மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும் 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 

தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில், 'அகில உலக சூப்பர் ஸ்டார்' மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படம் டிசம்பர் 13 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார். 


'சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன்,  ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் - ஹரி‌ ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் தங்கராஜ் பேசுகையில், ''தயாரிப்பாளர் சி வி குமார் நிறைய பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என பலரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் எனக்கு சி வி குமார் மீது நம்பிக்கை இருந்தது. தமிழ் சினிமாவில் அவருடைய நிறுவனம் பெரிய தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றது. எனக்குத் தெரிந்து 26 படங்களுக்கு மேல் தயாரித்திருப்பார். சினிமாவில் ஒரு திரைப்படத்தை தயாரித்து அதனை வெளியிடுவதே கஷ்டமாக இருக்கும் சூழலில் 26 படங்களை அவர் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். அதுவும் மதுரையிலிருந்து ஒரு சாதாரண மனிதனாக சென்னைக்கு வந்து, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருபதிற்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து  வெளியிட்டிருக்கிறார் என்றால்.

 ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து இருப்பார். ஆனால் அவர் அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து என்னால் மீண்டும்  பட தயாரிப்பில் இறங்க முடியும் என்பதை 'சூது கவ்வும் 2' படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இதை வெற்றிப்படமாக மாற்ற உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.


நடிகர் கருணாகரன் பேசுகையில், ''அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 'சூது கவ்வும்' படத்தில் நடிக்கும் போது அது என்னுடைய மூன்றாவது படம். 'சூது கவ்வும் 2' படத்தில் நடிக்கும் போது நூறு படங்களை நிறைவு செய்து விட்டேன். இதற்கு தயாரிப்பாளர் சி வி குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் புதுமுக இயக்குநர்களையும், நடிகர்களையும் நம்பி வாய்ப்பை வழங்குவார். என் மீது அவர் வைத்த நம்பிக்கைக்கு இந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ் போன்ற முன்னணி இயக்குநர்களை அறிமுகப்படுத்தியது அவர்தான்.  என்றும் நாங்கள் திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மாணவர்கள் தான்.

'சூது கவ்வும்' படத்திற்கு எப்படி பேராதரவு அளித்து வெற்றி பெற செய்தீர்களோ 'சூது கவ்வும் 2' திரைப்படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும். முதல் பாகத்திற்கும் இரண்டாவது பாகத்திற்கும் ஏராளமான கனெக்ஷன் இருக்கிறது. இந்தத் திரைப்படம் காமெடி ஜானரில் உருவாகியிருக்கிறது. நான் மிர்ச்சி சிவாவின் மிகப்பெரிய ரசிகன், அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. இந்த மேடையில் அவருடைய பேச்சை கேட்பதற்காகத்தான் பாண்டிச்சேரியில் இருந்து இங்கு வருகை தந்திருக்கிறேன். நான் நடித்த முதல் படமான 'கலகலப்பு' படத்தின் ஹீரோ அவர். அவருடன் இணைந்து மீண்டும் இந்த படத்தில் பணியாற்றியது சந்தோஷம். படத்தின் இயக்குநரான அர்ஜுன் கடும் உழைப்பாளி. அவருக்கு இந்த திரைப்படம் பெரிய வெற்றியை தர வேண்டும்,'' என்றார்.


நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், ''இந்தப் படத்தில் எனக்கு சந்தோஷமான விசயம் ஒன்றும், மறக்க முடியாத விஷயம் ஒன்றும் நடந்தது. சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தில் கருணாகரனின் அப்பாவாக நடித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த படத்திலும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். வாகை சந்திரசேகருடன் 40 ஆண்டுகால நட்பு இருந்தாலும் இந்த படத்தில் தான் அவருடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கிறேன்.

