ராஜபீமா திரை விமர்சனம்
சிறுவன் ராஜா அம்மாவை இழந்து மனவேதனையில் இருக்கிறான். அந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஆறுதல் தரும் விதமாக ஒரு யானையுடன் தொடர்பு உருவாகிறது. ராஜாவுக்கு யானையையும், யானைக்கு ராஜாவையும் பிடித்துப் போக, ராஜாவின் அப்பா யானையை வீட்டில் வைத்து வளர்க்க முடிவெடுக்கிறார். அதற்கான முறையான அனுமதியும் பெறுகிறார். யானைக்கு பீமா என பெயர் வைக்கப்படுகிறது. ராஜாவும் பீமாவும் உயிருக்கு உயிராக பழகுகிறார்கள். ராஜா வளர்ந்து வாலிபனாகிறான்.
ஒரு கட்டத்தில் ராஜா, யானைகளைக் கொன்று தந்தம் கடத்துபவர்களை காட்டிலாக்கா அதிகாரியிடம் பிடித்துக் கொடுக்கிறான். கொஞ்ச நாட்கள் கடந்தபின், மதம் பிடித்துள்ளது என்று சொல்லி அரசு அதிகாரிகள் பீமாவை புத்துணர்வு முகாமுக்கு அதிரடியாக அழைத்துப் போகிறார்கள். ராஜா பதறியடித்துக் கொண்டு முகாமுக்கு ஓடினால், பீமா அங்கு இல்லையென்பது தெரியவருகிறது. பீமா காணாமல் போனதற்கு யார் காரணம்? காணாமல் போன பீமாவுக்கு என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை
ஆரவ் மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களோடும் இருக்கிற அவர் யானை மீது பாசம் காட்டும்போது நெகிழ வைக்கிறது. ஆஷிகா நெர்வாலுக்கு சினிமா வழக்கப்படி ஹீரோவை காதலிக்கிற பழகிப்போன வேலைதான் என்றாலும் அதை உணர்வுபூர்வமாக செய்திருப்பதை பார்க்க முடிகிறது.
ஜோதிடத்தை நம்பி எதையும் செய்யத் தயாராக இருப்பவராக, அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு முதலமைச்சர் பதவிக்கு ஸ்கெட்ச் போடுபவராக பல வில்லங்கமான பொறுப்புகள் கே எஸ் ரவிக்குமாருக்கு. தினமும் ஒரு நிறத்தில் துண்டு போட்டுக் கொண்டு வலம் வருகிற அவர் தன் பாத்திரத்துக்கு தேவையான வில்லத்தனத்தை பாஸ்மார்க் போடுகிற அளவுக்கு பரிமாறியிருக்கிறார்.
அமைச்சரின் வளர்ப்பு மகனாக வருகிற யோகிபாபு ‘பொள்ளாச்சியின் பிரதமர்’ என அல்லக்கைகளால் கொண்டாடப்படுகிற அளவுக்கு காட்டுகிற பந்தா கலகலப்புக்கு உதவுகிறது. ஓவியா ஒரு பாடலுக்கு கலர்ஃபுல் உடைகளில் கவர்ச்சி ததும்ப ரசிக்கும்படி ஆடிவிட்டுப் போகிறார். பீமாவாக வருகிற யானையின் ஒவ்வொரு அசைவும் கண்களை உற்சாகமாக்கி மனதில் இடம்பிடிக்கிறது.
ராஜபீமா கண்டிப்பாக பார்க்கலாம்.
0 comments:
Post a Comment