’800’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

 

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து '800' என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று  (08.09.2023) சென்னையில் நடந்தது. 

இதில் கலந்து கொண்ட இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி பேசியதாவது, “முத்தையா சார் சிவில் வார் நடந்த ஒரு இடத்தில் இருந்து வந்துள்ளார். அது சாதாரணமானது கிடையாது. அதனால், இவர் கதையை சொல்வதும் அத்தனை எளிதாக இல்லை. நிறைய பொறுப்பு இருந்தது. அவரது பூர்வீகம், குழந்தைப் பருவம், குடும்பம் என வாழ்க்கை வரலாறு அனைத்தையும் தெரிந்து கொண்டேன். நிறைய சவால்களைத் தாண்டி இந்தப் படத்தை எடுத்து முடித்து வெளியிட உள்ளோம். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”.


ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் பேசியதாவது, “கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அப்படி இருக்கும் போது முத்தையா சாருடைய படம் நான் செய்வேன் என எதிர்பார்க்கவே இல்லை. பின்பு படம் ஆரம்பித்ததும் ஒரு சிறு தடங்கல் வந்தது. மீண்டும் மதுர் மிட்டலுடன் ஆர்மபித்தது மகிழ்ச்சி. அவர் அப்படியே முத்தையா போலவே இருந்தார். எந்தவிதமான தடையும் இல்லாமல் படத்தை முடித்தோம். வழக்கமான கிரிக்கெட் படத்தைப் போல அல்லாமல் அவரது வாழ்க்கையும் இதில் இருக்கும். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார். 


காஸ்ட்யூம் டிசைனர் பூர்த்தி, “காஸ்ட்யூம் டிசைனராக எனக்கு இப்படி ஒரு கிரிக்கெட் படம் கிடைத்ததில் பெருமையாக உள்ளது. என்னுடைய முதல் கிரிக்கெட் படம் என்பதால் இது என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. படத்தைப் பார்த்து விட்டு சொல்லுங்கள்”.


ஆக்‌ஷன் கோரியோகிராஃபர் அசோக் பேசியதாவது, “முதலில் இயக்குநர் ஸ்ரீபதிக்கு பெரிய நன்றி. படத்தில் கதைக்கு தேவையான இரண்டு ஸ்டண்ட் உள்ளது. நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும்”.


ஸ்ரீஹரி மூவிஸ் கிருஷ்ண பிரசாத், “சமீபத்தில் ‘யசோதா’ படம் செய்தோம். இயக்குநர் ஸ்ரீபதி எங்கள் மகன் போல. இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இந்தப் படத்தை வெளியிடுகிறோம். உணர்ச்சிகரமான படமாக வந்துள்ளது. வெறும் கிரிக்கெட் படமாக மட்டுமல்லாமல் அதற்கு பின்னால், சிறுவயதில் இருந்து ஒரு மனிதனுடைய போராட்டமாக இந்தப் படம் இருக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பேசியுள்ளார். 


சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், “முத்தையா முரளிதரனின் பயோபிக் வெளியிடுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. ’இந்தப் படத்தை நீங்கள்தான் வெளியிட வேண்டும் என நாங்கள் முடிவு செய்து விட்டோம். நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக வந்துள்ளது’ என கிருஷ்ண பிரசாத் சார் சொன்னார். இந்தப் படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரிலீஸாக இருக்கும். மிகப்பெரிய வெற்றியடையும்”.


இயக்குநர், நடிகர் கிங் ரத்தினம், “என்னை அர்ஜூன் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்த இயக்குநர் ஸ்ரீபதிக்கு நன்றி. நானும் ஒரு கிரிக்கெட் பைத்தியம். முரளி அண்ணாவின் தம்பியும் நானும் ஒரே ஸ்கூலில் படித்தோம். அவரின் வளர்ச்சியை கூட இருந்து பார்த்தவர்கள் நாங்கள். இந்தப் படம் இலங்கையில் உள்ள 60 தமிழ்க் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இலங்கை சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்தப் படம். இலங்கையில் சொல்லப்பட வேண்டிய நிறைய கதைகள் உள்ளது. இதற்கு இந்திய சினிமா நிச்சயம் ஆதரவு கொடுக்கும் என நம்புகிறேன்” என்றார். 