டிசம்பர் 28ம் தேதி படப்பிடிப்பில் இருந்தபோது நானும், வாகை சந்திரசேகரும் உணவு அருந்த தயாராகி கொண்டிருந்த போதுதான் கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு செய்தி கிடைத்தது. அதன் பிறகு நாங்கள் சாப்பிடவே இல்லை. மனசு சரியில்லை. கட்டுப்பாட்டை மீறி அழ தொடங்கினேன். நான் ஒருபுறம் அழுது கொண்டிருக்கிறேன். மறுபுறம் மாமா வாகை சந்திரசேகர் அழுது கொண்டிருக்கிறார். தவிர்க்க முடியாத காரணத்தினால் அடுத்த நாள் டிசம்பர் 29ம் தேதி அன்று கேப்டனின் இறுதி சடங்கில் கலந்து கொண்டோம். எத்தனையோ நபர்களை வாழவைத்த கேப்டன் விஜயகாந்தின் ஆசி இப்படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நிச்சயம் உண்டு. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று அவரது ஆன்மாவிடம் கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


நடிகர் வாகை சந்திரசேகர் பேசுகையில், ''திரையுலகத்திற்கு வருகை தந்து 45 ஆண்டுகள் ஆகிறது. 45 ஆண்டு காலமாக நான் சந்தித்து வரும் நண்பர்கள் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இவர்களை சந்திக்கும் போது எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் நினைவுக்கு  வருகிறது. இப்படத்தின் நாயகன் சிவா படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் எதார்த்தமாக இருப்பதுடன் அவர் இருக்கும் இடத்தில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கரையும் எனக்கு 45 ஆண்டு காலமாக தெரியும். அவர் பாரதிராஜா படத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறார். அதனால் இந்தப் படத்தில் மகிழ்ச்சியுடன் பணியாற்றினேன். தயாரிப்பாளர்கள் சி.வி குமாரும், தங்கராஜும் எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இந்த தலைமுறை நடிகரான சிவாவுடனும், எங்கள் தலைமுறை நடிகர்களான ராதாரவி-  எம்.எஸ். பாஸ்கர் உடனும் நடித்திருக்கிறேன். நான் அரசியல் கட்சி ஒன்றில் இருந்தாலும், அரசியலில் இருந்தாலும், அரசு பதவியில் இருந்தாலும் இன்றும் நான் ஒரு கலைஞராகவே இருக்கிறேன். ஊரிலிருந்து சென்னைக்கு ஓடி வந்தது நடிகனாக வேண்டும் என்றுதான். இன்று வரை அதற்கான வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர்கள்- இயக்குநர்கள்-  ஊடகங்கள்-  மக்கள்-  ஆகிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


அர்ஜுன் ஒரு அற்புதமான இயக்குநர். படப்பிடிப்பு தளத்தில் எந்தவித பதட்டமும் இல்லாமல் இயல்பாக காட்சிகளை விளக்கி எங்களிடமிருந்து நடிப்பை வாங்கினார். அவருக்கு ஒளிப்பதிவாளர் பக்க பலமாக இருந்தார். சோர்வு தெரியாமல் விரைவாக பணியாற்றினார்கள். இந்தப் படத்தை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. ஆனாலும் டப்பிங் பேசும்போது என் கேரக்டர் நன்றாக இருந்தது. நல்ல கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி இருக்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் பெரிய வெற்றியை பெறுவார். எனக்குத் தெரிந்து தயாரிப்பாளர்களின் இயக்குநர் என பெயர் பெற்ற ராம. நாராயணன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரின் வரிசையில் எஸ்.ஜே . அர்ஜுன் இடம் பெறுவார்.  


சிவா மிகப்பெரிய புத்திசாலி. வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்தவர். வாழ்க்கையில் போராட்டத்தை உணர்ந்தவர். அவரிடமிருந்தும் சில விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.


இந்த படத்தை தொடர்ந்து இந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களிலும் இந்த இயக்குநர் இயக்கும் படங்களிலும் நான் இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக காத்திருக்கிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய அனைவருக்கும் நன்றி,'' என்றார்.


