இடி மின்னல் காதல் விமர்சனம்
சில நாட்களில் அமெரிக்கா செல்லவிருக்கும் நாயகன், சிபி தன் காதலி பாவ்யா ட்ரிக்காவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அசந்தர்ப்பமாக ஒருவர் மீது காரை ஏற்றி விடுகிறார். அதில் அந்த மனிதர் இறந்து போக இருவரும் பதற்றம் அடைகிறார்கள்.
இன்னொரு கதையில் சிறுவன் ஜெய ஆதித்யா இரவில் வெளியே சென்ற தன் தந்தையைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கிறார். விபத்தில் இறந்து போன மனிதர்தான் அந்த சிறுவனின் தந்தை என்பது அடுத்த சில காட்சிகளில் நமக்குத் தெரிய வருகிறது.
அவர்தான் கடன் பட்ட சேட்டு. தவறான வழிகளில் சென்று குடும்பத்தை… பணத்தை எல்லாவற்றையும் இழந்து மனைவியும் தற்கொலை செய்து கொள்ள, மகனுடன் தனித்து வாழ்கிறார்.
மேற்படி இந்த இரு கதைகளும் எப்படி ஒரு முடிவுக்கு வருகின்றன என்பதுதான் மீதிப் படம்.
ஏற்கனவே இங்கு ஒரு ஹீரோ சிபி இருக்க, இன்னொரு சிபி இந்த படத்தில் சினிமாவுக்குள் வந்திருக்கிறார். ஹீரோவுக்குரிய அத்தனை தகுதிகளும் வாய்த்திருக்கிறது அவருக்கு. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
நாயகி பாவ்யாவுக்கு பாந்தமான முகம். குற்றவுணர்வு கொண்டு தவிக்கும் சிபிக்கு ஆதரவாக இருப்பதுடன் அவர் வெளிநாடு செல்ல எல்லா விதங்களிலும் உதவியாக இருப்பதில் நற்காதலி ஆகிறார்.
படத்தின் மையப்புள்ளி சிறுவன் ஜெய் ஆதித்யாதான். சேட்டுப் பையனாக வரும் இந்த செவத்த பையன் செம. படத்தின் வில்லன் சொல்வது போல் அமுல் பேபி அழகுடன் இருப்பதுடன் அழகாக நடிக்கவும் செய்கிறான். மன அழுத்தத்தை வெளிப்படுத்துவதில் அமுல் பேபி, அராத்து பேபி ஆவது டெரர்.
சேட்டாகப் பிறந்தும் வாழ்க்கை செட்டாகாத வேடத்தில் சரியாகப் பொருந்துகிறார் மனோஜ் முல்லத்.
பாலியல் தொழிலாளியாக வரும் யாஸ்மின் பொன்னப்பா நடிப்பும், அழகும் நச்.
வில்லன் வின்சென்ட் நகுல் ஆரம்பத்தில் பயமுறுத்தி போகப்போக நீர்த்துப் போகிறார். “என் டேஸ்டே தனி..!” என்று அழகுச் சிறுவன் ஜெய் ஆதித்யாவை காமப் பார்வை பார்ப்பது கொடுமை.
பாதிரியார் ராதாரவியும், ஏட்டு பாலாஜி சக்திவேலும் நடிப்பில் மற்றவர்களை மிஞ்சுகிறார்கள்.
சிபியின் நண்பனாக வரும் ஜெகன், தான் ஒரு காமெடியன் என்பதால் அவ்வப்போது சில காமெடிகள் செய்கிறார்.
இந்தப் படத்தின் கதை கடந்த வருடம் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் கதையை ஒத்திருப்பது எப்படி என்று புரியவில்லை.
ஒரு பாவத்துக்கு சரியான பரிகாரம் செய்து முடிக்கும் வகையில் கிளைமாக்ஸ் அமைத்திருப்பதில் இயக்குனர் பாலாஜி மாதவன் பாராட்டுப் பெறுகிறார்.
ஆனால், கிளைமாக்சில் வில்லனிடம் ஹீரோ அடிவாங்குவது போல் அமைத்திருப்பது பலவீனம். அத்தனை கொடூர வில்லனை பலவீனமான பாலாஜி சக்திவேல், ஜெகன் கோஷ்டி வீழ்த்துவது அதைவிட பலவீனம்.
ஜெயசந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு நேர்த்தி. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் வழக்கத்தைவிட அடக்கி வாசித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment