கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

 

இணையதள விளையாட்டுகளை உருவாக்கும் வேலையில் ஆர்வமாக இருக்கும் நாயகனுக்கு விநோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகினைத் தெரியாமல் பறித்து விடுகிறார். இதன் பின்னர் அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் ஒரு பாழடைந்த பங்களாவில் பேய்களால் விரட்டப்படுகிறார். அங்கு உயிர் போனால் நிஜ உலகிலும் உயிர் போகும் என்கிற சூழல்.அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம், அவருக்கு மருத்துவம் பார்த்த ரெடின் கிங்ஸ்லி, தாதா ஆனந்தராஜ் ஆகியோரும் அந்த இறகின் பிடியில் சிக்குகிறார்கள்.


இதனால், சம்பந்தப்பட்ட எல்லோரும் கனவில் ஒன்றாகப் போய் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த இறகின் பின்னணி மற்றும் அதனால் ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து அனைவ்ரும் மீண்டாகளா? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் காஞ்சூரிங் கண்ணப்பன்.


நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக நடித்தால் அவரிடமிருந்து நகைச்சுவையைத்தான் அதிகம் எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ற கதையைத் தேர்வு செய்திருக்கிறார் சதீஷ்.சிரிக்க வைக்கும் காட்சிகளைத் தாண்டி அழுத்தமான காட்சிகளிலும் பொருத்தமாக நடித்திருக்கிறார்.


நாயகி ரெஜினா கேசன்ட்ரா இந்தப்படத்தில் பேய் ஓட்டுபவராக நடித்திருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.இவர் மட்டுமின்றி எக்ஸார்சிஸ்ட் ஏழுமலை எனும் பேய் ஓட்டும் நிபுணராக நாசரும் நடித்திருக்கிறார்.நிபுணர் என்பதற்கேற்ற நடிப்பைக் கொடுத்துள்ளார்.


சதீஷின் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனும் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார். ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், நமோ நாராயணா, ஆதித்யா கதிர் ஆகிய எல்லொருக்குமே சிரிக்க வைக்கும் பணி. இவர்களில் ஆனந்தராஜ் முன்னிலை வகிக்கிறார்.


யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் பேய்க்காட்சிகள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் தனித்தனியாகத் தெரிகின்றன.


ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவுக்கு நிறைய வேலை உள்ள கதை.உண்மை உலகம், கனவுலகம் ஆகியன மாறி மாறி வரவேண்டும். அவை மாறுபட்டுத் தெரியவேண்டும். இதை உணர்ந்து உழைத்திருக்கிறார்.படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் இன்னும் கூடுதலாக வேலை செய்திருக்கவேண்டும்.


புது இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர், நனவுலகம் கனவுலகம், பேய் என எல்லாவற்றையும் கலந்துகட்டி மக்களை மகிழ்விக்க வேண்டும் எனும் ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட்டிருக்கிறார்.

0 comments:

Pageviews