'லாக்கர்' விமர்சனம்

 

விக்னேஷ் சண்முகம்,நிரஞ்சனி அசோகன்,  நிவாஸ் ஆதித்தன் , சுப்பிரமணியன் மாதவன், தாஜ்பாபு, பெனட், ஆறுமுகம் ஆகியோர் நடித்துள்ள படம்.


தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின்   

ராஜசேகர். என் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற

இரட்டையர்கள் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார்கள். திரைப்படக் கல்லூரி மாணவர் தணிகை தாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார் வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார்.

வரிகளை 

கார்த்திக் நேத்தா,விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.

படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.


இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.


கதாநாயகன் விக்னேஷ் சண்முகம் நாற்காலியில் வைத்துக் கட்டப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டு 'சரக்கு எங்கே வைத்திருக்கிறாய்?' என்று வில்லன்களால் மிரட்டித் தாக்கப்படுகிறார். இப்படிப்பட்ட காட்சியுடன் படம் தொடங்குகிறது.


அவர் யார்? என்ன செய்தார் என்று காட்சிகள் விரிகின்றன.கதாநாயகனும் அவரது நண்பர்களும் இணைந்து ஒரு வழிப்பறியில் இறங்குகிறார்கள்.தேர்தலில் மக்களுக்காக வாக்குக்குக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் பல லட்ச ரூபாய் பணத்தை நூதனமான முறையில் மோசடி செய்து கைப்பற்றுகிறார்கள்.அப்படிப்பட்ட நாயகனை நிரஞ்சனி காதலிக்கிறார். காதலன் ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரிந்து விலக நினைக்கிறார். தன்னைப் பற்றித் தவறாக நினைத்த காதலியை விக்னேஷ் அறைந்து விடுகிறார்.விக்னேஷ் தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல விரும்புகிறார். அவர்கள் இருவரும் தனியே அமர்ந்து ஒரு காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது  அங்கே வரும் ஒருவரைப் பார்த்து பதற்றப்பட்ட நிரஞ்சனி, அந்த நபரைப் பற்றிக் காதலனிடம் கூறுகிறார்  அவர் தன் குடும்ப சொத்துக்களை அபகரித்துக் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு,தன்னை அனாதையாக்கியவர் என்கிறார் .அதனால் அவரைப் பழிவாங்க வேண்டும் என்று காதலனைத் தூண்டிவிடுகிறார். அந்த நபர் தான் சக்கரவர்த்தி. அவர் வெளிநாட்டிலிருந்து தங்கத்தை மோசடியாகக் கடத்தி வியாபாரம் செய்து வரும் கோல்டு மாபியா.அதன்படி காதலன் விக்னேஷ், தங்க மோசடி நபரின் லாக்கரிலிருக்கும் 6 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளைத் திருடத் திட்டமிடுகிறார்.தங்கள் திட்டப்படியே திருடியும் விடுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் திடுக் திடுக் சம்பவங்கள் தான் 'லாக்கர்' படத்தின் கதை செல்லும் பயணம்.


படத்தின் முதல் பாதியில் கதாநாயகன்  அரசியல்வாதியின் பணத்தைப் போலிரூபாய் நோட்டு வைத்து இடமாற்றுவதைக் காட்டி விறுவிறுப்பு ஊட்டுகிறார்கள். அந்தப் பணத்தைப் பறி கொடுத்தவர்கள் கண்டுபிடித்து, குட்டு வெளியாகுமோ என்று பயந்து கொண்டிருக்கும் போது அந்த அரசியல்வாதியே நாயகன் வீடு தேடி வரும்போது நாயகனைப் போலவே பார்வையாளர்களுக்கும் பதற்றம் வருகிறது. ஆனால் அவர் ஒரு வாக்காளராக நாயகன் வாக்களிக்க, பணத்தைக் கொடுத்து விட்டுச் செல்கிறார்.

அந்த திருடப்பட்ட பணத்தின் தேடுதல் வேட்டையாகப் படம் இருக்குமோ என்று நினைத்தால்  படத்தின் இரண்டாவது பாதி வேறு விதமாக நிறம் மாறுகிறது.


"ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டு சக்கரவர்த்தியை எப்படி பழி வாங்குவது என்று ஸ்கெட்ச் போடுவோமா?" என்று காதலன் சொல்வதோடு முதல் பாதிப்படம் முடிகிறது.


இரண்டாவது பாதியில் வேறு ஒரு கதை விரிந்து வேறொரு தளத்துக்குச் செல்கிறது.

காதலிக்காக சக்கரவர்த்தியின் லாக்கரில் உள்ள தங்கக் கட்டிகளைத் திருடும்  கதையாக மாறுகிறது.


