ஒரு தவறு செய்தால் விமர்சனம்
திரைத்துறையில் உள்ள நண்பர்கள் மூவர்க்கு, தங்கியிருக்கும் அறையைக் காலி செய்யவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. பிறரின் தேவையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், சுலபமாகச் சம்பாதிக்கலாமென பாடத்தைக் கோயம்பேடு மார்க்கெட்டில் கற்கின்றனர். தொழில்நுட்பம் தெரிந்த இளம்பெண் ஒருவரது துணையுடன், கே.கே.நகரில் நடக்கும் தேர்தலைப் பயன்படுத்திப் பெரும்பணம் பார்க்க நினைக்கிறார்கள்.
ஓர் அழகான ஃப்ளாஷ்-பேக் காட்சியில், தன் பள்ளிக்காதலை நினைவுகூருகிறான் நாயகன். அந்த மான்டேஜஸ்க்கு, டி.ஆர். குரலில் ஒரு நெடுங்கவிதை ஒலிக்கப்படுகிறது. படத்தை விட்டு சின்னதொரு விலகலாக இருந்தாலும், ரசிக்கும்படியேயாகவே இருக்கிறது. அதே போல், படத்தின் முடிவில் தனித்து வரும் ஒரு ஏழைக் குடும்பத்தலைவனின் மனத்திண்மையை வலியுறுத்தும் காட்சி படத்தின் டோனையே மாற்றிவிடுகிறது. Deep Fake தொழில்நுட்பத்தின் சாத்தியத்தையும், அதனால் ஏற்படும் அபாயத்தையும், படம் தொட்டுச் செல்கிறது. மேலும், வைரல் என்ற பெயரில் பரப்பப்படும் செய்தியின் பின்னுள்ள உண்மைத்தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் உணர்ச்சிவசப்படும் மக்களின் மனநிலையையும் உரண்டைக்கு இழுத்துள்ளார் இயக்குநர்.
பாரி, ஸ்ரீதர், சுரேந்தர், சந்தோஷ் என நான்கு நண்பர்களும் நிறைவான பங்களிப்பை அளித்துள்ளனர். முதலில், சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் திட்டத்தை மறுத்து, பின் போலீஸாரின் அராஜகத்தைக் கண்டு ஒத்துக் கொண்டு, மீண்டும் மனம் தடுமாறுவதென, மிக முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார் உபாசனா. வேட்பாளராக நமோ நாராயணாவும், அவரது ஆலோசகராக எம்.எஸ்.பாஸ்கரும் நடித்துள்ளனர். அரசியல்வாதியின் குயுக்தியையும், அதனின்று உருவாகும் வியூகத்தையும், தங்கள் நடிப்பின் மூலமாக அற்புதமாகப் பிரதிபலித்துள்ளனர். லாஜிக்கில்லா ஹீஸ்ட் என்றாலும், க்ளைமேக்ஸில் டிவிஎஸ்-50 இல் சென்று பணத்தைக் கவரும் காட்சிகள் கலகலப்பாக வந்துள்ளது.
மணி தமோதரனின் எழுத்து, குறிப்பாக வசனங்கள், படத்தின் சுவாரசியத்திற்கு உத்திரவாதமளிக்கிறது. ஒளிப்பதிவில் சற்றே கவனம் செலுத்தியிருந்தால், படம் இன்னுமுமே ரசிக்கும்படி அமைந்திருக்கும். தேர்தல் சமயத்தில், ‘ஓட்டு போடப் பணம் வாங்குவது சரியா?’ என்ற முக்கியமான கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
0 comments:
Post a Comment