கோட் திரை விமர்சனம்
டெல்லியில் மனைவி சினேகா மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் விஜய். இவர் தீவிரவாதத்தை தடுக்கும் ரகசிய பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தலைமையாக ஜெயராம் இருக்கிறார். இவர்கள் செய்யும் வேலை சினேகாவுக்கு தெரியாமல் இருக்கிறது. ஒரு மிஷனுக்காக விஜய் பாங்காக் செல்ல நேரிடுகிறது. தன்னுடன் சினேகா மற்றும் தன் மகனை அழைத்து செல்கிறார். அங்கு சினேகாவுக்கு விஜய் யார் என்ற விஷயம் தெரியவருகிறது. மேலும் சினேகாவுக்கு குழந்தை பிறக்கும் நிலையில் விஜய்யின் மகன் கடத்தப்பட்டு விபத்தில் இறக்கிறான். இதிலிருந்து விஜய், தான் செய்யும் வேலையை மாற்றி சென்னையில் சினேகா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். சில வருடங்கள் கழித்து மாஸ்கோ தூதரகத்திற்கு செல்கிறார் விஜய். அங்கு தன் மகன் உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து சென்னை அழைத்து வருகிறார்.
வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் மகன், ஜெயராமை கொலை செய்கிறார். இறுதியில் விஜய்யின் மகன் ஜெயராமை கொலை செய்ய காரணம் என்ன? ஜெயராமை கொலை செய்தது யார் என்று விஜய் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
காந்தி மற்றும் ஜீவன் என அப்பா, மகன் வேடங்களில் நடித்திருக்கும் விஜய், அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பு மற்றும் உடல் மொழியில் முதிர்ச்சியை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பதோடு, மகன் கதாபாத்திரத்தில் நடிப்பில் வேகத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். மனைவியாக நடித்து இருக்கும் சினேகா அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். காதலியாக வரும் மீனாட்சி சௌத்ரி ஆங்காங்கே வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். மகள் பாசத்தில் கவனம் பெற்று இருக்கிறார் பிரசாந்த். எதிர்பாராத வேடத்தில் பிரபு தேவாவும், கொடுத்த வேலையை அஜ்மலும் செய்திருக்கிறார்கள். மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார் மோகன்.
இயக்குநர் வெங்கட் பிரபு படம் முழுவதும் சிறு சிறு விசயங்களை தனது பாணியில் சொல்லி ரசிக்க வைத்திருப்பதோடு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பின்னணியில் கிளைமாக்ஸை காட்சிப்படுத்திய விதம், டோனியின் எண்ட்ரி போன்றவை கிரிக்கெட் ரசிகர்களையும் படத்தை கொண்டாட வைத்திருக்கிறது.
கோட் திரைப்படம் 3 மணி நேரம் போவதே தெரியவில்லை. கண்டிப்பாக குடும்பத்தோடு படம் பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் மிகப்பெரிய கொண்டாட்ட திரைப்படமாக இருக்கும்.
0 comments:
Post a Comment