DD Returns விமர்சனம்

 

பாண்டிச்சேரியில் சாராயக் கடைகள் மூலம் மிகப்பெரும் தொழிலதிபராக இருக்கும் பெப்சி விஜயனின் பணத்தைத் திருடன் பிபின் கும்பல் கொள்ளையடித்து விடுகிறது. இவர்களிடம் இருந்து மொட்டை ராஜேந்திரனின் திருட்டுக் கும்பல் அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து விடுகிறது. பிறகு இவர்களிடம் இருக்கும் பணம் சந்தானம் டீமிடம் கைமாறுகிறது. சந்தானம் டீம் அந்தப் பணத்தை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் காட்டுப் பேய் பங்களாவுக்குள் ஒளித்து வைத்து விடுகிறார்கள். பங்களாவில் வைத்த பணம் தீடிரென்று காணாமல் போய்விடுகிறது. அந்த பணத்தை திரும்பக் கொண்டு வர சந்தானம் டீம் அந்தப் பங்களாவிற்குள் செல்கின்றனர். போன இடத்தில் பங்களாவிற்குள் இருக்கும் பேய் இவர்களை வைத்து ஒரு கேம் விளையாடுகிறது. அந்த கேமில் வெற்றி பெற்றால்தான் பணம் உங்களுக்கு எனக்கூறி விடுகிறது. இதையடுத்து அந்த கேமில் வெற்றி பெற்றார்கள்?  இல்லையா? என்பதே டிடி ரிட்டன்ஸ் படத்தின் மீதிக் கதை.


கடந்த சில படங்களாக சீரியஸ் ரோலில் நடித்த சந்தானத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை புரிந்த சந்தானம் தனது வழக்கமான பாணியான காமெடியை இப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். தன் வழக்கமான காமெடி பஞ்சுகளால் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கிறார் சந்தானம். இதைத் தவிர முனீஸ் காந்த்,ரெடின் கிங்சிலி, பிபின், பெப்சி விஜயன்,மாறன் என நகைச்சுவை ஜாம்பவான்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை இடைவிடாது சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடித்திருப்பதால் இவர்களின் முழு நகைச்சுவை திறனை வெளிப்படுத்தும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. நாயகியான சுரபிக்கு இவர்களுக்கு மத்தியில் நடிக்க பெரிய அளவு கேரக்டர் இல்லை. வில்லன் பிரதீப் ராவத்தின் வித்தியாசமான பேய் கதாபாத்திரம் சில இடங்களில் திகிலையும் பல இடங்களில் காமெடியையும் கொடுத்து நம்மை ரசிக்க வைக்கிறது. இயக்குனர் ராம் பாலாவின் அசிஸ்டன்டான பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தன்னுடைய குரு கையாண்ட அதே பாணியை தான் இவரும் கையில் எடுத்திருக்கிறார். பேய் படங்களுக்கென்றே உரித்தான திகில் காட்சிகளை குறைத்து காமெடி காட்சிகளை அதிகம் வைத்து ரசிகர்களை காமெடி  கடலில் மூழ்கடிக்க செய்திருக்கிறார்.

ஆகமொத்தம் பேய் கான்செப்ட் மூலம் சந்தானம் மீண்டும் ஒரு சூப்பரான வெற்றியை பதிவு செய்துள்ளார்.

0 comments:

Pageviews