படத்தின் தயாரிப்பாளர் சி. வி. குமார் பேசுகையில், ''சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தை எடுக்கும் போதே சூது கவ்வும் 2 ஐடியா இருந்தது. சூது கவ்வும் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் நலனிடம் கேள்வி ஒன்றைக் கேட்டேன். இந்த திரைப்படம் மரபுக்கு மீறியதாக இருக்கிறது.  இது தொடர்பாக விமர்சனங்கள் வருமே எனக் கேட்டேன். அவரும் இந்த திரைப்படத்தை நிச்சயமாக விமர்சனம் செய்வார்கள் என்றார். அவர் சொன்னது போல் இந்த படம் வெளியான பிறகு மக்கள் கொண்டாடினார்கள். ஆனால் ஊடக நண்பர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் தவறான முன்னுதாரண படம் என நிறைய விமர்சித்தார்கள். அப்போது அவர்களிடம் இதை நான் ஒரு படமாக உருவாக்கவில்லை. மூன்று படமாக மூன்று பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம். இந்தப் படத்திற்குப் பிறகு 'சூது கவ்வும் 2' என்று எடுக்க வேண்டும் அதற்கு பிறகு மூன்றாவது பாகமாக 'சூது கவ்வும் -தர்மம் வெல்லும்' என்ற பெயரில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதான் இது நிறைவு பெறும் என விளக்கமும் கொடுத்தேன்.


நலன் குமாரசுவாமியிடம் இது தொடர்பாக பேசும் போது ஒரு கட்டத்தில் சூது கவ்வும் 2 '

படத்திற்கான கதையை எழுத முடியவில்லை என்றும், சில ஆண்டுகள் கழித்து இதை மீண்டும் உருவாக்கலாம் என்றும் சொன்னார். 'காதலும் கடந்து போகும்' படத்தை தொடங்குவதற்கு முன் 'சூது கவ்வும் 2' என்று தான் அந்த படத்தை தொடங்கினேன். காதலும் கடந்து போகும் படத்தை நிறைவு செய்த பின் நலன் குமாரசாமியிடம் மீண்டும் 'சூது கவ்வும் 2 ' எப்போது தொடங்கப் போகிறோம் என கேட்டேன்.  அப்போது அவர் மற்றொரு தயாரிப்பு நிறுவனத்திற்காக 'வா வாத்தியார்' என்ற பெயரில் ஒரு திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன் என சொன்னார். அத்துடன் நம் குழுவுடன் 'சூது கவ்வும் 2' படத்தின் கதையை எழுதத் தொடங்குங்கள் என்றார். அந்தத் தருணத்திலேயே அவர் சூது கவ்வும் 2 படத்தின் கதை எப்படி இருக்க வேண்டும் என்பதை சுருக்கமாக சொன்னார்.


சூது கவ்வும் 2 படத்தின் திரைக்கதையை யாரால் சரியாக எழுத முடியும் என்று நினைத்தபோது அர்ஜுன் வந்தார். அப்போது அவர் 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை', மற்றும் 'ராட்சசன்' படத்தின் திரைக்கதையில் பங்களிப்பு செய்திருந்தார். அவரிடம் நல்ல காமெடி சென்ஸ் உண்டு. அதன் பிறகு ஒரு குழுவை உருவாக்கி 2019ம் ஆண்டில் இப்படத்தின் திரைக்கதையை எழுதத் தொடங்கினோம்.

தமிழ் சினிமாவில் தற்போது பார்ட் 1 பார்ட் 2 பார்ட் 3 என பல படங்கள் வந்திருக்கிறது. சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் அதே கதாபாத்திரங்கள் 25 வருடங்களுக்குப் பிறகு என்று இருந்தது. இதுவும் அதே போன்றதொரு படம்தான். டைட்டில் மட்டும் வைத்துக்கொண்டு வேறு கதை வேறு ஹீரோ என்பது போல் இல்லை. சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் தான் இந்த இரண்டாம் பாகத்திலும் இருக்கிறார்கள்.


