ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது
உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் ஜாக்கி சான். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது சமீபத்திய 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் விரைவில் வெளியிடுகிறது.
ஸ்டான்லி டாங் இயக்கியிருக்கும் இத்திரைப்படம், 'தி மித்' சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். பரபர சண்டைகள், விறு விறு சாகசங்கள், உள்ளத்தை தொடும் உணர்வுகள், கற்பனைக்கு எட்டாத காட்சிகள் என கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
ஜாக்கி சான், லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென், பெங் சியோவ்ரான் மற்றும் ஜெங் யெச்சென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தற்கால அகழ்வாராய்ச்சி நிபுணர் மற்றும் முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இளம் வீரர் என இரண்டு முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில் ஜாக்கி சான் தோன்றுகிறார்.
தொல்லியல் நிபுணரான பேராசிரியர் ஃபாங்கைச் சுற்றி கதை சுழல்கிறது. பனிப்பாறை பயணத்தின் போது தனது மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்களின் அமைப்பு, கனவில் அவர் பார்த்த ஜேட் பதக்கத்தைப் போலவே இருப்பதை அவர் கவனிக்கிறார்.
கனவுகளை நிஜத்துடன் பதக்கம் இணைப்பது போல் அவருக்கு தோன்றுகிறது. ஆர்வத்தால் உந்தப்பட்ட பேராசிரியர் ஃபாங், தனது கனவுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைத் தேடி, பனிப்பாறை கோவிலுக்குள்ளான ஆழமான பயணத்தில் ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தி அற்புதமான சாகசத்தை மேற்கொள்கிறார்.
இயக்குநர் ஸ்டான்லி டாங் அதிரடி திரைப்படங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். ஜாக்கி சானுடன் பலமுறை அவர் கைகோர்த்துள்ளார். 1992ம் ஆண்டிலேயே, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வசூல் சாதனைகளை முறியடித்த அவர் இயக்கிய 'போலீஸ் ஸ்டோரி III: சூப்பர் காப்' படம் அந்த வருடத்திற்கான கோல்டன் ஹார்ஸ் விருதுகளில் சிறந்த படமாக பரிந்துரைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவரது 'ரம்பிள் இன் தி பிராங்க்ஸ்,' 'போலீஸ் ஸ்டோரி 4: ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக்,' 'தி மித்,' 'குங் ஃபூ யோகா,' மற்றும் இதர அதிரடித் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை குவித்தன. அவற்றில், 'ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக்', 1996ல் ஹாங்காங் திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த சீன மொழித் திரைப்படமாக சாதனை படைத்தது.
'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்திற்காக ஜாக்கி சானும் ஸ்டான்லி டாங்கும் மீண்டும் இணைந்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது. அனைத்து வயதினரையும் கவரும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
0 comments:
Post a Comment