இன்றைய நவீன உலக கலையின் புது வடிவம் இந்த புதிய அம்பிகாபதி திரைப்படம் - ஈரோஸ் நிறுவனம் விளக்கம்

 

தனுஷ் நடிப்பில் வரும் 2025 ஆகஸ்ட் 1ம்  தேதி,  புதிய பதிப்பாக மீண்டும் திரைக்கு வரவுள்ளது அம்பிகாபதி திரைப்படம்.

இத்திரைப்படத்தின் புதிய கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு இயக்குநர் ஆனந்த் எல் ராய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஈரோஸ் நிறுவனம் இந்த புதிய பதிப்பு முந்தைய படைப்பின் மாற்றமல்ல, கலையின் புது வடிவம் மட்டுமே என விளக்கமளித்துள்ளது. 

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தினை UPSWING  ENTERTAINMENT  PRIVATE LIMITED  நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் சில பகுதிகளை மாற்றி வரும் 2025 ஆகஸ்ட் 1ம்  தேதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் இயக்குநர் ஆனந்த் எல். ராய், அம்பிகாபதி திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை மாற்றியதற்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “கடந்த கால படைப்புகளை மாற்றக் கூடாது. அவை அப்படியே இருக்க வேண்டும்”   AI மூலமாக ஒரு  கடந்த கால படைப்பின்  முடிவை மாற்றுவது என்பது, அப்படைப்பின் உண்மையான ஆன்மாவைச் சிதைப்பதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.  

இதற்கு பதிலளித்துள்ள Eros Media World குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் திவேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"'அம்பிகாபதி' (Raanjhanaa) திரைப்படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்கள் நிறுவனத்திடம் உள்ளது. அதனால், நாங்கள் சட்டப்பூர்வமாகவும் ஒழுங்கு நெறிப்பூர்வமாகவும், இதைப் புதுப்பித்து வெளியிட அதிகாரம் பெற்றுள்ளோம்.

முன்னோடியான தொழில்நுட்பமான ஜெனரேட்டிவ் AI கருவிகள் மூலம், படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்து, புதிய பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில், ஒரே நேரத்தில் அந்த படத்தின் கலையுணர்வையும் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.

இது 'புதிய பதிப்பாக' தனியாகவும், தெளிவாகவும் குறியிடப்பட்டுள்ளது – இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, ஒட்டுமொத்தத்தை மாற்றுவதுமல்ல. இது ஒரு  கலையின் புதிய வடிவம். 

உலக சினிமாவில் இது போன்ற மாற்றுப் பதிப்புகள், director’s cut, anniversary editions போன்றவை வழக்கமாகவே உள்ளன. அதேபோல், இது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும், புதிய தொழில்நுட்பங்களைக் கலையுடன் இணைக்கும் முயற்சியாகவும் பார்க்க வேண்டும்."

 திரையரங்குகளுக்கு வந்த போதே மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தற்போது பல புதுமைகளுடன் புதிய க்ளைமாக்ஸுடன் வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வரும் தேதியை நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

அம்பிகாபதி திரைப்படம் 2025 ஆகஸ்ட் 1 அன்று மீண்டும் திரையிடப்படுகிறது.

0 comments:

Pageviews