சுய திறமை வேட்டைக்காரர் ப்ரீதீமின் பத்து தலை தோற்றங்கள் - Self Talent Hunter Preethem's Ten Head Look's
திரையுலகில் நடிகராக அறிமுகமாக வேண்டும் என்றால்... கடந்த காலங்களில் வித்தியாசமான கோணங்களில் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்து தோற்றமளிக்கும் புகைப்படத்தை நண்பர்கள், இடைத்தரகர்கள் மற்றும் ஒவ்வொரு பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நேரடியாக சென்று, அறிமுகப் படுத்திக்கொண்டு புகைப்படத்தை வழங்கி வாய்ப்புகளை தேடுவார்கள்.
தற்போதைய டிஜிட்டல் யுக காலகட்டத்தில் ஏராளமான இளம் திறமை மிகு படைப்பாளிகள் குறும்படம் ஒன்றினை இயக்க தீர்மானித்து, அதில் நடிப்பில் ஆர்வமுள்ள இளைஞர்களை பயன்படுத்தி, உருவாக்குகிறார்கள். அந்த குறும்படத்தின் மூலம் இயக்குநருக்கும், அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
ஆனால் வாய்ப்புகளை தேடி பயணிப்பதை விட, வாய்ப்புகளை உருவாக்கி, வாய்ப்பு வழங்குபவர்களின் கவனத்தை ஈர்த்து, அதனூடாக நடிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றிருப்பதுடன், திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்பிற்காக புதிய முயற்சியை தொடங்கி வைத்திருப்பவரும், தொடர்ந்து வளர்ந்து வரும் கலைஞராகவும் ஜொலிப்பவர் பிரீத்தம்.
இவரது வித்தியாசமான முயற்சி.. வாய்ப்புகளை தேடும் அனைத்து இளம் கலைஞர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதால்.. இது தொடர்பான அவரது அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்வதற்காகவும், அதனை பகிர்ந்து கொள்வதற்காகவும் அவரை சந்தித்தோம்.
உங்களைப் பற்றி...!
பெயர் - ப்ரீத்தம். எல். ஆர்.
நான் பிறந்தது.. வளர்ந்தது.. பட்டதாரியானது.. பணியாற்றியது.. எல்லாம் சென்னையில் தான்.
உங்களுக்குள் இருந்த நடிகரை எப்போது அடையாளம் கண்டீர்கள்..?
2018 ஆம் ஆண்டில் ஆண்டு என நினைக்கிறேன். இயல்பாகவும் , சாதாரணமாகவும் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதிலும் குறிப்பாக என் மனதில் நீண்டகாலமாக இருந்த நடிகராக வேண்டும் என்ற கனவை நனவாக்க வேண்டும் என விரும்பினேன். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்தே என்னுடன் பயணித்த நண்பர்கள் அனைவரும் பல தருணங்களில் என்னிடம் சொன்ன ஒரே விசயம்..'' பிரீத்தம்.. உன் முகம் ஃபோட்டோ ஜெனிக் முகம். நீ திரையில் தோன்றினால் நன்றாக இருக்கும். நடிப்பதற்கு முயற்சி செய்யலாமே..!'' என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். இது என் மனதில் ஆழமாக பதிவானது. இதனை நான் உறுதியாக நம்ப தொடங்கினாலும்.. வாழ்க்கையின் போக்கில் நான் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தேன்.
2018 ஆம் ஆண்டு இந்த எண்ணம் மீண்டும் தீவிரமடைந்தது. 2019 ஆம் ஆண்டில் இது உச்சமடைந்தது. ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம்.. பேரார்வமாக மாறி, கொரோனா தொற்று காலகட்டத்தின் போது இனி நடிகராக தான் வெல்ல வேண்டும் என தீர்மானித்தேன். அதற்கான தேடலில் ஈடுபட தொடங்கினேன்.
முதலில் மிகவும் எதிர்பார்த்த என்னுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கவில்லை. வேலையும் கிடைக்கவில்லை. வருமானமும் இல்லை. ஆனால் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு உற்ற துணையாக இருந்தது. நண்பர்களின் உதவி தொடர்ந்து தற்போது வரை கிடைத்து வருகிறது.
வித்தியாசமான பாணியில் போட்டோ சூட் நடத்தி வாய்ப்பு தேடும் அணுகுமுறை குறித்து...?
நடிகராக வேண்டும் என்று தீர்மானித்தவுடன் இதில் உள்ள சாதகமான அம்சங்களையும், பாதகமான அம்சங்களையும் குறித்து தீவிரமாக அலசினேன். வாய்ப்புகளை தேடி பயணிக்கும் போது அவை நூறு சதவீதம் பலன் தராது என்பதனை உணர்ந்தேன். இயக்குநர்கள், கதாபாத்திரத்திற்காக முகங்களை தேடும் காஸ்டிங் டைரக்டர்கள் ஆகியோர்களை என் பக்கம் கவனத்தை திருப்பி ஈர்க்க வேண்டும் என விரும்பினேன். அப்போது கிடைத்த ஐடியா தான் போட்டோ சூட். இதற்காக இணையத்திலும், நண்பர்களிடத்திலும் தொடர்ச்சியாக தேடலில் ஈடுபட்ட போது கிடைத்த வித்தியாசமான ஐடியாக்களை போட்டோ சூட் மூலம் நிறைவேற்றினேன். அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றி 'வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்' என்று சொன்னபோது, எனக்கான வாய்ப்புகள் வரத் தொடங்கியது.
