குட் பேட் அக்லி திரை விமர்சனம்
ரெட் டிராகன் என்று அழைக்கப்படும் மும்பை டான் அஜித் குமார் தனது பிள்ளைக்காக ’பேட்’ சுபாவத்தை கைவிட்டுவிட்டு ’குட் ’-ஆக மாறி போலீசில் சரணடைந்து 18 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்கிறார். தண்டனை முடிந்து ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் தனது மனைவி திரிஷா மற்றும் மகனை சந்திக்க செல்லும் அஜித், அங்கு பெரிய பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொண்டு சிறையில் தண்டனை அனுபவிக்கும் தனது மகனை காப்பாற்றுவதற்காக மீண்டும் ’பேட் ’அவதாரம் மட்டும் இன்றி ’அக்லி’ அவதாரமும் எடுப்பவர், மகனை எப்படி காப்பாற்றுகிறார்?, அவரது மகனை சிக்கலில் சிக்க வைத்தது யார்? எதற்காக? என்பதை மாஸாக சொல்வதே ‘குட் பேட் அக்லி’.
அஜித் குமார் தனது ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மாஸ் திருவிழாவை நடத்தியிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவிலும் மாஸ் காட்டியிருப்பவர், வசன உச்சரிப்பு, ஆக்ஷன், மகன் மீதான செண்டிமெண்ட் என அனைத்தையும் அளவாக கையாண்டு அவ்வபோது ரசிகர்களை கைதட்ட வைத்து விசில் அடிக்க வைக்கிறார்.
அஜித்தின் மனைவியாக நடித்திருக்கும் திரிஷாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றாலும், படம் முழுவதும் வருகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், ஜானி மற்றும் ஜாமி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் மிரட்டியிருக்கிறார். சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு ஆகியோரது திரை இருப்பும், சிம்ரன், சைன் டாம் ஜாக்கோ ஆகியோரது சிறப்பு தோற்றமும் கமர்ஷியல் அம்சங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் அஜித்தை அனுஅனுவாக ரசித்து காட்சிகளை படமாக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பழைய பாடல்கள் ரீமேக் செய்யப்பட்ட விதம் ஆட்டம் போட வைக்கிறது. படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டியின் பணி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் என்ற மாஸ் ஹீரோவை வைத்து மாபெரும் மாஸ் திருவிழா நடத்தியிருக்கிறார். இயக்குநராக அல்லாமல் அஜித்தின் ரசிகராக அவர் நிற்பது, நடப்பது, சிரிப்பது, முறைப்பது, காதலிப்பது, கவலைப்படுவது, கார் ஓட்டுவது என அனைத்தையும் ரசித்து ரசித்து காட்சிகளை வடிவமைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
0 comments:
Post a Comment