தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் முதல் முறையாக முருகன் பாடல்

 

சமீபத்தில் தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்த பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவசமூட்டும் பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.


தேசிய விருது பெற்ற இயக்குந‌ர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது. முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர்.


 'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் சூப்பர் சிங்கர் 'செல்லக்குட்டி பேபி' அக்ஷரா லஷ்மி பாடியுள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் மெய் சிலிர்த்து கொண்டாடும் வகையில்  உருவாகியுள்ளது.


இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில், "வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப்பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம்," என்றார். 


பாடலை எழுதிய இயக்குநர் பவண், "இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா," என்றார். 


நடிகர் யோகிபாபுவும், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டியும் வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் லேபிளில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடலை வெளியிட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். 


0 comments:

Pageviews