2013ம் ஆண்டில் சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தை எடுத்தோம். 'சூது கவ்வும் 2' திரைப்படம் 1990களில் தொடங்கி 2013 கடந்து 2024 ஆண்டில் எப்படி இந்த கதை தொடர்கிறது என்பதுதான் நலன் குமாரசாமி கொடுத்த ஐடியா. அத்துடன் நலன் குமாரசாமி 'சூதுகவ்வும்- தர்மம் வெல்லும்' என்ற பெயரில் சூது கவ்வும் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தால் தான் சூது கவ்வும் 2 படத்திற்கான அனுமதியை வழங்குவேன் என்றார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந்தத் திரைப்படம் தான் முதல் 'ட்ரையாலஜி' யாக இருக்கும். நலன் குமாரசாமி - 'சூதுகவ்வும் -தர்மம் வெல்லும்' என்பது வரை இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார்.


சூது கவ்வும் படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு இந்தப் படத்திற்கு யார் கதாநாயகன் என்று கேள்வி எழுந்த போது, அவர் லொள்ளு சபாவில் நடித்த மனோகரை தான் கேட்டார். அவரை சொன்னவுடன் நான் முதலில் தயங்கினேன். விஜய் சேதுபதியிடம் இந்த கதையை சொன்னவுடன் அவர் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். இதை நலன் குமாரசாமியிடம் சொன்னபோது அவர் உடனடியாக மறுத்தார். அதன் பிறகு அவரை சமாதானம் செய்வதற்கு எங்களுக்கு ஒரு வாரம் ஆனது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அந்த கதாபாத்திரத்தை தன்னுடைய நடிப்புத் திறமையால் தனித்துவமாக தெரிய செய்தார். அது மிகச்சிறந்த கல்ட் திரைப்படமாக உருவானது.


அந்தப் படத்தில் எப்படி விஜய் சேதுபதி பொருத்தமாக இருந்து வெற்றி பெறச் செய்தாரோ... அதேபோல் இந்த படத்தில் குருநாத் என்ற கதாபாத்திரத்திற்கு அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா தான் பொருத்தமாக இருப்பார்.  இந்த கதாபாத்திரம் அசாதாரணமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை அவரால் மட்டுமே ஏற்று நடிக்க முடியும் என தீர்மானித்தோம்.


சூது கவ்வும் படத்தை பொருத்தவரை அருமை பிரகாசம் தான் கதையின் நாயகன். மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் அவரை சுற்றி பின்னப்பட்டிருக்கும். இதுதான் நலன் குமாரசாமி சொன்னது. படத்தின் திரைக்கதையை எழுதும்போது கருணாகரனிடம் அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன்.


2017ம் ஆண்டுக்குப் பிறகு எனக்கு ஏழு ஆண்டுகள் கடுமையான நிதி சிக்கல் இருந்தது. இந்த திரைப்படத்தின் கதை நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. இதை அதற்குரிய தரத்துடன் உருவாக்கினால் தான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எண்ணிய போது இதற்காக தங்கம் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான தங்கராஜை அணுகி உதவி செய்யுங்கள் எனக் கேட்டேன். அவரிடம் என்னைப் பற்றி பலர் தவறாக சொன்னாலும்.. என் மீது முழு நம்பிக்கை வைத்து, ஆறு கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து, படத்தினை உருவாக்கி இருக்கிறார். மேலும் 2 கோடி ரூபாய் செலவு செய்து பணத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார். தற்போது இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட முயற்சி செய்து வருகிறோம்.


இந்தத் திரைப்படத்தின் மூலம் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி என இரண்டு இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறோம்.  


இந்தப் படத்தில் வாகை சந்திரசேகர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் விசேஷமானது .அதை பற்றி தற்போது நிறைய விவரங்களை கூற முடியாது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆளுமை மிக்க நட்சத்திரம் முகம் தேவைப்பட்டது. அதற்காக அவரை தேர்வு செய்தோம். அவரும் அதை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்.


