ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் ஸ்ட்ரீமாகிறது ! sattamum needhiyum


இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற ஹிட் தமிழ் ஓரிஜினல்களுக்குப் பிறகு, தனது அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான **‘சட்டமும் நீதியும்’** சீரிஸை வரும் ஜூலை 18, 2025 அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சென்னை மாநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

திரையுலகில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் நடிகர் சரவணன், தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் அவரது சாதனை இந்நிகழ்வினில் கொண்டாடப்பட்டது. முன்னாள் ஹீரோவாகவும், பின்னர் பல வலிமையான கேரக்டர் ரோல்களால் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்தவர் சரவணன், தற்போது தீவிரமும், உணர்வுகளும் கலந்த நுணுக்கமான நடிப்புடன் மீண்டும் நாயகனாகத் திரும்புகிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV நடித்திருக்கிறார். 

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 

ZEE5 தென்னிந்திய உள்ளடக்கத் தலைவர் கவுஷிக் நரசிம்மன் கூறியதாவது...
“ZEE5 எப்போதும் சமூக உண்மைகளைப் பிரதிபலிக்கும் துணிச்சலான கதைகளைத் தேர்வு செய்து வருகிறது. ‘சட்டமும் நீதியும்’ என்ற இந்த சீரிஸில், நீதியும், மனச்சாட்சியும், துணிச்சலும் எவ்வாறு ஒன்று சேரும் என்பதை, உணர்வுப்பூர்வமாக, நம் வாழ்க்கையோடு இணைந்து காணலாம்.”

சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவானது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.

இந்த சீரிஸ், மனதை உலுக்கும் நீதிமன்ற காட்சிகள், உணர்வுகள் சூழ்ந்த கதாபாத்திரங்கள், மற்றும் சமூக ரீதியாக முக்கியமான ஒரு மெசேஜ் ஆகியவற்றுடன், இந்த ஆண்டின் மிக முக்கியமான தமிழ் ஓரிஜினல் படைப்பாக வெளிவரவுள்ளது.

ZEE5-ல் வரும் ஜூலை 18 முதல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

0 comments:

Pageviews