ரோமியோ திரை விமர்சனம்
துக்க வீட்டில் நாயகி மிர்ணாளினியை சந்திக்கும் விஜய் ஆண்டனிக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. விசயம் அறிந்த பெற்றோர்கள் மிர்ணாளினியின் குடும்பத்தில் பேசி விஜய் ஆண்டனிக்கு அவரை திருமணம் செய்து வைக்கிறார்கள். அப்பாவின் கட்டாயத்தினால் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக்கொள்ளும் மிர்ணாளிக்கு சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்பது தான் லட்சியம். அதனால், தனது கணவரை வெறுப்பவர் தனது லட்சியத்தில் ஜெயிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். மனை வெறுத்தாலும், அவரை ஒருதலையாக காதலிக்கும் விஜய் ஆண்டனியின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் ‘ரோமியோ’ படத்தின் கதை.
விஜய் ஆண்டனி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் கலகலப்பாகவும், உறுகி உறுகி காதலிப்பவராகவும் சிறப்பாக நடித்திருப்பவர், நடனத்திலும் தேர்ச்சி பெற்று அசத்துகிறார்.
இது பழைய விஜய் ஆண்டனி இல்லை, என்பதை தனது நடிப்பு மூலம் நிரூபித்திருக்கிறார். நடனம் மற்றும் காமெடியிலும் அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மிர்ணாளினி ரவி, வழக்கமான கதாநாயகியாக அல்லாமல் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகனுக்கு காதல் ஐடியா கொடுக்கும் யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. சில இடங்களில் விஜய் ஆண்டனியை கலாய்த்தும் சிரிக்க வைக்கிறார். நாயகியின் நண்பர்களாக நடித்திருக்கும் ஷாரா மற்றும் குழுவினர் வரும் காட்சிகள் கூடுதல் கலகலப்பு.
விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி, சுதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாட்ஷா காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு ரகமாக இருப்பதோடு, முணுமுணுக்கவும், தாளம் போடவும் வைக்கிறது.
காதல் கதையாக இருந்தாலும், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன், திருமணத்திற்குப் பிறகு பெண்களின் கனவு எப்படி சிதைந்து போகிறது என்பதை பற்றி பேசியிப்பதோடு, பெண்களுக்கும், அவர்களது கனவுகளுக்கும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்க வேண்டும் என்ற மெசஜை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.
திரைக்கதை வேகமாக நகர்வது, விஜய் ஆண்டனியின் வழக்கமான நடிப்பு சில இடங்களில் எட்டிப்பார்ப்பது போன்றவை படத்தை சற்று பலவீனப்படுத்தினாலும், நாயகனின் ஒருதலை காதலை அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும்படி சொன்னதில் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் வெற்றி பெற்றிருக்கிறார்.
0 comments:
Post a Comment