போட்டோ சூட் அனுபவங்கள் எப்படி..?
வித்தியாசமான உடைகள்..! வித்தியாசமான ஒப்பனைகள்..! வித்தியாசமான ஆபரணங்கள்..! வித்தியாசமான அணிகலன்கள்..! வித்தியாசமான ஆடைகள்..! வித்தியாசமான பாரம்பரிய மற்றும் நவீன ஆடை வடிவமைப்புகள்..! என ஒவ்வொரு விசயத்திலும் வித்தியாசங்களை தேடி தேடி கண்டுபிடித்து, என்னுடைய தோற்றத்தை படைப்பாளிகளுக்கு பிடிக்கும் வகையிலும்.... படைப்பாளிகள் உருவாக்கும் கற்பனையான கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பதை உறுதி செய்வதற்காகவும்... கடினமாக தற்போது வரை உழைத்து வருகிறேன்.
அதே தருணத்தில் போட்டோ ஷூட் நடத்திய பிறகு என்னுடைய தோற்றம் தனித்துவமாக பரிணமளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். இந்த போட்டோ சூட் மூலமாக என்னுடைய தனித்துவமான தோற்றத்திற்கு சமூக ஊடகங்களில் கிடைத்த வரவேற்பு என்னை பிரமிக்க வைத்தது. அதனால் அதனை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
கிடைத்த வாய்ப்புகள் குறித்து...!
இதுவரை இரண்டு குறும்படங்களில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதில் ஒரு குறும்படம் இந்தியா கிளிட்ஸ் யூட்யூப்பில் வெளியானது. அடுத்த குறும்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவர் நடிக்கும் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து சில படங்களில் நடிப்பதற்கான ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வு பெற்று இருக்கிறேன். அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உங்களுடைய வெற்றி குறித்து..!?
நான் நடிகராவதற்காக தேர்ந்தெடுத்த போட்டோ ஷூட் பாணி வெற்றியை வழங்க தொடங்கி இருக்கிறது. மேலும் திரையுலகினரின் அன்பான ஆதரவும், இயக்குநர், தயாரிப்பாளர், தயாரிப்பு நிர்வாகிகளின் ஆதரவும், ஆசியும் கிடைத்திருப்பதால்... விரைவில் திரையுலகில் நல்லதொரு இடத்தை பிடித்து, வெற்றிகரமாக வலம் வருவேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. என்னுடைய விடா முயற்சியும், பிரபஞ்சத்தின் ஆசியும் இருப்பதால் என்னுடைய இலக்கை உறுதியாக எட்டுவேன்.
நடிகராவதற்காக கடந்து வந்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த அனுபவத்தில்.. எதனை வளரும் கலைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள்..?
நடிப்பின் மீதான ஃபேஷன் எனும் தீரா பற்று தான் என்னை வழிநடத்தி செல்கிறது. குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்காவிட்டாலும்... என் லட்சியத்தை புரிந்து கொண்டு எனக்கு அவ்வப்போது பொருளாதார ரீதியாகவும் உதவி செய்யும் நண்பர்களையும் பெற்றிருக்கிறேன். அவர்களிடமிருந்து கிடைத்த உதவியை எனக்கான முதலீடாக விதைத்திருக்கிறேன். அது விரைவில் நல்ல பலனை வழங்கும் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும்
இவர்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் அதே தருணத்தில், அவர்களுக்காக திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது.
பசி என்று பத்து பேரிடம் கேட்டால்.. இரண்டு பேராவது உதவி செய்வார்கள். அதனால் உங்களுக்குத் தேவையானவற்றை மற்றவர்களிடத்தில் கேட்க ஒருபோதும் தயங்க கூடாது. கேட்டால்தான் கிடைக்கும்.
யார் கொடுப்பார்கள் என்று தெரியாது. இருந்தாலும் இந்த பிரபஞ்சம் யார் மூலமாவது உங்களுக்கு தேவையானதை வழங்கும். ஆனால் உங்களுடைய லட்சியத்தில் நேர்மை இருக்க வேண்டும். உறுதியான நிலைப்பாடு இருக்க வேண்டும். அதில் உண்மையாகவும், கடினமாகவும் உழைக்க தயாராக இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
சாதாரண வாழ்க்கை வாழ்ந்து மறைவதைவிட... கனவு கண்ட வாழ்க்கையை வாழ்வதற்கு தொடக்கத்தில் கஷ்டங்கள் இருந்தாலும்.. அந்தக் கஷ்டத்தை இஷ்டப்பட்டு ஏற்றுக் கொண்டால்.. கனவு நனவாவதை காணலாம். விடாமுயற்சி அதற்கான பலனை வழங்கியே தீரும்.
2 comments:
👏👏👏👏👏
Appreciate you’re never give up attitude
Post a Comment