கண்ணகி விமர்சனம்
திருமணத்திற்காக காத்திருக்கும் அம்மு அபிராமிக்கு சில காரணங்களால் திருமணம் தடைப்பட்டு வருகிறது. திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஷாலின் சோயா, லிவிங் டூ கெதர் முறையில் ஓரு ஆணுடன் வாழ்ந்து வருகிறார். காதலனால் கர்ப்பமடைந்த கீர்த்தி பாண்டியன், கருவை கலைக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டு வருகிறார். கணவருடைய கட்டாயத்தால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு வரும் வித்யா பிரதீப் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். இப்படி நான்கு பெண்களும் ஒவ்வொரு பிரச்சனையோடு வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்கள், இவர்களுடைய இந்த வாழ்க்கை பயணம் எப்படி செல்கிறது, எதில் போய் முடிகிறது, என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்த நான்கு ஹீரோயின்களுமே தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கின்றனர். கதாபாத்திரங்களாகவே மாறி, கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர் நால்வரும். தனது தந்தையைஇழந்து மனம் உடைந்து அழும் காட்சியில் அம்மு அபிராமியாக இருக்கட்டும், கணவனையும் பிரிந்து மனதில் நினைத்த காதலனையும் பிரிந்து நிற்கும் தருணத்தில் வித்யா பிரதீப்பாக இருக்கட்டும், அனைத்து ஆண்களும் ஒரே எண்ணம் கொண்டவர்களாக தான் இருக்கிறார்கள் என்று தனது தந்தையை நினைத்து அழும் ஷாலினாக இருக்கட்டும், மனதிற்கு அவ்வளவு வலியை வைத்துக் கொண்டும் வயிற்றில் சிசுவை சுமந்து கொண்டும் அழுத்தமான வாழ்வை வாழ்ந்து வரும் கீர்த்தி பாண்டியனாக இருக்கட்டும் நடிப்பில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விட்டனர்.
பெண்களின் வாழ்க்கையை, அவர்கள் என்ன மாதிரியான சவால்களை சந்திக்கின்றனர், அதை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை தெளிவாக கொண்டு வந்து காட்டியதற்காக இயக்குனருக்கு பெரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.
ஷான் ரகுமானின் இசையில் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் ஓகே என்றாலும், அனைத்து தரப்பையும் எளிதில் சென்றடையுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகவே இருக்கிறது.
மயில்சாமியும் அம்மு அபிராமியும் பேசும் வசனங்கள் நிறைய விஷயங்கள் சொல்கிறது.இயக்குனராக யஷ்வந்த் கிஷோர் வென்றிருக்கிறார்.
0 comments:
Post a Comment