டபுள் டக்கர் விமர்சனம்

 

ஒருவர் பிறப்பு முதல் இறப்பு வரை, அவர் செய்யும் நல்லது, கெட்டவைகளை கணக்கெடுப்பதோடு, அவரது ஆயுள் முடிந்தவுடன் அவரது உயிரை கடவுளிடம் ஒப்படைக்கும் பணியை லெஃப்ட் மற்றும் ரைட் என்ற இரண்டு கடவுள் ஆர்மியின் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். நாயகன் தீரஜின் ஆயுள் முடிந்துவிட்டதாக தவறுதலாக நினைத்து அவரது உயிரை இந்த லெஃப்ட் மற்றும் ரைட் எடுத்து விடுகிறார்கள். உயிரை எடுத்தப் பிறகு தான் தெரிகிறது இது டெக்னிக்கல் பால்ட் என்று. உடனே தவறை சரி செய்வதற்காக மீண்டும் அவரது உடலில் அவரது உயிரை வைக்க முயலும் போது, அவரது உடல் காணாமல் போய்விட, அதனால் ஏற்படும் கலவரத்தை கலகலப்பாக சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்திருக்கும் தீரஜ், அரவிந்த் என்ற கதாபாத்திரத்தில் அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் அனுதாபத்தை சம்பாத்து விடுகிறார். அதே சமயம், ராஜா என்ற கதாபாத்திரத்தில் காமெடியிலும் கலக்கியிருப்பவர், காதல், ஆக்‌ஷன் என அனைத்து கமர்ஷியல் அம்சங்களையும் கச்சிதமாக கையாண்டு ஜொலிக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட், கதாநாயகி மட்டும் அல்லாமல் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரமாகவும் வலம் வருகிறார்.


மன்சூர் அலிகான், கோவை சரளா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சுனில் ரெட்டி, ஷாரா என ஏராளாமான நடிகர்கள் நடித்திருந்தாலும், அனைவரும் நகைச்சுவை ஏரியாவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.


அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் முனீஷ்காந்த் மற்றும் காளிவெங்கட் பின்னணி குரல் மூலமாகவே ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.


வித்யா சாகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை அளவாக பயணித்திருக்கிறது. கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, வெற்றிவேல் ஏ.எஸ்-ன் படத்தொகுப்பு ஆகியவற்றுடன், Symbiosis Technologies நிறுவனத்தின் வி.எப்.எக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகள் கைகோர்த்து படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.


கோடை விடுமுறையில் குழந்தைகளை குறி வைத்து திரைகக்தை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் மீரா மஹதி, லெஃப்ட் மற்றும் ரைட் என்ற இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் மூலம் படத்தை ஜாலியாக நகர்த்தி செல்கிறார். அதிலும், அந்த கதாபாத்திரங்கள் அவ்வபோது சினிமா கதாபாத்திரங்களாக உருமாறி செய்யும் அலப்பறைகள் அனைத்தும் கலகலப்பு.


நாம் ஏற்கனவே பார்த்த திரைப்படத்தின் சாயல் இருந்தாலும், அதை வித்தியாசமான முறையிலும், சிறுவர்களை கவரும் வகையிலும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்நர் மீரா மஹதி, கோடைக்காலத்தில் குழந்தைகளை குஷிப்படுத்துவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

0 comments:

Pageviews