நேற்று இந்த நேரம் விமர்சனம்

 

நான்கு ஆண் நண்பர்கள், மூன்று பெண் நண்பர்கள் இணைந்து ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். இந்த கேங்க்’ல் மூன்று ஜோடிகள் காதலர்களாக இருக்கிறார்கள். இதில் ஷாரிக் ப்ளே பாயாக இருக்கிறார். மூன்று பெண்களிடமுமே தன் கைவரிசையை காட்டியிருக்கிறார். அதன்பிறகு நாயகி ஹரிதாவை காதலிக்கிறார். அவருடன் சுற்றுகிறார். நாயகி ஹரிதா நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னதும், அதெல்லாம் முடியாது லிவிங் வாழ்க்கை வாழலாம் என்று கூறிவிடுகிறார் ஷாரிக். இதனால் நாயகி அதிர்ச்சியாகிறார். இந்த சூழலில் ஷாரிக் மறுநாள் காணாமல் போய்விடுகிறார். போலீஸ் விசாரணையை துவங்குகிறது. விசாரணையின் முடிவு என்னவாக இருந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

ஷாரிக்ஹாசனுக்கு பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான வேடம்.அதைப் புரிந்து நடித்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்.

நாயகி ஹரிதா படத்தில் வரக்கூடிய பல கதாபாத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.அதில் தன்னைத் தனித்துத் தெரிய வைக்க வேண்டும் என்று நினைத்து நடித்திருக்கிறார்.

அரவிந்த்,திவாகர் குமார்,நிதின் ஆதித்யா,மோனிகா ரமேஷ்,காவ்யா அமிரா ஆகியோரும் குறைவில்லை.காவல்துறை விசாரணையின்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை என்பதைக் காட்டுகிறார்கள்.

விஷால்.எம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கதையில் இருக்கும் பரபரப்பைத் திரையில் கொண்டுவர முயன்றிருக்கிறார்.

கெவினின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். படத்தொகுப்பாளர் கோவிந்த்துக்கு இது சவாலான படம்.

சாய்ரோஷன்.கே.ஆர் எழுதி இயக்கியிருக்கிறார்.எழுதியதைத் திரையில் கொண்டுவர இன்னும் கூடுதலாக மெனக்கெட்டிருக்க வேண்டும் என்று நினைக்க வைத்திருக்கிறார்.

வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்டுப் படமெடுக்கவேண்டும் என்று நினைத்து கதாநாயகன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பதும் படத்தைக் கொண்டு சென்றிருக்கும் விதமும் வரவேற்புக்குரியன.

0 comments:

Pageviews