இயக்குநர் அர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதைக்காக மூன்றாண்டுகளை எடுத்துக் கொண்டார். 2019ம் ஆண்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது. 2022ம் ஆண்டில் திரைக்கதையை நிறைவு செய்தார். 2023ம் ஆண்டில் படப்பிடிப்பு நடைபெற்றது.


நீண்ட நாட்கள் கழித்து என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் உருவான இந்த திரைப்படத்தை பார்க்கும் போது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. இதைப் பற்றி பேசலாம் என்ற நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. இந்த திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தத் திரைப்படம் என்னுடைய நிறுவனத்தில் இருந்து வெளியாகும் 21வது திரைப்படம். 20 திரைப்படங்களுக்கு வழங்கிய ஆதரவை இப்படத்திலும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் பேசுகையில், ''முண்டாசுப்பட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அந்தப் படத்திற்கு சி வி குமார் சார்தான் தயாரிப்பாளர். அதன் பிறகு ராட்சசன் படத்தின் திரைக்கதை எழுதினேன். மார்க் ஆண்டனி படத்திற்கு திரைக்கதையில் உதவி செய்தேன். 13 ஆண்டு காலம் நிறைவடைந்து விட்டது. அதன் பிறகு மீண்டும் சி வி குமார் சார் அழைப்பு விடுத்தார். சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதுங்கள் என கேட்டுக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். இதை என் நண்பர்களிடம் சொன்னபோது அனைவரும் என்னை பயமுறுத்தினார்கள்.  ஆனால் நான் பயப்படவில்லை ஏனென்றால் அப்போது எனக்கு எந்த வேலையும் இல்லை. சும்மா இருப்பதை விட இந்த வேலையை செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேன்.  இந்தப் படத்தில் 'வாய்ப்புல இருக்கிற பிரச்சினைய பார்க்காதே...அந்த பிரச்சனைக்குள்ள இருக்கிற வாய்ப்ப பாரு..' என  டயலாக் வரும். அதனால் கதை எழுத தொடங்கினோம். சி வி குமாரின் தயாரிப்பு நிறுவனம் என்பது கடினமானது தான்.


பொதுவாக இரண்டு விதமான பெற்றோர்கள் உண்டு. தன்னுடைய பிள்ளை எந்த கஷ்டமும் படக்கூடாது என்பதற்காக எல்லா வசதிகளையும் செய்து தருவார்கள். அதனால் அந்த பிள்ளை என்ன கேட்டாலும் அதை வாங்கி கொடுத்து வளர்ப்பார்கள். இது ஒரு வகை. மற்றொரு வகையான பெற்றோர்களும் உண்டு அதாவது தான் படும் கஷ்டத்தை மகனுக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் அவர்கள் படும் கஷ்டத்தை பையனுக்கு தெரியப்படுத்துவார்கள். பையனும் தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து வளர்வான். இது போன்றது தான் சி.வி குமாரின் தயாரிப்பு நிறுவனம். ஆனால் சிவி குமாரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவானவர்கள் தயாரிப்பாளர்களின் வலியினை புரிந்து கொண்டவர்கள். சினிமாவின் யதார்த்தத்தை இங்குதான் உணர முடியும். கார்த்திக் சுப்பராஜ் போன்றவர்கள் இங்கிருந்து சென்று இன்று வெற்றிகரமான இயக்குநர்களாகவும், தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள் என்றால் இங்கு அவர்களுக்கு சி.வி குமார் கொடுத்த பயிற்சிதான் காரணம். 


சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு இந்த கதைக்கு யார் பொருத்தமான ஹீரோவாக இருப்பார் என்று கேள்வி எழுந்தது. எந்த அளவுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய கதாபாத்திரம் அது. அதற்கு மிர்ச்சி சிவா தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்தோம். அவர் படப்பிடிப்பு தளத்திலும் ஜாலியாகவே இருப்பார். இந்தப் படத்தில் குருநாத் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இதனை திரையரங்குகளில் காணும் ரசிகர்கள் நிச்சயமாக ரசிப்பார்கள்.


எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், வாகை சந்திரசேகர், கருணாகரன் என ஒவ்வொருவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.


