ஷாட் பூட் த்ரீ விமர்சனம்

 

நாம் இருவர் நமக்கு ஒருவர் எனும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உயர்நடுத்தரவகுப்பினர் குடும்பங்களில் பெரிதும் நடக்கும் சிக்கல் ஒன்றைக் கையிலெடுத்து அதன்மூலம் மாந்தநேயம் மட்டுமின்றி உயிர்நேயம் முதன்மை என்கிற ஆழமான கருத்தியலை அழகாகச் சொல்லியிருக்கும் படம் ஷாட்பூட்த்ரி.


இயக்குநர் வெங்கட்பிரபுவும் சினேகாவும் தம்பதியர்.இருவரும் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகன் கைலாஷ்ஹீட்..மகனுடன் நேரம் செலவிட அவர்களுக்கு வாய்க்கவில்லை. தன் தனிமையைப் போக்கிக் கொள்ள ஒரு நாய்க்குட்டியை வள்ர்க்கிறார்.அதுவும் ஒருநாள் காணாமல் போகிறது. தன் நண்பர்களுடன் சேர்ந்து அதைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறார் கைலாஷ்.


அந்தத் தேடலில் நாய் கிடைத்ததா? வேறு என்னென்ன கிடைத்தன என்பதைச் சொல்வதுதான் திரைக்கதை.


வெங்கட்பிரபு சினேகா தம்பதி பொருத்தமான இணை என்கிற நற்பெயரைப் பெறுகிறார்கள்.கதாபாத்திர வடிவமைப்பு அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் நடிப்பு ஆகியன அந்த நற்பெயருக்குக் காரணம்.


சிறுவன் கைலாஷ்ஹீட் மட்டுமின்றி ஏழை வீட்டுச் சிறுவர் பூவையார், வேதாந்த் மற்றும் சிறுமி பிரணதி ஆகிய நால்வரும் இயக்குநர் சொன்னதைப் புரிந்து நடித்திருக்கிறார்கள். ஏழை பணக்கார வேறுபாடுகளை அந்தப்பாத்திரங்களில் அமைத்திருப்பது திரைக்கதைக்குப் பெரும்பலம்.


இயக்குநர் அருணாசலம் வைத்தியநாதன்,சிவாங்கி, சாய்தீனா, சுரேஷ் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோரும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.


ராஜேஷ்வைத்யா இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை சில இடங்களில் நன்று.


சுதர்சன்சீனிவாசனின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நாயைத் தேடும் காட்சிகள் அவர் இரசித்து நாமும் இரசிக்கும்படி அமைத்திருக்கிறார்.


எழுதி இயக்கியிருக்கும் அருணாசலம் வைத்தியநாதன், குழந்தை வளர்ப்பு, அனைத்து உயிர்களையும் நேசிக்கும் பண்பு ஆகியன குறித்த பாடங்களைப் படமாக எடுத்திருக்கிறார்.


திரைமொழியில் சில குறைகள் இருப்பினும் பேசவந்த கருத்தும் பெரும்பாலான காட்சிகளும் படத்தை இரசிக்க வைத்திருக்கின்றன.


பெரியவர்களுக்கான குழந்தைகள் படம்.

0 comments:

Pageviews