குரங்கு பெடல் விமர்சனம்

 

கோடை விடுமுறையை பல வழிகளில் கொண்டாடி தீர்க்கும் சிறுவர்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். சொந்த சைக்கிள் இல்லாததால் வாடகை சைக்கிள் எடுத்து கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்கள். சைக்கிள் ஓட்ட தெரியாத காளி வெங்கட், தனது மகனின் சைக்கிள் ஆசையை புரிந்துக்கொள்ளாமல் காசு கொடுக்க மறுக்கிறார். ஆனால், எப்படியாவது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவரது மகன் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் படத்தின் மீதிக்கதை. 


எந்த வேடம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக தன்னைப் பொருத்திக் கொண்டு, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் திறமை கொண்ட காளி வெங்கட், இதில் கொங்கு மண்டல கிராமத்துத் தந்தையாக சிறப்பாக நடித்திருக்கிறார். சந்தோஷ் வேல்முருகன்,இராகவன்,ஞானசேகர், சாய்கணேஷ், அதிஷ் ஆகிய சிறுவர்கள், கொங்கு நாடு எனச்சொல்லப்படும் மெற்கு மாவட்ட மொழி நடை உடை பாவனைகள் அனைத்திலும் கிராமத்து மண் மனம் மாறாமல் நடித்திருக்கிறார்கள். சிறுவனின் அக்காவாக நடித்திருக்கும் தக்‌ஷனா, அம்மாவாக நடித்திருக்கும் சாவித்திரி, வாத்தியாராக நடித்திருக்கும் செல்லப்பா, தோல் பாவைக் கலைஞராக வரும் குபேரன் ஆகிய அனைவரும் கொங்குத் தமிழர்களாகவே மாறியிருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் சுமீ பாஸ்கரன், கோடைக்காலத்தின் வெப்பத்தையும், கிராமத்து நீர் நிலைகளின் குளிர்ச்சியையும், புழுதி படர்ந்த நிலப்பரப்புகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஜிப்ரானின் இசையில், பிரம்மாவின் வரிகளில் பாடல்கள் கிராமத்து வாழ்க்கையையும், சிறுவர்களின் மனங்களையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.


இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் எனும் சிறுகதை இயக்குநர் கமலக்கண்ணனின் வாசிப்பினால் திரையில் நிறைந்திருக்கிறது. கிராமத்து வாழ்வியலை அழகாகவும், உணர்வுப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் கமலக்கண்ணன் ஒரு அமைதியான கிராமத்து வாழ்க்கை சூழலை கிராமத்து மக்கள் மட்டும் இன்றி நகரத்து மக்களும் கொண்டாடும்படி கொடுத்திருக்கிறார்.

0 comments:

Pageviews