காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்

 

கணவரைப் பிரிந்து மகளுடன் வாழ்ந்து வருகிற லெஷ்மிக்கு பெண்ணியவாதி, யூ டியூபர் என தனித்துவமான அடையாளங்களும் அங்கீகாரங்களும் இருக்கிறது. ஒரு கட்டத்தில் தன் மகள், ஒருவரை காதலிப்பதாக சொல்ல மறுப்பின்றி ஏற்கும் அவர், காதலனை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்கிறார். மகள் அழைத்து வருவது காதலனாக இல்லாமல் காதலியாக இருக்க, அதிர்ந்து போகிறார்.


‘நீ செய்வது தவறு’ என மகளிடம் லெஷ்மி கொதித்துக் கொந்தளித்து, அடித்து ஆர்ப்பாட்டம் செய்ய,


மகள் ‘இதுதான் என் உணர்வு; என்னால் ஒரு ஆணை வாழ்க்கைத் துணையாக ஏற்க முடியாது’ என பிடிவாதம் பிடிக்க, வாக்குவாதம் முற்றுகிறது.


அதன் விளைவுகள் அடுத்தடுத்த காட்சிகளாய் விரிய, எல்லோராலும் ஏற்க முடியாவிட்டாலும் இதுதான் நடக்கும் என எதிர்பார்த்தபடியே இருக்கிறது கதையின் முடிவு.


கதைநாயகியாக ‘ஓரினச் சேர்க்கை’யாளராக லிஜோமோல் ஜோஸ். தனது விருப்பத்தை தாயிடம் தயங்கித்தயங்கி சொல்வதில் தொடங்கி, தான் எடுத்த முடிவை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என பிடிவாதம் காட்டுவது, வரை உணர்வுகளின் கலவையாக களமாடியிருக்கிறது அந்த மலையாள மல்கோவா. எத்தனை சொல்லியும் தன் மனதைப் புரிந்துகொள்ள அப்பா அம்மாவை அதிரவைப்பதற்காக கிளைமாக்ஸில் அவர் செய்யும் விஷயம் ஆடியன்ஸையும் அதிரவைக்கும்; சிலருக்கு கிளுகிளுப்பு உணர்வும் தூண்டப்படலாம்.


லெஷ்மியாக ரோகிணி. பெண்ணியவாதியாக இருந்தாலும் மகளின் விருப்பத்தை ஏற்க முடியாத சராசரி மனுஷியாக மாறி அவர் காட்டும் பாசம், தவிப்பு, கோபம், இயலாமை எல்லாவற்றிலும் தேர்ந்த நடிப்பின் பிரதிபலிப்பு தெரிகிறது.


‘மகளை எப்படியாவது மாற்றிவிடலாம்; அவளை விரும்பியவனுக்கு மணமுடித்து வைக்கலாம்’ என்ற நினைப்பில், பேச்சின் மூலம் காய் நகர்த்தும்போது அழுத்தமான நடிப்பால் கவர்கிறார் நாயகியின் அப்பாவாக வருகிற வினித்.


நாயகியின் ஜோடியாக வருகிற அனுஷா பிரபா இயல்பான நடிப்பைத் தந்திருக்க, அவரது பிளாஷ்பேக் சற்றே கலங்கடிக்கிறது.


நாயகியைக் காதலித்து, அது நிறைவேறாது என தெரிந்தபின், அவளது காதல் நிறைவேற தன்னால் இயன்றதை ஈடுபாட்டுடன் செய்கிற கனமான பாத்திரத்தில் காலேஷின் நடிப்பு கச்சிதம்.


பெரும்பாலும் அழுது புலம்பி, கத்திக் கதறுகிற கேரக்டர்களை சுமக்கிற தீபாசங்கருக்கு கதையின் ஒரு பகுதியை தாங்கிப் பிடிக்கிற வேலை. முதலாளியம்மா தரும் கூலியைத் தாண்டிய அன்பளிப்பை மறுக்குமிடத்தில் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பில் எளிமையும் எதார்த்தமும் சரி விகிதத்தில் பின்னிப் பிணைந்திருக்கிறது.


நாகரிக வளர்ச்சியும் காலமாற்றமும் ஆண் பெண் உறவில் உருவாக்கிவரும் தடுமாற்றங்களை மையப்படுத்திய வில்லங்க விவகார கதையை கையிலெடுத்து, அதை விரசமில்லாமல் ஆபாசம் தட்டாமல் படமாக்கியிருப்பதற்காக இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனை பாராட்டலாம்.

0 comments:

Pageviews