நடிகை மஹிமா நம்பியார், “என்னுடைய கரியரில் மிகச்சிறந்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன். ஹீரோவுடைய பயோபிக் எனும்போது எனக்கு குறைந்த காட்சிகளே இருக்கும். இருந்தாலும், நான் நடித்த சில காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இது முத்தையா முரளிதரனின் கதை மட்டுமல்ல. விளையாட்டு, இலங்கையின் கதையும் இது. டிரெய்லர் பார்த்த பிறகு அவரின் கதையை மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பதாகப் பலரும் என்னிடம் கூறியுள்ளனர். படத்தை நானும் இன்னும் முழுதாக பார்க்கவில்லை. கிரிக்கெட்டராக முத்தையாவை தெரிந்த பலருக்கும் அதையும் தாண்டி அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இந்தப் படம் நிச்சயம் உதவும். மதுர் இந்தப் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார்.  இயக்குநர் ஸ்ரீபதி, தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படக்குழுவுக்கு நன்றி” என்றார்.


நடிகர் மதுர் மிட்டல் பேசியதாவது, “என்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு முத்தையா சாரின் கதாபாத்திரம் நடிக்கக் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம். இயக்குநர் ஸ்ரீபதி, மஹிமா, ஆர்.டி. சார் அனைவருக்கும் நன்றி. படத்தில் பல முக்கியமான தருணங்களை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார். 


கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் பேசியதாவது, “இயக்குநர் வெங்கட்பிரபு, இயக்குநர் ஸ்ரீபதி என நாங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மன்றம் அமைத்தோம். என் கஷ்டத்தின் போது உதவி செய்த என் நாட்டு மக்களுக்கு திரும்ப நல்லது செய்ய வேண்டும் என இதை ஆரம்பித்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, ஆயிரம் மாணவர்களைப் படிக்க வைப்பது என பல விஷயங்களை செய்து வருகிறோம். வெங்கட்பிரபுவும் என் மனைவியும் சிறு வயது நண்பர்கள். அவர்கள் சந்தித்து பேசினார்கள். வெங்கட்பிரபு பேசிக் கொண்டிருக்கும் போது, என்னைப் பற்றி பயோபிக் எடுக்கலாம் என்று சொன்னார். இந்தப் படம் மூலம் வரும் பணம் டிரஸ்ட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று என் மேனேஜர் ஆலோசனை சொன்னார். என்னைப் பற்றி நன்றாக ஆராய்ந்து தான் இயக்குநர் ஸ்ரீபதி கதை எழுதியுள்ளார். வெங்கட்பிரபுதான் முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை என்பதால் விலகிவிட்டார். ஸ்ரீபதியை நான் இயக்க சொன்னேன். பின்பு விஜய்சேதுபதி வந்தார். ஆனால், அதிலும் பிரச்சினை வந்தது. இந்த பிரச்சினைகள், கோவிட் இதை எல்லாம் தாண்டி படத்தை முடித்த இயக்குநர் ஸ்ரீபதிக்கும், படத்திற்கு ஒத்துழைத்த மொத்த குழுவுக்கும் நன்றி.  நாங்கள் மலையகத் தமிழர்கள் வம்சாவளியில் வந்தோம். எங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பல தடைகள் வந்தது. படத்திற்கும் அப்படியான தடைகள் இருந்தது. ஆனால், இலங்கையில் எடுத்த 80 நாட்களும் படத்தைப் பற்றிப் புரிந்து கொண்டு அரசு ஒத்துழைப்புக் கொடுத்தது. எல்லாம் உண்மை சம்பவங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஸ்கிரிப்டில் அப்படியே ஸ்ரீபதி கொண்டு வந்துள்ளார். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. ’நீங்கள் காப்பி பண்ண வேண்டாம், எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் நடியுங்கள்’ என்று ஹீரோ மதுரிடம் சொன்னேன். கிரிக்கெட் படமாக இல்லாமல் ‘800’ நான் சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன, என்ன பிரச்சினைகளோடு விளையாடினேன், என்னால் நாடு எந்த நிலைக்கு வந்தது என்பது குறித்து இந்தப் படத்தில் பேசியுள்ளோம். படம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார்.


0 comments:

Pageviews