ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘தி குட் வைஃப்’ வெப்சீரிஸில் தனது திறமையான நடிப்பிற்காக நடிகை ப்ரியாமணிக்கு குவியும் பாராட்டுக்கள்

 

நடிகை ப்ரியாமணி தனது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்து பாராட்டுகள் பெற்று வருகிறார். பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம், ராம் கோபால் வர்மா மற்றும் அமீர் என தமிழ் சினிமாவின் திறமைமிக்க இயக்குநர்களுடன் பணிபுரிந்தது மட்டுமல்லாது வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். 

தேசிய விருது பெற்ற 'பருத்திவீரன்' படத்தில் இருந்து, 'தி ஃபேமிலி மேன்' வெப்சீரிஸில் அவரது துணிச்சலான மற்றும் உணர்ச்சிகரமான கதாபாத்திரம் என பல கதைகளில் தன்னை நிரூபித்துள்ளார். தற்போது, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ’தி குட் வைஃப்’ இணையத்தொடரில் தனது கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார். இந்தத் தொடரில் அவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 

இதுபற்றி நடிகை ப்ரியாமணி பகிர்ந்து கொண்டதாவது, “பார்வையாளர்களிடம் இருந்து அளவில்லாத அன்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இணையத்தொடரை இயக்குநர் ரேவதி மேம் தெளிவுடனும் உறுதியுடனும் எடுத்திருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்தத் தொடரை தமிழில் எடுக்கும்போது பொறுப்புடன் எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். குறிப்பாக இந்தத் தொடரின் இந்தி மற்றும் ஆங்கில வெர்ஷன் மில்லியன் கணக்கான வியூஸ் பெற்றிருக்கிறது. காப்பி அடிக்க வேண்டாம், புதிதாக எதாவது செய்யலாம் என்பதால்தான் நான் ஒரிஜினல் தொடரை இன்னும் பார்க்கவில்லை. 

என்னுடைய நடிப்பு அசலாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். தமிழ் பார்வையாளர்கள் இந்தத் தொடருடன் ஆழமாக இணைவதைப் பார்ப்பது மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார் குழுவினருக்கும், என் சக நடிகர்களான சம்பத், ஆரி அர்ஜுனன் மற்றும் படக்குழுவினர் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி. ‘தி குட் வைஃப்’ எப்போதும் எனக்கு ஸ்பெஷல்!” என்றார்.

சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ’தி குட் வைஃப்’ இணையத்தொடர் வெளியானது. கதையின் தீவிரம், ஈர்க்கும் பரபரப்பான திரைக்கதை மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பிற்காக பாராட்டப் பெற்றது. சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் இந்தத் தொடருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

0 comments:

Pageviews