ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்

 

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரித்து இயக்கிய 'ருத்ரன்' திரைப்படம் சமீபத்தில் பெரும் வெற்றியை பெற்றது. அதே போன்று கதிரேசன் தயாரித்து இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'டைரி'யும் வெற்றிப் படமாகும். இவற்றைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மற்றும் இன்னாசி பாண்டியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் இணைந்துள்ளார். 


விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகிறது. 


பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் இப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் சென்னை, தென்காசி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. 


படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் இன்னாசி பாண்டியன், "இது ஒரு முழு நீள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இந்த கதையை தான் நான் எனது முதல் திரைப்படமாக இயக்க இருந்தேன், ஆனால் ஒரு சில காரணங்களால் அது இயலவில்லை. எனவே இதை எனது இரண்டாவது படமாக தற்போது இயக்குகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றி," என்று கூறினார். 


ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 


இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, 'டிமான்டி காலனி', 

'டைரி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பை வடிவேலு விமல்ராஜ் மேற்கொள்ள, சண்டை பயிற்சிக்கு பேண்ட்டம் பிரதீப் பொறுப்பேற்றுள்ளார். பாடல்களை ஞானகரவேல் எழுத படத்தின் வசனங்களை ஞானகரவேல் மற்றும் இயக்குநர் இன்னாசி பாண்டியன் இணைந்து எழுதி உள்ளனர். கலை இயக்கத்திற்கு ராஜு பொறுப்பேற்க ஷேர் அலி உடைகளை வடிவமைக்கிறார். 


ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.


0 comments:

Pageviews