படத்தின் நாயகன் விக்னேஷ் சண்முகம் , அந்த ஜனா பாத்திரத்திற்கு ஏற்றபடி தன்னைப் பொருத்திக் கொண்டு நடித்துள்ளார்.முதல் திருட்டை அனாயாசமாகச் செய்யும் போதும் காதலியுடன் ரொமான்ஸ் காட்சிகளின் போதும் லாக்கரில் உள்ள தங்க கட்டிகளை திருடும்போது நிதானமாகச் செல்லும்போதும்  இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.


நிரஞ்சனி அசோகன் கதாநாயகி பூஜா பாத்திரத்தில் நடித்துள்ளார். இயல்பான அளவான நடிப்பு. மிகை நடிப்பு தோன்றாமல் நடித்துள்ளதன் மூலமே தன் முதல் படத்தில் நடிப்பில் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார்.


ஆடிட்டர் சேதுராமனாக முக்கியமான பாத்திரத்தில் வரும் சுப்பிரமணியன் மாதவன் வழக்கம் போலவே அந்தப் பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்துள்ளார்.


கோல்ட் மாபியா  சக்கரவர்த்தி பாத்திரத்தில்  வரும் நிவாஸ் ஆதித்தன், தன் உடல் மொழியாலும் பொருத்தமான.ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பாலும் கவனம் பெறுகிறார்.


கதாநாயகனின் நண்பன் கதிராக வரும் நடிகர் தாஜ்பாபு தோற்றத்திலும் நடிப்பிலும் பதிகிறார்.

லாக்கர் திருட்டில் உடன் வரும் வெங்கட் அண்ணாவாக வரும் பிரகாஷ் என்பவருக்கும் மனதில் பதிகிற பாத்திரம் தான்.


முதல் பாதியில் மிதமான வேகத்தில் செல்லும் கதை இரண்டாவது பாதியில் வேகம் எடுக்கிறது.அதை கிளைமாக்ஸ் வரை கொண்டு பரபரப்பைப் பராமரித்துள்ள இயக்குநர்களின் திரைக்கதை பாராட்டுக்குரியது.


படத்தில் நீளமாகப் பேசும் வசனங்கள் இல்லை.அளவோடு வசனங்களை வைத்துள்ளார்கள்.


சில இயல்பான ஈர்க்கும் வசனங்கள் உண்டு சாம்பிளுக்கு ஒன்று "இந்த உலகத்தில் நாம் எடுக்கிற பெரிய ரிஸ்க் எது தெரியுமா?எந்த ரிஸ்க்குமே எடுக்காம இருக்கிறதுதான்"


படத்தைப் பெரிதளவு உயர்த்தி தூக்கிப் பிடிப்பது தணிகை தாசனின் ஒளிப்பதிவு தான் என்றால் அது மிகையில்லை.சிறு முதலீட்டில் உருவான இந்தப் படத்தில்  பட்ஜெட் படம் என்கிற வறுமை தெரியாமல் மிக அழகாக பளிச்சென்று தனது கோணங்களால் ஒளி அமைப்புகளாலும் அந்தக் காட்சிகளுக்குச் செழுமை செய்துள்ளார். நாயகன் நாயகிக்குரிய க்ளோஸ் அப்  காட்சிகளில் அவர் செய்திருப்பது தேர்ந்த ஒளிப்பதிவுக்கான சாட்சி.படத்தின் முதல் பாதியை விட இரண்டாவது பாதிக்குப் பெரிய படத்திற்கான தரத்தைக் கூட்டி உள்ளது ஒளிப்பதிவு.


இந்தப் படத்தில் ஒரு கதை நகர்ந்து ஒரு திரில்லர் கதையாக மாறும் தருணங்களைத் தனது பின்னணி இசை மூலம் பிரமாதப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீனிவாசன் .திகில் படம் என்றாலே அளவுக்கு அதிகமாக இரைச்சலைக் காட்டிப் பயமுறுத்தாமல், அளவான சின்ன சின்ன ஒலித்துணுக்குகள் மூலம் கூட அந்த சூழலைப் புரிய வைத்துள்ளார் வைகுந்த் ஸ்ரீனிவாசன். படத்தில் ஒலிக்கும் பாடல்களிலும் குறையில்லை.


படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் கண பார்த்தி,தன் பங்கில் குறை வைக்கவில்லை.


தொழில்நுட்ப தளத்தில் நேர்த்தி காட்டிய அளவிற்குத் திரைக்கதையிலும் மேலும் சிந்தித்து இருந்தால்  இன்னும் சிறப்பாகப் படம் வந்திருக்கும்.ஆங்காங்கே எழும் லாஜிக் கேள்விகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.


மொத்தத்தில் இந்த லாக்கர் படம் சிறிய பட்ஜெட் படங்களில் கவனிக்கத்தக்க இடத்தைப் பெறுகிறது என்று கூறலாம். நம்பி வந்தவர்களை ஏமாற்றாது இந்த 'லாக்கர்''

0 comments:

Pageviews