வணங்கான் திரை விமர்சனம்
பேச்சு திறன் மற்றும் கேட்கும் திறன் இல்லாதவரான அருண் விஜய், தனது தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். கிடைக்கும் வேலைகளை செய்து வரும் அருண் விஜய், தன் கண்ணெதிரே எந்த தவறு நடந்தாலும், அதை செய்வது யாராக இருந்தாலும், அவர்களுக்கு முரட்டுத்தனமான தண்டனை வழங்கக் கூடிய சுபாவம் கொண்டவர். அவரது கோபத்தை குறைப்பதற்காக அவருக்கு ஒரு நிரந்த வேலைக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்யும் அவரது நல விரும்பிகள் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில் காவலாளி வேலை வாங்கிக் கொடுக்கிறார்கள். தன்னைப் போன்று உடலளவில் குறைபாடு இருந்தாலும் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு மத்தியில் சகோதரனாக தனது பணியை செய்து வரும் அருண் விஜய், அங்கு நடக்கும் ஒரு அநீதியைக் கண்டு கடும்கோபம் கொள்வதோடு, அதை செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கிறார். அதன் மூலம் அவரது வாழ்க்கை என்னவானது? என்பதை தனது வழக்கமான பாணியில் இயக்குநர் பாலா சொல்வதே ‘வணங்கான்’.
கோட்டி என்ற கதாபாத்திரத்தில் முரட்டுத்தனமும், கடும் கோபமும் கொண்ட இளைஞராக அருண் விஜய் மிரட்டியிருக்கிறார். வசனம் ஏதும் பேசாமல் தனது உடல் அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலமாகவே பல உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்தியிருப்பதோடு, கடுமையாகவும் உழைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷின் அறிமுகம் அமர்க்களமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் நாயகனை ஒருதலையாக காதலிப்பது, அவரது முரட்டுத்தனத்தை ரசிப்பது, அவருக்காக கண்ணீர் சிந்துவது, என பார்வையாளர்களின் மனதில் ஒட்டாமல் ஓடிவிடுகிறார்.
அருண் விஜயின் தங்கையாக நடித்திருக்கும் ரிதா, அண்ணனின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களையும் கலங்க வைத்துவிடுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரது திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம்.
எளிய மக்களையும், அவர்களது வாழ்க்கை மற்றும் வலிகளை திரையில் கொண்டு வருவதோடு, அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து நிற்கும் நாயகனையும் எளிய மக்களின் ஒருவனாக சித்தரித்து அவர்களை முன்னிலைப்படுத்துவதை தொடர்ந்து செய்து வரும் இயக்குநர் பாலா, தனது கதாபாத்திரங்களின் கடும் கோபத்தை இரத்தம் தெறிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தாலும், அதை எதார்த்தமான காட்சிகளின் மூலம், சில இடங்களில் கலகலப்பாகவும் கையாண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
0 comments:
Post a Comment