சூது கவ்வும் பாடத்தின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே கதாபாத்திரம் டாக்டர் கதாபாத்திரம் தான். அதில் அருள்தாஸ் அற்புதமாக நடித்திருக்கிறார்.


இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயமாக கவரும்,'' என்றார்.


நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில், ''எங்கே இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. பாய்ஸ் ஹாஸ்டலில் இருப்பது போல் இருக்கிறது. அதற்காக படத்தின் ஹீரோயின் இல்லை என்று நினைக்காதீர்கள். ஹீரோயின் கதாபாத்திரம் கற்பனையான கதாபாத்திரம். அதனால் இங்கும் ஹீரோயின் இருக்கிறார்கள் ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை.


சி வி குமார் சாரை அலுவலகத்தில் சந்தித்தபோது 'சூது கவ்வும் 2' படத்தை உருவாக்கவிருக்கிறோம் என்றார். அதை சொன்னவுடன் எனக்குள் சூது கவ்வும் நல்ல படமாச்சே, அதை ஏன் இரண்டாம் பாகம் எடுக்கிறார்கள் என்று தோன்றியது. அதாவது அந்த நல்ல படத்தை ஏன் மீண்டும் எடுக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கேள்வியாக இருந்தது. அதில் நான் நடிக்கிறேன் என்றாலும்... அப்போது இயக்குநர் அர்ஜுன் இந்த திரைப்படம் சூது கவ்வும் திரைப்படத்தின் ப்ரீகுவலாக உருவாகிறது. அதன் பிறகு தற்போதைய படத்துடன் தொடர்பு ஏற்படும் என்றார். அத்துடன் அதற்காக அவர் சொன்ன திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  அந்த கதைக்குள் நான் வருவது, கருணாகரனை சந்திப்பது, என பல சுவாரசியமான திருப்பங்கள் இருந்தன. அதன் பிறகு இப்படத்தின் பணிகளை தொடங்கினோம்.


தயாரிப்பாளர் சி வி குமார் தமிழ் திரை உலகிற்கு ஏராளமான புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பா. ரஞ்சித் - நலன் குமாரசாமி - கார்த்திக் சுப்பராஜ்-  போன்றவர்களை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


நிதி சிக்கல் குறித்து தயாரிப்பாளர் பல மேடைகளில் கண் கலங்கி பேசி இருப்பதை பார்த்திருக்கிறேன். சினிமாவை நேசிப்பவர்களை சினிமா கைவிடாது என்பார்கள். சினிமாவை அவர் அளவு கடந்து நேசிப்பதால் தான் நான் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். நாம் இதுவரை என்டர் தி டிராகன் படத்தை பார்த்திருக்கிறோம். அவர் இப்போது ரிட்டன் தி டிராகன் ஆக வருகை தந்திருக்கிறார்.


'சூது கவ்வும் - தர்மம் வெல்லும்' என்று அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக சொன்னார். ஆனால் அந்த படத்தில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்று சொல்லவில்லை. இருந்தாலும் அந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன்.


இந்த படத்திற்கு மற்றொரு தயாரிப்பாளர் தங்கராஜ். அவர் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். அதனால் படப்பிடிப்பு நடைபெறும் போது வயிறார உணவளித்தார். அவர் பெயரைப் போலவே தங்கமான மனதுடையவர். இந்தப் படத்தைப் பற்றி எல்லோரிடமும் பாசிட்டிவாக பேசக்கூடியவர். அவருடைய ஒத்துழைப்பிற்கு நன்றி.


