தங்கலான் - உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணம்
சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது. தங்கலான் திரைப்படம், சீயான் விக்ரம் அவர்களுக்கு அவரது திரை வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முதல் நாள் வசூலை கொண்டு வந்தது. ரூபாய் 26 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது வாரம், தமிழ்நாட்டில் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி இருந்த போதிலும், வசூலில் ஸ்டெடியாக இப்படம் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் மற்றும் தெலங்கானாவில், பெரும் வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் இப்படம் 141 தியேட்டர்கள் அதிகரித்து, தற்போது 391 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 30-ம் தேதியன்று மும்பை, டெல்லி மற்றும் அனைத்து வட மாநிலங்களில் தங்கலான் வெளியாக உள்ளது. அதன் மூலம் மேலும் பல கோடிகளை இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இப்படத்திற்கு கிடைத்த வெற்றிகளினால், தயாரிப்பாளருக்கு அவரின் முதலீட்டை தாண்டி வசூல் செய்யும் என அனைவராலும் பேசப்படுகிறது. பா. ரஞ்சித் அவர்களின் சிறப்பான இயக்கத்தால், உருவான தங்கலான் திரைப்படத்தில், சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், பசுபதி என பல நடிகர்கள் தங்களின் சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். சீயான் விக்ரம் அவர்கள் இப்படத்திற்காக கொடுத்த உழைப்பையும், அர்ப்பணிப்பையும், ஆகச்சிறந்த நடிப்பையும் பாராட்டாத பார்வையாளர்களோ ஊடகங்களோ இல்லை. அந்த அளவு தன் மாபெரும் உழைப்பை இப்படத்திற்காக விக்ரம் அவர்கள் கொடுத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இப்படம், 18-ம், மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்கள், அவர்களின் போராட்டங்கள், மேஜிக்கல் ரியலிசம் என பல புதுமையான விஷயங்களை உள்ளடக்கி, ஒரு சிறந்த காட்சி அனுபவத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் G.V. பிரகாஷ் குமாரின் பாடல்களும், பின்னணி இசையும், பெரிய பலமாக அமைந்துள்ள தங்கலான், 2024-ல் ஒரு மறக்க முடியாத திரைப்படமாகவும், ரூபாய் 100 கோடியளவில் வசூல் செய்த ஒரு படமாகவும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இருக்கும்.
0 comments:
Post a Comment