வேட்டையன் திரை விமர்சனம்
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் ரஜினி பாராபட்சம் பார்க்காமல் ரவுடிகளை சுட்டு தள்ளுகிறார். அப்போது நேர்மையான அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் துஷாரா கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக தவறான கோணத்தில் செல்கிறது. அது தெரியாத ரஜினி கடைசி நேரத்தில் உள்ளே வந்து சம்பந்தமில்லாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். இதை மனித உரிமை அதிகாரியும் நீதிபதியுமாக இருக்கும் அமிதாப் பச்சன் தன் குழுவினருடன் விசாரணை செய்கிறார். இறுதியில் உண்மையான குற்றவாளி யார்? துஷாராவின் மரணத்திற்கு நீதி கிடைத்ததா ? ரஜினி என்ன செய்தார் ? என்பதே படத்தின் மீதிக்கதை.
அதியன் என்ற கதாபாத்திரத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்த், முதல் பாதியில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து வேட்டையனாக அதிரடி காட்டுகிறார். இரண்டாம் பாதியில் போலீஸ் வேட்டையனாக இருப்பதை விட மக்களின் பாதுகாவலனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அவர் மேற்கொள்ளும் புலன் விசாரணையும், அதில் அவர் வெளிப்படுத்தும் வேகமும் படத்தின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு அதிகரிக்கிறது. வயதுக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் அந்த கதாபாத்திரத்தை கையாண்டதோடு, “குறி வச்சா எற விழனும்” என்ற பஞ்ச் வசனம் மூலம் திரையரங்கையே அதிர வைக்கும் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுடன் திரை ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கிறார்.
பேட்டரியாக வரும் பகத் பாசில் நடிப்பால் அனைவரையும் வசீகரிக்கிறார். ரூபா (ரித்திகா சிங்) பாத்திரம் கதைக்கு தேவையான அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மஞ்சு வாரியன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கு குறைந்த அளவு காட்சிகளே இருந்தாலும் தோன்றும் காட்சிகளில் அற்புதமாக ஸ்கோர் செய்கிறார்கள்.
படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் அவர்களை சரியாக கையாண்டதோடு, அவர்களின் கதாபாத்திரங்களை திரைக்கதையோடு ஒட்டி பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் டி.ஜே.ஞானவேல், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்களின் கவனம் சிதறாமல் திரைக்கதையை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார். இறுதியில் ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது வேட்டையன்.
0 comments:
Post a Comment