மையல் விமர்சனம்
ஆடுகளை களவாடும் மாடசாமி ( சேது) ஒருமுறை ஆடுகளை களவாடி கொண்டு திரும்பும் போது, பொது மக்களின் தர்ம அடியிலிருந்து தப்பிப்பதற்காக ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள கிணற்றில் குதிக்கிறார். அந்தப் பகுதியில் வாழும் மந்திரவாதியின் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான அல்லி ( சம்ரிதி தாரா) கிணற்றில் குதித்த மாடசாமியை காப்பாற்றி, அவருக்கு வைத்தியம் செய்கிறார்.
அவர் அங்கு தங்கி இருக்கும் சில தினங்களில் அல்லி காட்டிய அன்பால் அவளை திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறார். அத்துடன் ஊருக்குச் சென்று திருமணத்திற்கான நகை- புடவை- தாலி- பணத்துடன் திரும்ப வருகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். அதே தருணத்தில் அந்த ஊரில் ஒரு குற்ற சம்பவம் நடைபெறுகிறது.
அதற்கான காவல்துறையின் விசாரணையில் மாடசாமி குற்றவாளியாக்கப்படுகிறார். அதன் பிறகு அவருடைய காதல் திருமணம் நடைபெற்றதா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
மைனா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக மிரட்டலான நடிப்பு தந்த சேது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மையல் படத்தில் சேது ரீ-என்ட்ரி கொடுத்து கதையின் நாயகன் மத்தசாமி கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்.
பாவாடை, தாவணியில் அழகிய நாயகி சம்ரித்தி தாரா அல்லி கதாபாத்திரத்தில் அப்பாவிதனம், கண்டதும் காதல், ஏக்கம் என அனைத்து முகபாவனைகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
வில்லன்களாக பி.எல்.தேனப்பன், இன்ஸ்பெக்டராக சி.எம்.பாலா, சூனியக் கிழவியாக ரத்னகலா, போலீஸ் ஏட்டாக மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணி உட்பட அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள கதைக்கு ஒளிப்பதிவாளர் பாலா பழனியப்பன் ஒவ்வொரு ஃபிரேமும் அழகாக கைப்பற்றியுள்ளார்.
இசையமைப்பாளர் அமர்கீத். எஸ் இசை கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதையோடு பயணிக்க வைக்கிறது.
சமூகப் பிரச்சனையை சொல்லும் வகையில் மண் சார்ந்த வலுவான கிராமத்து பின்னணியில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்களுடன் கதை, திரைக்கதை எழுதி உள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஒரு சாதாரண அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலை நிறுத்தவும் பாதுகாக்கவும் சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவால் அவரது உண்மையான காதல் சிதைவடைவதை கதைக்களமாக எடுத்து சொல்லும் போது திரைக்கதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும். இயக்குனர் ஏபிஜி ஏழுமலை திரைக்கதையில் இவை அனைத்திலும் கூடுதலாக கவனம் செலுத்தி காட்சிப்படுத்தி இருந்தால் நிச்சயம் மையல் மற்றொரு மைனாவாக பேசப்பட்டு இருக்கும்.
0 comments:
Post a Comment