இந்தத் திரைப்படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர், கருணாகரன், வாகை சந்திரசேகர், அருள்தாஸ் என அனைவருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். அதிலும் குறிப்பாக வாகை சந்திரசேகர் உடன் இணைந்து நடிக்கிறேன் என்று என் அம்மாவிடம் சொன்னேன். அவர் ஆச்சரியப்பட்டு அவருடன் நடிக்கிறாயா? அவர் நல்ல தமிழ் பேசுவாரே..! என்றார். 'ஒரு தலை ராகம்' படத்திலிருந்து இன்று வரை அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமா மீது அவர் வைத்திருக்கும் அன்பும், நேசமும் இதன் மூலம் தெரிகிறது. அவரைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


கருணாகரன் கொடுத்த பில்டப் சற்று அதிகம். என்னுடைய பேச்சை கேட்பதற்காக பாண்டிச்சேரியில் இருந்து வந்திருக்கிறேன் என்றார். அவர் பாண்டிச்சேரியில் எப்படி இருந்தார் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவரும் ஒரு திறமையான நடிகர். அவருடைய முதல் படம் கலகலப்பு. அதில் நானும் அவருடன் இணைந்து நடித்தேன். படப்பிடிப்பு தளத்தில் சந்திக்கும் போது நாமெல்லாம் எப்போதும் பரபரப்பாக இருக்க வேண்டும் என சொல்வார்.  அந்தப் படப்பிடிப்பு தளத்தில் நான்- கருணாகரன் -யோகி பாபு ஆகிய மூவரும் ஒன்றாக தான் இருப்போம். இன்று யோகி பாபு நடித்த படத்தை அவரே திரையரங்கத்திற்கு சென்று பார்க்க முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார். அதைவிட சந்தோஷம் கருணாகரன் நூறு  படங்களில் நடித்திருக்கிறார் என்று அவர் சொன்னது. அவர் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை படத்தொகுப்பாளர் என அனைவரும் திறமையான கலைஞர்கள்.  


இந்த திரைப்படத்தின் திரைக்கதையை மூன்று வருடமாக எழுதினார்கள் என்றார்கள். அதெல்லாம் கிடையாது. டைட்டானிக், அவதார் போல் எடுக்கவில்லை. இரண்டு வருடம் கோவிட்.  அதனால் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. இதுதான் உண்மை. மூன்று வருடம் திரைக்கதையை எழுதினால் அவதார், டைட்டானிக் போன்று படம் எடுக்க வேண்டும். அதுபோல் இல்லை இந்த திரைப்படம்.  ஆனால் இந்த படத்தின் கதை சுருக்கம் நலன் குமார்சாமியுடையது. அது அற்புதமாக இருந்தது. அவருடைய சூது கவ்வும் தர்மம் வெல்லும் படத்திற்காகவும் காத்திருக்கிறேன்.


இயக்குநர் அர்ஜுனும், நானும் நீண்ட நாள் நண்பர்கள் அவருடைய முதல் படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. ஆனால் பல காரணங்களால் அது நடைபெறவில்லை. தமிழ் திரை உலகத்திற்கு சில இயக்குநர்கள் தேவை என்று நாம் கருதுவோம். அந்த பட்டியலில்  அர்ஜுனுக்கு முக்கிய இடம் உண்டு.


குறைவான வசதிகளை அளித்துவிட்டு தரமான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றால் அவரால் உருவாக்க முடியும். இந்த திரைப்படத்தையும் அவர் சிக்கனமாகவும் சிறப்பாகவும் உருவாக்கி இருக்கிறார். இதற்காகவே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.


அர்ஜுன் பேசும்போது 15 சவரன் தங்க நகையை தொலைத்து விட்டதாக குறிப்பிட்டார். அது ஏன் இங்கு சொன்னார் என்றால்.. இந்த படம் வெற்றி பெற்றால்.. படத்தின் தயாரிப்பாளர் அந்த 15 சவரன் தங்க நகை பரிசாக வழங்க வேண்டும் என்பதற்காக சொன்னார்.  அதனால் இந்த படம் வெற்றி பெற்ற பிறகு அவருக்கு மறக்காமல் 15 சவரன் தங்க நகையை தயாரிப்பாளர்கள் பரிசாக வழங்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.  


சூது கவ்வும் முதல் பாகம் கல்ட் பிலிம்.. சூது கவ்வும் இரண்டாம் பாகம் ஃபன் பிலிம்.. இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம்.  டிசம்பர் 13ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


0 comments:

Pageviews