பாடல்கள் மற்றும் காட்சியமைப்புகள் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.


உங்களுக்கு பிடித்த நடிகர், நீங்கள் இணைந்து நடிக்க விரும்பும் நடிகர்கள் யார்?


எனக்கு அனைத்து நடிகர்களையும் பிடிக்கும், அனைவருடனும் சேர்ந்து நடிக்க வேண்டும், விஜய் சேதுபதி, சிவகார்த்த்கேயன் ஆகியோருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை. சிவகார்த்திகேயனின் காமெடி டைமிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பிடித்த நடிகர்கள் என்றால் எனக்கு சூர்யா சார் மீது கிரஷ் இருந்தது. நான் கல்லூரியில் படிக்கும் போது சூர்யா சாரின் தீவிர ரசிகை. அதனால், அவருடனும் நடிக்க வேண்டும், அதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 


நடிப்பு உங்களுக்கு எப்படி ஆரம்பமானது? முதல் முதலில் உங்களை நடிப்புக்கு ஈர்த்தது எது?


என் குடும்பத்தில் யாரும் சினிமாவில் இல்லை. நான் சிறுவயதில் இருந்தே நடனம், இசை ஆகியவற்றில் ஆர்வமாக இருப்பேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில், நடனம், இசை, நாடகம் என அனைத்திலும் மிக ஆர்வத்துடன் பங்கேற்பேன். அப்போது இருந்தே எனக்கு கலைத்துறையின் மீது ஆர்வம் அதிகம். பிறகு அதுவே நடிப்பு துறையில் நான் ஈடுபட காரணமாகி விட்டது. நடிகையாக வேண்டும் என்ற எனது விருப்பத்திற்கு என் பெற்றோர்கள் ஆதரவு கொடுத்தார்கள், அதனால் தான் சினிமாவில் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி என்னால் பயணிக்க முடிகிறது. 


தமிழ், மலையாளம் தவிர மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் உள்ளதா?


மலையாள சினிமா என்னை நடிகையாக அறிமுகப்படுத்தியது. தமிழ் சினிமா நடிகையாக எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.  மற்ற மொழிகளில் இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். தற்போது மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதுபற்றிய தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.


உங்களது அடுத்த தமிழ்ப் படம் பற்றி..


ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன், அந்த படம் பற்றிய தகவல்களை இப்போது சொல்ல முடியாது. தயாரிப்பு தரப்பு அறிவித்த பிறகே அதைப்பற்றி பேச முடியும். மேலும் சில படங்களில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல இயக்குநர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள்.  விரைவில், என் அடுத்த தமிழ்ப் படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

0 comments:

Pageviews