சித்தா விமர்சனம்

 பழனியில் உள்ள கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் பிரிவில் ஆபீஸராக இருக்கும் சித்தார்த் தனது அண்ணி அஞ்சலி நாயர் மற்றும் மறைந்த அவர் அண்ணன் மகள் சிறுமி சஹஸ்ராஶ்ரீ உடன் வசித்து வருகிறார். அவரது அண்ணன் மகள் சித்தார்த் மீது மிகுந்த பாசமாக இருக்கிறது. இதனால் அவர் சித்தப்பா என்பதால் அவரை சித்தா என்று அழைக்கிறது. இருவரும் தந்தை மகளாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சித்தார்த் போலீஸ் நண்பனின் அக்கா மகள் சிறுமி திடீரென காணாமல் போய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இதற்கு முதலில் சித்தார்த் தான் காரணம் என சந்தேகிக்கப்பட்டு பின்னர் அதற்கு வேறு ஒருவர் தான் காரணம் என கண்டுபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சித்தார்த்தின் அண்ணன் மகளும் திடீரென மாயமாகிறார். அவளையும் பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஒருவன் கடத்தி விடுகிறான். இதையடுத்து அவனிடம் இருந்த அந்த சிறுமியை காப்பாற்றினார்களா, இல்லையா? சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசாமி என்னவானார்? என்பதே சித்தா படத்தின் மீதி கதை.


சித்தார்த்தை தொடர்ந்து நாம் பல படங்களில் பார்த்திருந்தாலும், இந்த படத்தில் முழுக்க முழுக்க புதியவராக தெரிகிறார். அழுக்கு சட்டை போட்டாலும், பணக்கார வீட்டு பையனாகவே தெரியும் சித்தார்த்தை முதல் முறையாக கதாபாத்திரத்திற்கான நடிகராக மாற்றியிருக்கிறார்கள். உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரமாக வலம் வரும் சித்தார்த், தன் மீது பழி விழுந்ததும் என்ன நடந்தது என்று தெரியாமல் தடுமாறுவது, மகள் காணாமல் போனதால் நிலைகுலைந்து போவது, மகளுக்கு நடந்த கொடுமைக்கு காரணமானவர்களை கொலை செய்ய துடிப்பது, என அனைத்து காட்சிகளிலும் உணர்ச்சிரமான நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார். நிமிஷா சஜயன் மிக இயல்பாக நடித்திருக்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி ஆக்ரோஷமாக பேசாமல் அளவாக பேசினாலும் அவர் பேசும் வசனங்கள் பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


தான் எடுத்துக்கொண்ட கதையை முழுக்க முழுக்க சினிமாத்தனமாக அல்லாமல் எதார்த்தமான வாழ்வியலாக கொடுத்ததோடு, அதை விறுவிறுப்பாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லி ரசிகர்களின் இதயத்தை கணக்க செய்திருக்கும் இயக்குநர் எஸ்.ய்.அருண்குமார் மனித உணர்வுகளை வைத்து மீண்டும் ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்திருக்கிறார்.


சித்தா - நல்ல விழிப்புணர்வு படம் !

0 comments:

Pageviews