முதல்முறை பரிசோதனை முயற்சியிலான பிரியங்கா உபேந்திராவின் படம் ரிலீஸுக்கு தயார்
கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவின் மனைவி பிரியங்கா, உலகிலேயே முதன்முறையாக முழுவதுமாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை முயற்சியிலான ஒரு படத்துடன் தயாராகி வருகிறார். அதுமட்டுமல்ல உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான படங்களில் ஒன்றும் கூட. நாவல்களை படமாக்குவதற்காக பெயர்பெற்ற இயக்குனர் லோஹித்.ஹெச் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் மம்மி மற்றும் தேவகி ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரியங்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன்ஸ் சார்பில் ரவி ராஜ், ஷாமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளார். ராதிகா குமாரசாமி இந்தப்படத்தை வழங்குகிறார்.
இந்தப்படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது. இதற்கிடையே சுற்றிலும் பல சிசிடிவி கேமராக்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் பிரியங்கா உபேந்திரா, முகம் முழுவதும் மிகுந்த ரத்தக்காயங்களுடன் காணப்படும் ஒரு புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு கேமராவின் மீது ஒரு காகம் அமர்ந்திருப்பதையும் இந்த போஸ்டரில் நாம் பார்க்க முடிகிறது. பிரியங்காவின் புன்னகை மற்றும் சந்தேகத்திற்கிடமான முகம் நம்மிடையே படம் குறித்து அதிகம் தெரிந்துகொள்ளும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இப்படி பதட்டம் ஏற்படுத்தும் போஸ்டர் இந்தப்படம் எதைப்பற்றியது என அறிந்துகொள்ளும் ஆவலை நம்மிடம் உருவாக்குகிறது..
சிவராஜ்குமாரின் டகரு படத்தின் மூலம் புகழ்பெற்ற மன்விதா காமத் இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்துள்ளார். மாஸ்டர் கிருஷ்ணராஜ் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அறிமுகமாகிறார். பாண்டிக்குமார் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை ரவிச்சந்திரன் மேற்கொள்கிறார்.
0 comments:
Post a Comment