முதல் பட்டயமளிப்பு விழாவைக் கொண்டாடிய பன்னாட்டு திரை - பண்பாடு ஆய்வகம்
ஆய்வகத்தின் நிறுவனரும் தலைவருமான இயக்குநர் வெற்றிமாறன் , "விமர்சனங்களையும் பின்னூட்டங்களையும் திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டு செயல்படுங்கள்; அதுதான் சிறந்த படைப்பாளி என்ற அடையாளத்தைப் பெறுவதற்கான ஒரே வழி".
என்ற அறிவுரையைத் தந்ததோடு
ஐந்தாண்டுகளுக்கு முன் விதையாய் ஊன்றிய ஓர் எண்ணம் இன்று துளிர்விட்டிருப்பது மனநிறைவைத் தருகிறது என்றும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். திறமைகளும் ஆழ்ந்த தேடல்களும் நிரம்பித் ததும்பிய இந்த முதலாம் பட்டயமளிப்பு விழாவை நடத்தியதன் வாயிலாகப்
பன்னாட்டு திரை - பண்பாடு ஆய்வகம் (IIFC) கல்விப் புலத்தில் குறிப்பிடத்தகுந்தொரு தடத்தைப் பதித்திருக்கிறது. இந்தப் பட்டயமளிப்பு விழா வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் உயர்திரு. ஐசரி கணேஷ் அவர்களின் தலைமையிலும் முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ்.தாணு மற்றும் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு. எல்ரெட் குமார் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.
திரைக்கலையின் நுன்முகங்களைத் தழுவி , முதலாம் திரள் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாகிய குறும்படங்கள் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து திரையிடப்பட்டன. கதைச் சொல்லும் அழகியல் மற்றும் காட்சிக் கோப்பு என மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இத்திரைபடங்கள் பார்வையர்களின் கரவொலியைப் பெற்றன. பல்வேறு கதைக்களங்கள் மாறுபட்ட சமூகக் கண்ணோட்டங்கள் என மாணவர்களின் இந்தப் படைப்புகள் பன்னாட்டு திரை - பண்பாடு ஆய்வகத்தின் ' திரைகள் வழி சமத்துவம் நோக்கி ' என்ற முக்கிய இலக்கினை அடையும் சாத்தியத்தை உறுதிப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கே.கணேஷ் அவர்கள் தனது பட்டயமளிப்பு விழாப் பேருரையில் , இந்தப் புதிய படைப்பாளிகளுக்குத் தங்களது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும் என்றும் ஐஐஎஃப்சியின் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் அவரது வேல்ஸ் பல்கலைக்கழகம் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டார். அவரது இந்த அறிவிப்பை மாணவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். சிறப்புவிருந்தினர்கள் கலைப்புலி.எஸ் . தாணு மற்றும் திரு. எல்ரெட் குமார் ஆகியோரும் தங்களது வாழ்த்துரைகளில் தங்கள் அனுபவங்களையும் விலைமதிப்பற்ற அறிவுரைகளையும் வழங்கினர் .
இந்த பட்டயமளிப்பு விழாவானது , மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்குச் சான்றாக மட்டுமன்றி பன்னாட்டு திரை - பண்பாடு ஆய்வகத்தின் அர்ப்பணிப்போடு கூடிய செயல்பாடுகளுக்கும் சான்றாக அமைந்தது. இந்த விழா ஒரு கல்விப் பயணத்தின் சிகர நிகழ்ச்சியாக அமைந்ததோடு அல்லாமல் திரைப்படத் துறையின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளுக்கு ஆற்றுப் படுத்தும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவும் அமைந்தது.
இறுதியாக சமூக சமத்துவத்தை அடைவதற்கு தார்மீகப் பொறுப்பேற்று செயல்படுவோம் என்றும் சமூக சமத்துவத்தை அடையும் மாற்றத்திற்கான காரணிகளாக
இருப்போம் என்றும் அவையின் ஆன்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்தப் பட்டயமளிப்பு விழா , திரை உலகில் நாளை அசாத்திய தடங்களைப் பதிக்க காத்திருக்கும் இளம் படைப்பாளிகளின் திறனையும் உறுதியையும் எதிரொலித்தபடி இனிதாக நிறைவுற்றது.
0 comments:
Post a Comment