நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம் மார்ச் 1 திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது!

 

இந்திய ஜனநாயகம் உலகளவில் எப்போதும் உற்றுநோக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. மேலும் அந்த ஜனநாயகத்தை கட்டமைக்கும் தேர்தல்கள் மிகப்பெரிய நிகழ்வாகவும் இருக்கிறது. இந்த தேர்தல் அரசியல் ஜானரில் வெளியாகும் திரைப்படங்கள் அரிது. ஆனால், அப்படியான படங்கள் வெளியானால் மொழி மற்றும் பிராந்தியங்களுக்கு அப்பால் அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரித்த ’கோ’ திரைப்படம் கடந்த 2011ல் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. அதன் கதைக்களத்திற்காக மட்டுமல்லாமல், அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதிலும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதிலும் இளைஞர்களின் சக்தி எவ்வளவு முக்கியமானது என்பதை அந்தப் படம் கூறியிருந்தது. வரவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை நாடே உற்று நோக்கியிருக்கும் சூழ்நிலையில் ‘கோ’ திரைப்படம் வருகிற மார்ச் 1, 2024 அன்று மீண்டும் வெளியிடப்பட உள்ளது.


மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய இப்படத்தில் ஜீவா, கார்த்திகா மற்றும் அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை மீண்டும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருக்க, படத்தை பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்வதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.


ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளரான எல்ரெட் குமார் கூறுகையில், "நாங்கள் தயாரித்தப் படங்களில் ‘கோ’ எங்களுக்கு வெற்றிகரமான படைப்பு. இந்தத் திரைப்படத்தின் வெற்றி எங்களுக்கு விவரிக்க முடியாத மனநிறைவையும் தந்தது. பார்வையாளர்கள் அதை சினிமாவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகக் கொண்டாடினர். இது வெளியாகி பத்து வருடங்களுக்கும் மேலாகிறது. ஆனால் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் மேஜிக், ஜீவா, அஜ்மல் ஆகியோரின் அபாரமான நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசையால் படம் இன்றும் சோர்வு ஏற்படுத்தாமல் ரசிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. 


சரியான கதையை பொறுப்போடு பார்வையாளர்களுக்குக் கொண்டு சென்றதால்தான் இந்தப் படம் வெற்றிப் பெற்றது. இப்போது, இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தி புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்காக இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மார்ச் 1, 2024 அன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை மீண்டும் வெளியிடவுள்ளோம். படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் நம்மோடு இல்லாத இந்த சமயத்தில் இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவது ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் படக்குழுவினர் என அனைவருக்கும் எமோஷனலான தருணம் இது” என்றார்.

0 comments:

Pageviews