மின்மினி திரை விமர்சனம்
சிறு வயதிலேயே நண்பர்களாக இருக்கும் பாரி, சபரி இருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. அதாவது பாரிக்கு இமயமலையில் பைக் ரைடு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அதே போல் சபரிக்கு ஒரு சிறந்த ஓவியராக வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. இதில் எதிர்பாராத விதமாக பாரிக்கு ஒரு அசம்பாவிதம் நடக்கிறது அவருடைய லட்சியத்தை நிறைவேற்ற சபரி, பிரவீனா ( எஸ்தர் அனில்) இருவரும் களம் இறங்குகிறார்கள். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? பாரிக்கு என்ன ஆனது? பிரவீனா யார்? பாரியின் கனவை இருவரும் நிறைவேற்றினார்களா ? என்பதே படத்தின் மீதிக்கதை.
சபரி கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் கிஷோர், பாரி முகிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளரவ் காளை, பிரவீனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில் மூன்று பேரும் கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். பள்ளி பருவத்திலும் சரி, இளம் வயது பருவத்திலும் சரி இவர்களுடைய அளவான நடிப்பு ரசிகர்களைக் கவர்கிறது.
இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா.அவருடைய இசையில் பாடல்கள் இதம்.பின்னணி இசையில் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.பள்ளிக்கூடக் காட்சிகளுக்கும் பயணக்காட்சிகளுக்கும் அவர் இசையில் காட்டியிருக்கும் வேறுபாடு நுட்பமானவை. இமாலய பயணத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா காட்சிப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது.
நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படமாக்கிவிட்டு, பின் 8 ஆண்டுகள் காத்திருந்து இளம் வயது பருவத்தில் அவர்களை நடிக்க வைத்து படமாக்கியுள்ளார் இயக்குநர் ஹலிதா சமீம். இந்திய சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத இப்படி ஒரு முயற்சியில் இயக்குநர் ஹலிதா சமீம் ஈடுபட்டு வெற்றி பெற்றிருப்பது பெருமைக்குரியது.
மின்மினி - உணர்வுபூர்வமான படம்.
0 comments:
Post a Comment