டியர் திரைவிமர்சனம்
படத்தில் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் குன்னுரை சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதிலிருந்தே தூக்கத்தின் போது குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. இதனால் இவரை பலரும் கிண்டல் அடித்தும் இருக்கிறார்கள். அதோடு இவரை பெண் பார்க்க வரும் நபர்களிடம் வெளிப்படகாகவே தனக்கு இருக்கும் குறட்டை விடும் பழக்கத்தை சொல்லிவிடுவார். இதனால இவருடைய திருமணமும் தள்ளிக்கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் ஜிவி பிரகாஷ் சென்னை சேர்ந்தவர். இவர் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக 8 மணி நேரம் தூங்க கூடியவர். இவர் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். இவருக்கு ஒரு பென்சில் விழுந்த சத்தம் கேட்டால் கூட தூக்கத்திலிருந்து எழுந்து விடுவார். இப்படிப்பட்ட சூழலில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. கூட்டு குடும்பத்தில் இவர்களுடைய வாழ்க்கை நகர்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் விடும் குறட்டையினால் இவர்களுடைய வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது? குறட்டையால் இருவரும் பிரிந்தார்களா? ஐஸ்வர்யா ராஜேஷ் பிரச்சினை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.
சிறு சிறு அசைவுகளில் கூட அசத்தியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி ஒரு வேடத்தை ஏற்றுக்கொண்டதே துணிச்சல்.அதில் மிகச் சரியாக நடித்து இதெல்லாம் ஒரு குறையே இல்லை என்று படம் பார்ப்போரை நினைக்க வைத்து வெற்றி பெற்றிருக்கிறார். நாயகனின் அண்ணனாக நடித்த காளி வெங்கட் அவரது மனைவியாக நடித்த நந்தினி, நாயகனின் அப்பாவாக நடித்த தலைவாசல் விஜய் அவரது மனைவி ரோகினி, நாயகியின் பெற்றோராக நடித்த இளவரசு மற்றும் கீதா கைலாசம் ஆகியோரின் அனுபவமான நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தியின் கேமரா கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துவதை சிறப்பாக செய்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
வித்தியாசமான கதை, நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், நேர்த்தியான திரைக்கதை மற்றும் காட்சிகள் என அனைத்தையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன், அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும்படியான ஒரு படத்தை கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.











0 comments:
Post a Comment