69 ஆண்டு பாரம்பரியம் மிக்க 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்' தின் தீபாவளி மலர் வெளியீடு & தீபாவளி பரிசு வழங்கும் விழா!

 

69 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தின் தீபாவளி மலர் 2023 வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நவம்பர் 10 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அமீர், நடிகர்கள் மிர்ச்சி சிவா, மாஸ்டர் மகேந்திரன், செளந்தரராஜா, அமீர் நாயகராக நடித்துள்ள 'இறைவன் மிகப் பெரியவன்’ படத்தயாரிப்பாளர் ஜாஃபர், ’மாயவலை’ பட இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன், இயக்குநர் ஷாம், சினிமா பி.ஆர்.ஓ சங்கத்தின் தலைவர் விஜய முரளி மற்றும் கெளரவ தலைவர் டைமண்ட் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.


பட்டாசு, இனிப்பு மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை கொண்ட தீபாவளி பரிசு தொகுப்பை சிறப்பு விருந்தினர்கள் உறுப்பினர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல், சங்கத்திற்காக நன்கொடையும் வழங்கினார்கள். குறிப்பாக நடிகர் மிர்ச்சி சிவா அவர்கள் யாரும் கேட்காமலே ரூ.1 லட்சத்தை சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கி உறுப்பினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவரை தொடர்ந்து அமீர் இயக்கி நடிக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர்  அவர்களும் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். அதேபோல், இயக்குநரும் நடிகருமான அமீர் அவர்களும் தற்போது தான் தயாரித்து நடித்து வரும் ‘மாயவலை’ திரைப்படம் சார்பில் சங்கத்திற்கு நிதி உதவி செய்வதாக அறிவித்தார்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் சிவா, யாரும் எதிர்பார்க்காத வகையில் மேடையில் ரூ.1 லட்சத்தை சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியதோடு, தயவு செய்து இந்த தகவலை யாரும் செய்தியாகவோ அல்லது புகைப்படமாகவோ வெளியிடாதீர்கள். உங்கள் சங்கத்திற்கு என்னுடைய சிறிய தீபாவளி பரிசு. உங்களுடைய ஒத்துழைப்பு திரைத்துறைக்கு மிக மிக அவசியம், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நாங்களும் மகிழ்ச்சியாக இருப்போம்” என்று பேசினார்.


(நடிகர் மிர்ச்சி சிவா, தான் செய்த உதவி பற்றி பெரிதாக வெளியே தெரியப்படுத்த வேண்டாம்  என்று பத்திரிகையாளர்களை கேட்டு கொண்டாலும், ஒரு நல்ல விஷயத்தை நான்கு பேர் அல்ல, நாடே தெரிந்துக்கொண்டால் ... தொடர்ந்து இதுபோன்ற நல்ல  உதவி கரமான விஷயங்களை பலர் செய்வார்கள் என்பதற்காக சிவாவின் இந்த கேட்காமல் செய்த உதவியை பலருக்கு தெரிய படுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. மன்னிக்கவும் மிர்ச்சி சிவா.)


இயக்குநர் அமீர் பேசுகையில்.., “தற்போதைய சூழலில் விமர்சனங்கள் திரைப்படங்களுக்கு எதிராக இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இன்று சினிமா எப்படி வேறு ஒரு வடிவத்திற்கு வந்துவிட்டதோ அதுபோல் ரசிகர்களும் மாற்றம் அடைந்து விட்டார்கள். ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஊடகமாக வளர்ந்திருக்கிறார்கள், அதனால் அனைவருடைய கருத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அதே சமயம், ஒரு விமர்சனம் என்பது ஒரு திரைப்படம் தொடர்பானதாக மட்டுமே இருக்க வேண்டும். நான் ஒரு படம் இயக்குகிறேன், என்றால் அந்த படத்தில் உள்ள குறைகளை தாராளமாக விமர்சிக்கலாம், அது தவறே இல்லை. ஆனால், அந்த படத்தை விட்டுவிட்டு அதில் பங்குபெற்றவர்களை வைத்து வேறு விதமாக விமர்சிப்பதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்று தான் நான் கேட்டுக்கொள்கிறேன்.


சினிமா பத்திரிகையாளர் சங்கம் வருடம் வருடம் தீபாவளியன்று பத்திரிகையாளர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன். எப்போது நீங்கள், எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் நான் வருவேன். உங்கள் தீபாவளி மலர்களுக்கு இனி என் பட விளம்பரங்கள் நிச்சயம்” என்றார்.


நடிகர் செளந்தரராஜா பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு குடும்ப நிகழ்வுக்கு வந்தது போன்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்படுகிறது. எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.” என்றார்.


நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசுகையில், “நான் இந்த இடத்திற்கு வந்ததற்கு பத்திரிகையாளர்களும் ஒரு காரணம், அவர்களுடைய ஆதரவு பலரை வளர்த்து விட்டிருக்கிறது. இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.” என்றவர் நிகழ்ச்சி முடிந்ததும் சங்க வங்கி கணக்கிற்கு ரூபாய் பத்தாயிரம் அனுப்பி வைத்தார்.


இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் பேசுகையில், “இயக்குநர் அமீருடன் தான் இங்கு வந்தேன், இந்த நிகழ்ச்சிக்கும், பத்திரிகையாளர்களுக்கும் என் வாழ்த்துகள்.” என்றார்.


தயாரிப்பாளர் ஜாஃபர் பேசுகையில், “இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் போல் நானும் அமீர் அண்ணனுடன் தான் இங்கு வந்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சங்கத்திற்கு பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு ரூ.1 லட்சம் என் சார்பில் வழங்குவதாக அறிவிக்கிறேன்.” என்றார்.


சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பாலேஷ்வர், செயலாளர்- R.S.கார்த்திக்@, கார்த்திகேயன், பொருளாளர்  -மரிய சேவியர் ஜாஸ் பெல், கெளரவ தலைவர்-கலைமாமணி' நெல்லை சுந்தரராஜன், துணைத் தலைவர்கள் - 'கலைமாமணி' மணவை பொன் மாணிக்கம், 'கலக்கல்' E.சுகுமார் , இணைச் செயலாளர்கள் - J.சுகுமார், மதிஒளி குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் குறள் டி.வி.மோகன், T.சரண்@சரவணன், A.ஹேமலதா, ஜாக்மென்,  மதிஒளி ராஜா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களுக்கு கதர் சால்வை அணிவித்து கெளரவித்தனர்.


0 comments:

Pageviews